`விஜயகாந்தின் பாணியில் விஜய்!’ - தயாரிப்பாளர் டி.சிவா சொல்லும் நெகிழ்ச்சி சம்பவங்கள்!
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் டி.சிவா சமீபத்திய நேர்காணல் ஒன்றில் நடிகர் விஜயகாந்த் குறித்த தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். இவர் விஜயகாந்த் நடித்த சூப்பர்ஹிட் திரைப்படங்களைத் தயாரித்தவர்.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் டி.சிவா சமீபத்திய நேர்காணல் ஒன்றில் நடிகர் விஜயகாந்த் குறித்த தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். இவர் விஜயகாந்த் நடித்த சூப்பர்ஹிட் திரைப்படங்களான `சொல்வதெல்லாம் உண்மை’, `பூந்தோட்ட காவல்காரன்’, `பாட்டுக்கு ஒரு தலைவன்’ முதலான திரைப்படங்களைத் தயாரித்தவர்.
விஜயகாந்த் பற்றி பேசியுள்ள தயாரிப்பாளர் சிவா, `வாங்கிய சம்பளத்திற்கு ஏற்றவாறு தன்னுடைய 175 திரைப்படங்களிலும் பணியாற்றிய விஜயகாந்த் செய்திருப்பது தான் உண்மையான தர்மம். அவரால் எந்த தயாரிப்பாளரும் கஷ்டப்பட்டதில்லை. அவருடைய வாழ்க்கை என்பதே ஒரு பெரிய வரலாறு..அவரிடம் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும். எஸ்.ஏ.சந்திரசேகர் தன் மகன் விஜயை வளர்த்ததன் ஃபார்முலா விஜயகாந்திடம் இருந்து எடுத்த ஒன்று. இன்று தமிழ்நாட்டில் ரசிகர் மன்றங்களை அதிகளவில் பலமாக வைத்திருப்பது நடிகர் விஜய். அவரது ரசிகர் மன்றங்கள், விஜயகாந்த் ரசிகர் மன்றங்களின் அதே ஃபார்மேட்டைப் பின்பற்றியதால் மட்டுமே வளர்ந்திருக்கின்றன’ என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர், `எஸ்.ஏ.சந்திரசேகர் சார் விஜயகாந்த் கூடவே இருந்ததால் அவருக்குத் தெரியும். விஜயுடைய முதல் திரைப்படத்தில் விஜயகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்தார். அதே போல, சூர்யா படத்திலும் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். இதே போல பலருக்கும் அவர் நடித்துக் கொடுத்திருக்கிறார். இதில் எந்த தயக்கமும் காட்ட மாட்டார். புதிய நடிகர்கள் மேலே வரட்டும் என்று கூறுவார். அவருடைய ரசிகர் மன்றங்கள் கட்டுக்கோப்பாக இருக்கும். ராணுவ ஒழுங்கில் அவற்றை நடத்தி வந்தார் விஜயகாந்த். ரஜினி ரசிகர் மன்றம், விஜயகாந்த் ரசிகர் மன்றம், விஜய் ரசிகர் மன்றம்.. இந்த மூன்று மன்றங்கள் மட்டுமே சரியான நிர்வாக முறை கொண்டு இயங்குகின்றன. பிற நடிகர்கள் ரசிகர் மன்றங்கள் வைத்திருந்தாலும், அவற்றின் நிர்வாக முறை இவ்வாறு இருக்காது. அதனால் விஜயகாந்த் தான் இவற்றிற்கு ரோல் மாடல்.’ என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், `விஜயகாந்த் மிகவும் நியாயமான மனிதர். இரவு எத்தனை மணி வரை விழித்திருந்தாலும், காலை 6 மணிக்கு உதவியாளர் எழுப்பினால், 7 மணிக்குத் தயாராகி கிளம்பி விடுவார். அவருடைய இந்த அர்ப்பணிப்புக்காகவும், உழைப்புக்காகவும் தான் தன் வாழ்நாளில் அசைக்க முடியாத ஹீரோவாக வலம் வந்தார். அவருடன் பயணித்த யாரும் அவர் அளவுக்கு வரவில்லை. தான் அரசியலுக்கு வருவதற்கு முன்பு வரை அவர் ஹீரோ தான். அதனால் அவர் எந்த இடத்திலும் அவர் இறங்கியதில்லை.’ என்று கூறியுள்ளார்.
அதனையடுத்து, `அரசியலுக்கு வந்த பிறகு, தினமும் பல்வேறு பிரச்னைகளில் ஈடுபடத் தொடங்கினார். சினிமாவில் இருந்த வரை, அவரது வாழ்க்கை வேறு மாதிரியாக இருந்தது. சினிமாவில் நடிப்பார். அவரது நண்பர்கள் வந்தால் சந்திப்பார். அவரது சொத்து, வரி, செலவு, வரவு எதுவுமே அவருக்குத் தெரியாது. எதிலும் தலையிட்டதும் இல்லை. அவருடைய பாக்கெட்டில் பணம் கூட இருக்காது. ஒரு நூறு ரூபாய் கூட வைத்திருக்க மாட்டார். பணக்கட்டைக் கொடுத்தால் எண்ணிப் பார்க்க கூட அவருக்குத் தெரியாது. அப்படியொரு இயல்பான மனிதரைத் தமிழ்நாடு போன்ற மாநிலத்தின் அரசியலில் உள்ளே தள்ளி, அவர் மீது கடுமையான அழுத்தத்தை அளித்துவிட்டார்கள். அரசியலுக்கு வராமல் இருந்திருந்தால் மேலும் பெரிய ஆளுமையாகி இருப்பார். அரசியலுக்கு வந்தும் அவர் எம்ஜிஆருக்குப் பிறகு ஒரு மாற்று சக்தியாக மக்களிடம் சென்று சேர்ந்தவர் இவர் தான்’ என்று கூறி முடித்துக் கொண்டார்.