(Source: ECI/ABP News/ABP Majha)
இளையராஜாவைக் கவர்ந்த கதை.. சண்டையை மறந்து பாராதிராஜாவிடம் பேச முயற்சி.. தயாரிப்பாளர் பகிர்ந்த தகவல்!
Raasaiyya :ராசய்யா ஸ்க்ரிப்ட் பெரிய அளவில் பேசப்படாமல் போக என்ன காரணம் என தயாரிப்பாளர் டி. சிவா சொன்ன தகவல்
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு தயாரிப்பாளராக வலம் வந்தவர் டி.சிவா. இவர் இந்து, காதலன் உள்ளிட்ட ஏராளமான படங்களை தயாரித்துள்ளார். அவர் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் ராசய்யா படம் உருவானதற்கு பின்னணியில் இருந்த கதை பற்றி பேசி இருந்தார்.
பிரபுதேவா, ரோஜா, விஜயகுமார், ராதிகா, வடிவேல், தலைவாசல் விஜய் உள்ளிட்ட ஏராளமானோரின் நடிப்பில் 1995ஆம் ஆண்டு வெளியான படம் ராசய்யா. இப்படம் குறித்து டி. சிவா பேசுகையில் "இது சுந்தரம் மாஸ்டர் மூலமாக தான் வந்தது. அவர் ஆர்.செல்வராஜிடம் ஏற்கெனவே கதையை கேட்டுவிட்டார். அவரின் தம்பி கே.கண்ணன் தான் இயக்கப் போவதாகக் கூறியுள்ளார். கேமரா மேன் முதற்கொண்டு அவர்கள் ஒரு டீமாக சேர்ந்து விட்டார்கள். இதை நீ பண்ணுவதாக இருந்தால் நீ பண்ணு என என்னிடம் சொல்லிவிட்டார்.
இந்தப் படத்துக்காக நான் இளையராஜா சாரிடம் சென்று படத்துக்கு இசைமைப்பதற்காக கேட்டேன். அவர் செல்வராஜை வந்து கதை சொல்ல சொன்னார். அவரும் வந்து கதை சொன்ன பிறகு இளையராஜா சார் என்னைக் கூப்பிட்டார். இவ்வளவு பெரிய ஸ்கிரிப்ட் பண்ணி இருக்கான். யார் இந்தக் கதையை இயக்கப்போறது என என்கிட்டே கேட்டார். நான் செல்வராஜோட தம்பி கண்ணன்னு சொன்னதும், “அவர் இருக்கட்டும் அவர் வேற ஏதாவது படத்தை இயக்கட்டும். இந்த கதையை அவ்வளவு ஈஸியா எல்லாம் எடுத்திட முடியாது. பாரதிராஜா எடுத்தா தான் நல்லா இருக்கும். அவனால மட்டும் தான் எடுக்க முடியும். அவனுக்கு நான் இசையமைக்க கூடாது என முடிவு எடுத்து இருந்தேன், இருந்தாலும் பரவாயில்லை உனக்காக நான் இந்த படத்துக்கு இசையமைக்கிறேன் அவனை எடுக்க சொல்லு” என சொல்லிவிட்டார். அந்த சமயத்தில் பாரதிராஜா - இளையராஜா இரண்டு பேருக்கும் ஏதோ பிரச்சினை. அதனால பேசாம இருந்தாங்க.
தலைகால் புரியாத சந்தோஷத்துல போய் மாஸ்டர் கிட்ட சொன்னேன். ஆனா அவரோ முடியாது நான் வாக்கு கொடுத்துட்டேன். கண்ணன் தான் இயக்கணும் என சொல்லிட்டார். அவரை கன்வின்ஸ் பண்ண என்னால முடியல. இளையராஜா சார் கிட்ட போய் இதை சொன்னதும் சரி இனிமே அவங்க இஷ்டம் என சொல்லிட்டார்.
சண்டை போட்டு இருந்த இளையராஜாவே இறங்கி வந்து பாரதிராஜாவை இயக்க சொல்லு என்றால், அந்தக் கதை எந்த அளவுக்கு அவருக்கு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும். செல்வராஜ் கதையில் என்ன கொண்டு வந்தாரோ அது ஸ்க்ரீனில் வரவில்லை. ஆளாளுக்கு வீம்பு பிடித்து நல்ல திரைக்கதையை கொன்று விட்டார்கள். இல்லையேல் கிழக்கு சீமையிலே படம் அளவுக்கு மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும்" எனப் பேசி இருந்தார் டி. சிவா.