(Source: ECI/ABP News/ABP Majha)
Jailer Vinayakan : வீட்டைவிட்டு வெளிய வரமுடியல.. ரஜினியுடன் நடித்த அனுபவம்.. வர்மனாக நடித்து அசத்திய விநாயகன்
ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்துடன் நடித்த அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார் நடிகர் விநாயகன்
ஜெயிலர் திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து படத்தில் நடித்த தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார் படத்தில் வில்லனாக நடித்த நடிகர் விநாயகன்.
ஜெயிலர்
நெல்சன் திலீப்குமார் இயக்கி ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், ஜாக்கி ஷ்ராஃப், வசந்த் ரவி, சிவராஜ்குமார், மோகன்லால், விநாயகன், தமன்னா உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆக்ஸ்ட் 10-ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வெற்றி அடைந்திருக்கிறது. இதுவரை மொத்தம் 600 கோடிகளை வசூல் செய்துள்ள ஜெயிலர் திரைப்படம் தமிழ் சினிமாவில் அதிக வசூல் ஈட்டிய திரைப்பட வரிசையில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. முதலாவது இடத்தில் ரஜினியின் 2.0 திரைப்படம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றிக் கொண்டாட்டத்தில் சன் பிக்சர்ஸ்
ஜெயிலர் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதத்தில் பல்வேறு விஷயங்களை முன்னெடுத்து வருகிறது படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம். இதன் பகுதியாக ரஜினிகாந்த், அனிருத், மற்றும் இயக்குநர் நெல்சனுக்கு விலை உயர்ந்த சொகுசு கார்களை பரிசாக வழங்கினார் கலாநிதி மாறன். தற்போது மற்றுமொரு முயற்சியாக ஜெயிலர் படத்தில் நடித்த நடிகர்களின் அனுபவத்தை வரிசையாக வீடியோக்களாக வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு.
வர்மன்
Actor Vinayakan speaks about his iconic character "Varman" and more 😎 Manasilayo!
— Sun Pictures (@sunpictures) September 6, 2023
Mega Blockbuster #Jailer in theatres near you! @rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @Mohanlal @NimmaShivanna @bindasbhidu @tamannaahspeaks @meramyakrishnan @suneeltollywood @iYogiBabu… pic.twitter.com/6P7X1i8E6e
படத்தின் முக்கிய வில்லனாக மலையாள நடிகர் விநாயகன் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். சமூக வலைதளங்களில் இவர் நடித்த காட்சிகளை பகிர்ந்து ரசிகர்கள் ட்ரெண்ட் ஆக்கினார்கள். திமிரு படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் விநாயகன். ஜெயிலர் படத்தில் நடித்த அனுபவத்தைப் பற்றி விநாயகன் என்ன சொல்லி இருக்கிறார் என்று பார்க்கலாம்.
வீட்டைவிட்டு வெளியே வர முடியல..
”நான் படப்பிடிப்பில் இருந்தபோது எனக்கி நெல்சன் மற்றும் சன் பிக்சர்ஸிடம் இருந்து அழைப்பு வந்ததாக” என்னுடைய மேனேஜர் கூறினார். ரஜினிகாந்தின் படம் என்றதும் படத்தில் நடிக்க நான் உடனே சம்மதித்தேன். எப்போது நான் படத்தின் கதையை கேட்கமாட்டேன். நான் நடித்த வர்மன் கதாபாத்திரத்தை மட்டும் எனக்கு சொன்னார் நெல்சன். நெருங்கமுடியாத ஒரு இடத்தில் இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இந்த கதாபாத்திரத்திற்காக நான் ரஜினிகாந்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஜெயிலர் படத்தில் ஒரு வசனம் இருக்கிறது.. ”ஸ்வப்பனத்தில கூட யோசிக்கல சார்” மாதிரிதான் உண்மை நிலையும்.. வர்மன் கதாபாத்திரம் வீட்டைவிட்டு வெளியே கூட செல்ல முடியாத அளவிற்கு இவ்வளவு பெரிய ஹிட் ஆகும் என்று நான் நினைத்துகூட பார்க்கவில்லை.
இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியையும் நான் மிக சந்தோஷமாக நடித்தேன். தூங்கும் காட்சியாக இருந்தாலும், நகம் கடிக்கும் காட்சியாக இருந்தாலும் எல்லா காட்சிகளையும் நான் ரொம்ப சந்தோஷமாகவே நடித்தேன்” என்று விநாயகன் கூறியுள்ளார்.
ஜெயிலர்
ஜெயிலர் திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் அமேசான் பிரைமில் வெளியாக இருக்கிறது. இன்னும் ஜெயிலர் படத்தை திரையரங்குகளில் பார்க்காத மக்கள் நாளை முதல் ஓடிடி தளத்தில் இந்தப் படத்தை ரிப்பீட் மோடில் பார்த்து ரசிக்கலாம்.