Nayanthara Movie: இயக்குநரும் நடிகரும் மாஸ்.. வெறித்தனமான கூட்டணியில் இணையும் நயன்தாரா?
இப்படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு கேரளாவின் முக்கியப் பண்டிகையான ஓணத்தின் போது வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் பிரித்திவிராஜ் அடுத்து இயக்குநர் அல்போன்ஸ் புத்திரனுடன் கைகோக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் நாயகியாக நயன் தாராவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை போவதாகவும் கூறப்படுகிறது
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய மலையாள நடிகர் பிரித்திவிராஜ், அடுத்து பிரேமம் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரனுடன் கைகோக்க உள்ளதாக தகவலை கசியவிட்டார். ஆனாலும் இது நேர்காணலில் கூறப்பட்ட ஒரு தகவல் தாம். இதுவரை அதுகுறித்து அதிகாரபூர்வ தகவல் வெளியாகவில்லை. இந்தப்படம் ஏற்கெனவே தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த தகவலில் மேலும் ஒரு அப்டேட் கசிந்துள்ளது. அது கதாநாயகி குறித்தானது.
பிரித்திவிராஜ்- அல்போன்ஸ் இணையும் படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதற்காக நயன் தாராவிடம் பேச்சுவார்த்தை போவதாகவும் சொல்லப்படுகிறது. இந்த தகவல் உறுதி என்றால் பிரித்திவிராஜ் - நயன்தாரா ஜோடியை முதல்முறையாக திரையில் ரசிகர்கள் காணலாம். இப்படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு கேரளாவின் முக்கியப் பண்டிகையான ஓணத்தின் போது வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அல்போன்ஸ் புத்திரன் இயக்கும் இப்படத்தை பிரித்திவிராஜின் தயாரிப்பு நிறுவனமே தயாரிக்கும் என கூறப்படுகிறது. பிரித்திவிராஜின் தயாரிப்பு நிறுவனத்தை அவரது மனைவி சுப்ரியா மேனன் நிர்வகித்து வருகிறார்.
பிரித்திவிராஜ் நடிப்பில் சமீபத்தில் மலையாளத்தில் வெளியானது கோல்டு கேஸ் மற்றும் குருதி.இந்த இரண்டு படங்களுமே ஓடிடியில் தான் வெளியானது. பிருத்விராஜ் மேனன் தயாரித்து மனு வாரியர் இயக்கியுள்ள குருதி சமீபத்தில் வெளியானது. இந்தப் படம் சமூகத்தின் மிகமுக்கியப் பிரச்னையை பேசுகிறது. இந்தத் திரைப்படம் பிருத்விராஜின் மூன்றாவது தயாரிப்பு ஆகும். முதலில் திரையரங்குகளில் வெளியாவதாக இருந்த நிலையில் இரண்டாம் அலை காரணமாக பிரைமில் இந்தத் திரைப்படம் வெளியிடப்பட்டது.
அடுத்தப்படியாக, பஹீரின் நீலவெளிச்சம் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் ஒரு திரைப்படம் உள்ளிட்ட சில படங்களில் தற்போது பிரித்திவிராஜ் நடித்து வருகிறார். இதற்கிடையே மோகன்லாலை வைத்து திரைப்படம் ஒன்றையும் இயக்கவுள்ளார். ஏற்கெனவே மோகன்லாலை வைத்து லூசிபையர் திரைப்படத்தை பிரித்திவிராஜ் இயக்கி இருந்தார். அது சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.
நயன்தாராவைப் பொருத்தவரை, அவருக்கு சமீபத்தில் நெற்றிக்கண் திரைப்படம் வெளியானது.நயன்தாரா மீண்டும் ஒரு சிறப்பான திரைப்படத்தை கொடுத்திருப்பதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். ஆனாலும் லாஜிக் மீறல்கள், படத்தின் நீளம், தொய்வான திரைக்கதை என படத்துக்கு நெகட்டிவ் விமர்சனங்களும் எழுந்தன. அடுத்ததாக காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

