Prakash Raj on Jai Bhim: காந்தியைக் கொன்றவர்கள் எப்படி விருது தருவார்கள்.. ஜெய் பீம் படத்தில் நடித்த பிரகாஷ் ராஜ் கடும் தாக்கு!
‘ஜெய் பீம்’ திரைப்படம், ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக ஒரு விருதினைக் கூட வெல்லாதது தமிழ் திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
2021 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் திரைப்படங்களுக்காக 69ஆவது தேசிய விருதுகள் நேற்று முன் தினம் (ஆக.24) அறிவிக்கப்பட்டது.
இதில் தமிழ் சினிமாவின் ‘கடைசி விவசாயி’ படத்துக்கு இரண்டு விருதுகள், ‘இரவின் நிழல்’ படத்தில் இடம்பெற்ற ‘மாயவா தூயவா’ பாடலுக்காக ஸ்ரேயா கோஷலுக்கு தேசிய விருதும், கருவறை ஆவணப்படத்துக்காக ஸ்ரீகாந்த் தேவாவுக்கு தேசிய விருதும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் 2021ஆம் ஆண்டு சூர்யா, மணிகண்டன், அனுமோல், ரஜீஷா விஜயன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியாகி பெரும் பாராட்டுகளைப் பெற்ற ‘ஜெய் பீம்’ திரைப்படம், ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக ஒரு விருதினைக் கூட வெல்லாதது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா காலத்தில் அமேசான் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியான ‘ஜெய் பீம்’ திரைப்படம் சர்ச்சைகள் ஒருபுறம், பாசிட்டிவ் விமர்சனங்கள் ஒருபுறம் என நாடு முழுவதும் பேசுபொருளானது.
மற்றொருபுறம் இருளர் இன மக்களின் வாழ்க்கை போராட்டம், விளிம்பு நிலை சமூகம் எதிர்கொள்ளும் அவலங்கள், போலீஸ் காவலில் நிகழும் அத்துமீறல்கள் என மக்களின் குரலாக ஒலித்த இப்படம் அனைத்து தரப்பு மக்களிடன் பாராட்டுகளையும் அள்ளி, பல்வேறு திரைப்படத் திருவிழாக்களிலும் திரையிடப்பட்டு பாராட்டுகளைக் குவித்தது.
இந்நிலையில், இந்தியாவில் சினிமாவுக்கு வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றான தேசிய விருதை ‘ஜெய் பீம்’ திரைப்படம் குவிக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு மாறாக இப்படத்துக்கு ஒரு விருது கூட அறிவிக்கப்படவில்லை. இது திரைத்துறையினர், ரசிகர்கள் என அனைத்து தரப்பினர் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், பலரும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் ஜெய் பீம் படத்தில் நடித்த நடிகர் பிரகாஷ் ராஜ் இப்படத்துக்கு விருது கொடுத்தது குறித்து கண்டனம் தெரிவித்தும், பாஜக அரசை சாடியும் பதிவிட்டுள்ளார்.
“காந்தியைக் கொன்றவர்கள், இந்திய அரசியலமைப்பை தந்த அம்பேத்கரின் சமத்துவ
தத்துவத்தை கொல்ல முயற்சிப்பவர்கள் ஜெய் பீம் திரைப்படத்திற்கு எப்படி விருது தருவார்கள்?” என நடிகர் பிரகாஷ் ராஜ் ட்வீட் செய்துள்ளார்.
மேலும், "ஜெய் பீம் என்றால் ஒளி, ஜெய் பீம் என்றால் அன்பு, ஜெய் பீம் என்றால் இருளில் இருந்து ஒளியை நோக்கிய பயணம், ஜெய் பீம் என்றால் கோடிக்கணக்கான மக்களின் கண்ணீர் துளிகள்” எனும் படத்தில் இடம்பெற்ற மராத்தி கவிதையையும் பிரகாஷ் ராஜ் பகிர்ந்துள்ளார்.
காந்தியைக் கொன்றவர்கள், இந்திய அரசியலமைப்பை தந்த அம்பேத்கரின் சமத்துவ
— Prakash Raj (@prakashraaj) August 26, 2023
தத்துவத்தை கொல்ல முயற்சிப்பவர்கள் #Jaibhim திரைப்படத்திற்கு எப்படி விருது தருவார்கள்?#Justasking pic.twitter.com/8IZgOLKgPL
முன்னதாக ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், இயக்குநர்கள் சுசீந்திரன், நானி, அசோக் செல்வன் உள்ளிட்ட நடிகர்களும் ஜெய் பீம் படத்துக்கு விருது கொடுக்காதது பற்றி அதிருப்தி தெரிவித்து பதிவிட்டிருந்தனர். மேலும் சார்பட்டா பரம்பரை, கர்ணன் உள்ளிட்ட சிறந்த தமிழ் படங்களுக்கும் உள்நோக்கத்துடன் விருதுகள் வழங்கப்படவில்லை என இணையத்தில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.