Tamilisai Sholinganallur constituency : சோழிங்கநல்லூரை குறிவைக்கும் தமிழிசை.! பாஜகவிற்கு விட்டுக்கொடுக்கும் இபிஎஸ்.? காரணம் என்ன.?
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் 7 தொகுதிகளை பாஜக குறிவைத்துள்ள நிலையில், தமிழிசை சோழிங்கநல்லூர் தொகுதியில் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தலுக்கு தயாராகும் அரசியல் கட்சிகள்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைக்க திமுக ஸ்கெட்ச் போட்டு காய் நகர்த்தி வருகிறது. அதற்கு ஏற்ப கூட்டணியையும் பலப்படுத்தி வருகிறது. அதே நேரம் திமுகவின் பிளானிற்கு செக் வைக்கும் வகையில் அதிமுகவும் கூட்டணியை வலிமையாக முயற்சித்து வருகிறது. இதற்கு முதல்கட்டமாக பாஜகவை மீண்டும் கூட்டணியில் இணைத்துள்ள அதிமுக, அடுத்தாக பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளோடும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. விரைவில் கூட்டணி தொடர்பாக முக்கிய முடிவு வெளியாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையை குறிவைக்கும் பாஜக
கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் 4 இடங்களில் பாஜக வெற்றி பெற்று பல வருடங்களுக்கு பிறகு கோட்டைக்குள் நுழைந்தது. இந்த முறை இரட்டை இலக்கத்தை எட்ட வேண்டும் என திட்டமிட்டுள்ளது. இதற்கு ஏற்ப கடந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதியை பட்டியலிட்டு கணக்கெடுத்துள்ளது. இதன் படி சென்னையில் உள்ள 14 தொகுதிகளில் 7 முதல் 8 தொகுதிகளை பாஜக குறிவைத்துள்ளது. இந்த வகையில் விருகம்பாக்கம், தி.நகர், மயிலாப்பூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர், துறைமுகம் உள்ளிட்ட தொகுதிகள் பாஜகவின் பட்டியலில் உள்ளது.
சோழிங்கநல்லூருக்கு பல்டி அடிக்கும் தமிழிசை
எனவே கடந்த முறை பாஜக - அதிமுக கூட்டணியில் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த தமிழிசை சவுந்திரராஜன், இந்த முறை சோழிங்கநல்லூர் தொகுதியை தேர்ந்தெடுத்துள்ளார். இதற்கு ஏற்ப அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சோழிங்கநல்லூர் தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது தமிழிசை சவுந்திரராஜனும் கலந்து கொண்டார். எனவே இந்த முறை எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற திட்டத்தோடு சோழிங்கநல்லூர் தொகுதிக்கு தமிழிசை தேர்ந்தெடுத்து காய் நகர்த்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வகையில் கடந்த 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது தென் சென்னைக்கு உட்பட்ட சோழிங்கநல்லூர் தொகுதியில் திமுக கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட தமிழச்சி தங்கபாண்டியன் சுமார் ஒரு இலட்சத்து 77 ஆயிரம் வாக்குகளைப் பெற்றிருந்தார். அதிமுக 63ஆயிரம் வாக்குகளையும், பாஜக சார்பில் போட்டியிட்ட தமிழிசை 81 ஆயிரம் வாக்குகளையும் பெற்றிருந்தது.
தமிழிசையின் திட்டம்
எனவே அதிமுகவை விட அதிக வாக்குகள் பெற்று பாஜக இரண்டாம் இடத்தை பிடித்திருந்தது. அந்த வகையில் சட்டமன்ற தேர்தலின் போது அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடுவதால் வெற்றி வாய்ப்பு ஈசியாகிவிடும் என திட்டமிட்டு சோழிங்கநல்லூர் தொகுதியை தமிழிசை குறிவைத்துள்ளார். மேலும் அதிமுக கூட்டணியில் தேமுதிக வரும்பட்சத்தில் விருகம்பாக்கம் தொகுதி தேமுதிகவிற்கு ஒதுக்க அதிக வாய்ப்புள்ளது.
எனவே தற்போதே வெறு தொகுதியை திட்டமிட்டு தமிழிசை தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழிசையின் இந்த திட்டத்தால் ஏற்கனவே அங்கு அதிமுக எம்எல்ஏவாக இருந்த கே.பி.கந்தன் அதிர்ச்சி அடைந்துள்ளார். எனவே தேர்தல் நெருக்கத்தில் அரசியலில் என்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.





















