Lal Salaam: ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பை அப்போ தவற விட்டேன்: மனம் திறந்த நடிகை நிரோஷா!
Lal Salaam: "ரஜினிகாந்த் அவர்களுடன் நடிக்க ஏற்கெனவே வாய்ப்பு வந்தது. கடைசி நேரத்தில் அது நடைபெறாமல் போனது” என வருத்தப்பட்ட நிரோஷா.
Lal Salaam: ரஜினியுடன் நடிக்க வாய்ப்பு வந்தும் அது நடக்காமல் போனதால், திரை வாழ்க்கை முழுமை பெறாது என வருத்தப்பட்டதாக நடிகை நிரோஷா தெரிவித்துள்ளார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ள படம் லால் சலாம். லைகா நிறுவனம் தயாரித்துள்ள லால் சலாம் படம் வரும் 9ஆம் தேதி வெளியாக உள்ளது. படத்தில் முக்கிய ரோலில் விஷ்ணு விஷால், விக்ராந்த், நிரோஷா, ஜீவிதா, கே.எஸ்.ரவிகுமார், செந்தில், தம்பி ராமையா, விவேக் பிரசன்னா என பலர் நடித்துள்ளனர். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இரண்டு நாட்களில் படம் ரிலீசாக உள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றது.
அதைத் தொடர்ந்து சென்னையில் படக்குழுவின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், விக்ராந்த், நிரோஷா, செந்தில், தம்பி ராமையா, விஷ்ணு விஷால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது பேசிய நிரோஷா, “ரஜினிகாந்த் அவர்களுடன் நடிக்க ஏற்கனவே வாய்ப்பு வந்தது. கடைசி நேரத்தில் அது நடைபெறாமல் போனதால் எனது திரை வாழ்க்கை ஒரு முழுமை பெறாமல் இருந்ததாக நினைத்தேன். ஆனால், இந்தப் படம் மூலம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எனக்கு ஒரு வாய்ப்பை கொடுத்துள்ளார். ரஜினியுடன் இணைந்து நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஒரு இயக்குனராக தனக்கு என்ன தேவையோ அதை மிகவும் தெளிவுடன் நடிகர்களிடம் இருந்து பெற்றுக் கொண்டார்” என பேசியுள்ளார்.
தொடர்ந்து பேசிய செந்தில், அருமையான கதையை இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உருவாக்கி உள்ளதாகவும், அவர் கதையை கூறும் பொழுது மிகவும் உணர்வுபூர்வமாக இருந்ததாகவும், படத்தில் மிகவும் ஒத்துழைப்பு கொடுத்து நடித்த சக கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் பேசியுள்ளார். தம்பி ராமையா பேசும்போது, “தமிழ்நாட்டிலும் இந்து, முஸ்லீம், கிறிஸ்துவம் என மதங்கள் மூன்றாக இருக்கலாம், ஆனால் மனித மனங்கள் ஒன்றாக இருக்கிறது. விஷ்ணு ரங்கசாமியின் கதைக்கு கிரிக்கெட்டை மையப்படுத்தி சிறப்பான திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். குடும்பத்துடன் வந்து ரசிக்கும் ரசிகர்களுக்கான உணர்வுப் பூர்வமான காட்சிகளுடன் படம் உருவாகி உள்ளது” என கூறியுள்ளார்.
விக்ராந்த் பேசும்போதும், படப்பிடிப்பின்போது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பு தொடர்பாக நிறைய ஆலோசனை கொடுத்து ஊக்கமளித்ததாக தெரிவித்தார். நடிகர் விஷ்ணு விஷால் பேசும்போது, “'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் அவர்களுடன் பலரும் நடிக்க ஏங்கிக் கொண்டிருக்கும்பொழுது அவர் நடிக்கும் படத்தில் ,அவருக்கு கீழ் ஒரு கதையின் நாயகனாக நடிப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” எனப் பேசியுள்ளார்.
மேலும் படிக்க: Aishwarya Rajinikanth: அரசியல் பேசி தான் எங்க அப்பா படம் ஓடணும் இல்ல - கடுப்பான இயக்குநர் ஐஸ்வர்யா!
Tamilaga Vettri Kazhagam: விஜய் கட்சி பற்றி என்ன நினைக்கிறீங்க? - ரஜினி சொன்னது என்ன தெரியுமா?