Pushpa Actor : ஜெயிலுக்கு போன துணை நடிகரை 20 லட்சம் கொடுத்து மீட்ட புஷ்பா படக்குழு... வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!
Jagadeesh Prathap Bhandari : கைதான புஷ்பா பட துணை நடிகரை ஜாமீனில் வெளியில் கொண்டு வந்தனர் புஷ்பா படக்குழு. காரணம் என்ன?
நடிகர் அல்லு அர்ஜுன், நடிகை ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் நடிப்பில் 2021ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'புஷ்பா : தி ரைஸ்'. இப்படம் திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன் அப்படத்தின் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகின. கிட்டத்தட்ட 400 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
அடுத்த ஆண்டு ஆகஸ்ட் ரிலீஸ் :
சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துவிட்டது என ஏற்கனவே தகவல் வெளியானது. அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15ம் வெளியாகும் என்ற அதிகாரபூர்வமான தகவலை தெரிவித்தது படக்குழு.
இப்படத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் உடன் துணை கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் ஜெகதீஷ் பிரதாப் பண்டாரி. இவர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் புஷ்பா படக்குழு பல லட்சம் செலவு செய்து அவரை ஜாமீனில் எடுத்துள்ளது. இந்த தகவல் சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாகி வருகிறது. இந்த விவகாரம் குறித்து விரிவான தகவலை பார்க்கலாம்.
கைதான புஷ்பா பட நடிகர்:
துணை நடிகர் ஜெகதீஷ் பிரதாப் பண்டாரிக்கும் துணை நடிகை ஒருவரும் பல ஆண்டுகளாக உறவில் இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துள்ளனர். இருப்பினும் ஜெகதீஷ் பிரதாப் பண்டாரிக்கு அந்த துணை நடிகையுடன் சேர்ந்து வாழ வேண்டும் என விருப்பம் இருந்துள்ளது. அவருடன் சேர்ந்து வாழ்வதை நடிகை விரும்பவில்லை.
இந்த நிலையில் துணை நடிகைக்கு வேறு ஒரு நபருடன் பழக்கம் இருந்ததால் அவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோவை வைத்து நடிகையை தொடர்ந்து மிரட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த அந்த துணை நடிகை கடந்த மாதம் 29ம் தேதி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் இந்த தற்கொலைக்கு நடிகர் ஜெகதீஷ் பிரதாப் பண்டாரிதான் காரணம் என துணை நடிகையின் தந்தை போலீசில் புகார் கொடுக்க ஜெகதீஷ் பிரதாப் பண்டாரி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஜாமீனில் மீட்ட படக்குழு :
புஷ்பா 2 படப்பிடிப்பு மிகவும் மும்மரமாக நடைபெற்று வருவதால் நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் ஜெகதீஷ் பிரதாப் பண்டாரி இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படாமல் தாமதமானது. வேறு ஒரு டூப் நடிகரை வைத்து காட்சியை எடுத்து முடிக்கலாம் என திட்டமிடப்பட்டது. ஆனால் அது முழு படத்தையும் கெடுத்துவிடும் என்பதால் நடிகர் ஜெகதீஷ் பிரதாப் பண்டாரியை ரூபாய் 20 லட்சம் கொடுத்து ஜாமீனில் எடுத்துள்ளது புஷ்பா படக்குழு. இந்த விவகாரம் தற்போது சோஷியல் மீடியாவில் மிகவும் வைரலாக பேசப்பட்டு வருகிறது. பலரும் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்து வருவதால் இணையத்தில் இது ஒரு பேசு பொருளாக மாறியுள்ளது.