பெண்ணை அனுமதி இல்லாமல் ஃபாலோ பண்ண ஹீரோ.. ‘மின்னலே' படத்தால் 22 வருஷத்துக்கு அப்புறம் சர்ச்சை!
கெளதம் மேனன் இயக்கிய மின்னலே திரைப்படத்தின் இந்தி ரீமேக்கில் கதாநாயகியாக நடித்த தியா மிர்ஸா படத்தில் மாதவனின் கதாபாத்திரம் தன்னை அச்சுறுத்தியதாகக் கூறியுள்ளார்.
மின்னலே
கெளதம் வாசுதேவ் மேனன் இயக்குநராக அறிமுகமாகிய திரைப்படம் ‘மின்னலே’ (Minnale). கடந்த 2001ஆம் ஆண்டு வெளியாகிய இந்தப் படத்தில் மாதவன் ரீமா சென், விவேக், அப்பாஸ், நாகேஷ் உள்ளிட்டவர்கள் நடித்திருந்தார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார்.
மின்னலே திரைப்படம் அப்போதைய இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. தமிழில் இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்தியில் ‘ரெஹ்னா ஹே தேரே தில் மே’ (Rehna Hai Tere Dil Mein) என்கிற டைட்டிலில் வெளியானது. தமிழில் கதாநாயகனாக நடித்த ஆர். மாதவன், இந்தியிலும் கதாநாயகனாக நடித்தார். ரீமா சென்னுக்கு பதிலாக தியா மிர்ஸா இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்தார். அப்பாஸ் நடித்த கதாபாத்திரத்தில் சைஃப் அலிகான் நடித்தார்.
படத்தில் எழுந்த சர்ச்சை
ரீனாவைப் (தியா மிர்ஸா) பார்க்கும் மாதவன் அவர் மீது காதல் கொள்கிறார். இதனால் அவரை பின் தொடர்ந்து அவரைப் பற்றிய எல்லாத் தகவல்களையும் தெரிந்துகொள்கிறார். அதே நேரத்தில் ரீனா திருமணம் செய்துகொள்ள இருக்கும் ராஜீவ்வாக நடித்து (சைஃப் அலிகான்) ஏமாற்றி அவரைக் காதலில் விழ வைக்கிறார் மாதவன். மாதவன் ராஜீவாக நடித்து ஏமாற்றியது ரீனாவுக்கு தெரியவரும்போது தவறான எண்ணத்தில் தான் ரீனாவை ஏமாற்றவில்லை என்றும் அப்படி நினைத்திருந்தால் தான் ரீனாவிடம் தவறாக நடந்துகொண்டிருக்க முடியும் என்று கூறுகிறார்.
இந்தக் காட்சி படம் வெளியானபோதே இந்தியில் விமர்சனங்களைப் பெற்றது. வசீகரா பாடலின் இந்தி வெர்ஷனான ஸரா ஸரா.. ரொமான்ஸ் ஆகியவை இப்போது வரை வரவேற்பைப் பெற்றாலும், இந்தக் காட்சி தொடர்ந்து விமர்சனங்களைப் பெற்று வருகிறது. ஒரு பெண்ணை அவளுக்குத் தெரியாமல் ஃபாலோ செய்வது எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது என்று விமர்சகர்கள் கூறினார்கள்.
தியா மிர்ஸா கருத்து
இச்சூழலில், இது தொடர்பாக படத்தில் கதாநாயகியாக நடித்த தியா மிர்ஸா (Dia Mirza) தற்போது மனம் திறந்துள்ளார். இது குறித்து தியாவிடம் கேட்கப்பட்ட போது அவர் அளித்துள்ள பதில் இது: “மாதவனின் கதாபாத்திரம் ரீனாவை பின்தொடரும்போது அது என்னை மனதார பதட்டத்துக்கு உள்ளாக்கியது. இத்தனைக்கும் மாதவனின் கதாபாத்திரம் நல்ல எண்ணம் கொண்ட ஒரு கதாபாத்திரம் அவர் ரீனாவை உண்மையாகக் காதலிப்பார். ஆனால் சில நேரங்களில் இந்த மாதிரியான படங்கள் வழியாக ஒரு பெண்ணை அவரது அனுமதி இல்லாமல் பின் தொடர்வது சரி என்கிற புரிதல் சமூகத்தில் ஏற்பட்டு விடுகிறது” என்று அவர் கூறியுள்ளார்.
அதே நேரத்தில் படத்தில் ரீனா திருமணம் செய்துகொள்ள இருந்த ராஜீவ்வின் கதாபாத்திரம் நல்லவராக இருந்தும் அவரை தேர்வு செய்யாததற்கு காரணம் என்ன என்று அவரிடம் கேட்கப்பட்டபோது. ”ராஜீவ்வின் கதாபாத்திரம் எல்லா வகையிலும் சிறந்த ஒரு மனிதர் தான். ஆனாலும் ஏன் படத்தில் ரீனா அவரை தேர்வு செய்யவில்லை என்பதை நான் பல முறை யோசித்திருக்கிறேன்.
ஆனால் அதுதான் இதில் சுவாரஸ்யமான விஷயம். ஒரு படம் நமக்கு ஒரு கதையில் ஒரு உண்மையை சொல்கிறது அதே நேரத்தில் இன்னொரு படம் அதே கதையில் வேறு பக்கத்தை சொல்கிறது. அந்த படத்தின் அடுத்த பாகம் எடுக்கப்பட்டால் இப்போது அந்தக் கதாபாத்திரங்கள் என்ன மாதிரியான வாழ்க்கை வாழ்வார்கள் என்பதை தெரிந்துகொள்ள எனக்கு ஆர்வமாக இருக்கிறது” என்று தியா மிர்ஸா கூறியுள்ளார்