Rajini vs Kamal : ரஜினி - கமல் நேரடி போட்டி.. 2005ம் ஆண்டு இதே நாளில் வெளியான சந்திரமுகி - மும்பை எக்ஸ்பிரஸ்!
Rajini vs Kamal : ரஜினிகாந்த் - கமல் என்ற இருபெரும் ஆளுமைகள் 2005ம் ஆண்டு திரைப்படங்கள் மூலம் கடைசியாக மோதி கொண்டனர்.
தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் இரு பெரும் ஜாம்பவான்கள் எப்போதுமே ஆளுமை கொண்டவர்களாக இருப்பார்கள். அந்த வரிசையில் எம்.ஜி.ஆர் - சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் - கமல்ஹாசன், அஜித் - விஜய் இப்படி பல காலமாக இது வழக்கத்தில் இருந்து வருகிறது.
இந்த இரு பெரும் ஆளுமைகள் இடையே நல்ல நட்பு இருந்தாலும் அவர்கள் இருவரின் படங்கள் இடையே போட்டி இருக்கும். அதுவும் அவர்கள் இருவரின் படங்களுக்கும் ஒரே நாளில் வெளியாகும் போது ரசிகர்கள் மத்தியில் ஏற்படும் சலசலப்பு, ஆர்ப்பாட்டம், ஆனந்தம், பரபரப்பு ஹார்ட் பீட்டை எகிற செய்யும். அந்த வகையில் ரஜினிகாந்த் - கமல்ஹாசன் படங்களின் இடையே போட்டி இதுவரையில் 14 முறை நடைபெற்றுள்ளது.
1995ம் ஆண்டு ஒரே நாளில் முத்து மற்றும் குருதிப்புனல் திரைப்படம் வெளியானது. அதிரடியான முத்து படம் பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. ஆனால் புதிய முயற்சிகளை பரிசோதித்து பார்க்க நினைத்த கமலின் 'குருதிப்புனல்' திரைப்படம் முத்து அளவுக்கு வெற்றி பெற முடியவில்லை என்றாலும் சில்வர் ஜூப்லி ஹிட் அடித்தது.
கமல் - ரஜினி படங்கள் ஒரே நாளில் வெளியாவதால் படத்தின் வசூல் பாதிக்கப்படுகிறது என்பதை உணர்ந்த அவர்கள் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்து கொள்ள ஆரம்பித்தனர். சுமார் 10 ஆண்டுகள் இருவரின் படமும் ஒரே நாளில் வெளியாகாமல் இருந்தது. 2005ம் ஆண்டு ரஜினிகாந்தின் 'சந்திரமுகி' மற்றும் கமலின் 'மும்பை எக்ஸ்பிரஸ்' திரைப்படம் ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் வெளியாகின.
'பிளாக் ஹுமர்' ஜானரில் டிஜிட்டல் காமரா பயன்படுத்தி உருவான 'மும்பை எக்ஸ்பிரஸ்' திரைப்படம் தமிழ் சினிமாவுக்கு புதுசு. கமல், பசுபதி, வையாபுரி, மனிஷா கொய்ராலா, நாசர் என பலர் நடித்த இப்படம் புதிய முயற்சியாக இருந்தாலும் வணீக ரீதியாக தோல்வி அடைந்தது.
அதே சமயம் பி.வாசு இயக்கத்தில், மலையாள ‘மணிச்சித்திர தாளு’ படத்தின் தமிழ் ரீமேக் படமாக உருவானது 'சந்திரமுகி' திரைப்படம். ரஜினிகாந்த், ஜோதிகா, நாசர், நயன்தாரா, வடிவேலு, பிரபு, வினீத், மாளவிகா என மிகப்பெரிய திரை பட்டாளம் நடித்திருந்த சந்திரமுகி திரைப்படம் பெரும்பாலான திரையரங்குகளில் 200 நாட்களுக்கும் மேல் ஓடியது.
இருவரும் இணைந்து படங்கள் மூலமாக மோதிக்கொண்டது அதுவே கடைசி முறை. அவர்கள் இடையே அன்றுபோலவே இன்றும் மாறாத நட்பு தொடர்வது இன்றைய தலைமுறையினர் நடிகர்களுக்கு ஒரு பாடமாக இருக்கிறது.
எந்த மேடை ஆனாலும் ஒரு நாளும் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுத்ததே கிடையாது. ரஜினி - கமல் படங்கள் மீண்டும் ஒரே நாளில் வெளியாகாதா என மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.