Pennin Manathai Thottu: விஜய்க்கு பதிலாக பிரபுதேவா: எவர்க்ரீன் காதல் கதை, பாடல்கள்: பெண்ணின் மனதைத் தொட்டு ரிலீஸ் நாள்
24 years of Pennin Manathai Thottu : ரொமான்டிக் எவர்க்ரீன் காதல் படங்களை கொடுத்த இயக்குநர் எழிலின் 'பெண்ணின் மனதை தொட்டு' படம் வெளியான நாள் இன்று!
எவர்க்ரீன் கிளாசிக் காதல் திரைப்படமான 'துள்ளாத மனமும் துள்ளும்' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் எழில். பூவெல்லாம் உன் வாசம், தீபாவளி, மனம் கொத்தி பறவை உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குநர் எழில் இயக்கத்தில் 1999ஆம் ஆண்டு வெளியான கிளாசிக் லவ் ஸ்டோரி தான் பிரபுதேவா, சரத்குமார், ஜெயா சீல், விவேக், தாமு, மௌலி, ஐஸ்வர்யா உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான 'பெண்ணின் மனதை தொட்டு' திரைப்படம். இப்படம் வெளியாகி இன்றுடன் 24 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
இந்தியாவின் பிரபலமான இதய அறுவை சிகிச்சை நிபுணரான பிரபுதேவாவிடம் சிகிச்சை பெறுவதற்காக இதய பிரச்னை உள்ள ஒரு குழந்தையை அழைத்து வருகிறார்கள். பிரபுதேவா தான் மருத்துவர் என்பதை அறிந்து அந்தக் குழந்தையின் அம்மா ஜெயா சீல் பதட்டப்படுகிறார். குழந்தைக்கு நல்லபடியாக ஆபரேஷன் நடைபெறுகிறது. பிரபுதேவாவும் - ஜெயா சீல் இருவரும் கல்லூரி காலத்தில் காதலித்து வந்துள்ளனர்.
பிரபுதேவாவின் அண்ணனாக சரத்குமார் ஒரு ரவுடியாக நடித்திருந்தார். தம்பியும் தன்னைப் போல ரவுடியாகி விட கூடாது என்பதற்காக டாக்டராக்க வேண்டும் என ஆசைப்படுகிறார். ஜெயா சீலின் அக்கா ஐஸ்வர்யாவின் கணவர் ஜெயா சீல் மீது ஆசைப்பட்டு திருமணம் செய்து கொள்ள முயற்சிக்கிறார். அதில் இருந்து தங்கையை காப்பற்ற வேண்டும் என்பதற்காக அக்கா திருமணத்தன்று தற்கொலை செய்து கொள்கிறாள். கடைசி நேரம் வரையில் பிரபுதேவா வந்து தன்னை காப்பாற்றுவார் என நினைத்த ஜெயா சீலுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. அதை தப்பாக புரிந்து கொண்ட ஜெயா சீல் பிரபுதேவாவை வெறுத்து ஒதுக்கி விடுகிறார். அக்காவின் குழந்தையை தன்னுடைய குழந்தையாக வளர்க்கிறாள்.
பிளாஷ் பேக் ஸ்டோரியில் பிரபுதேவா ஏன் வந்து காப்பாற்றவில்லை என்ற உண்மை ஜெயா சீலுக்கு தெரியவருகிறது. உண்மை தெரிந்ததும் தன்னுடைய தவறை உணர்ந்து இருவரும் ஒன்று சேர்கிறார்கள். இது தான் படத்தின் கதைக்களம்.
'பெண்ணின் மனதை தொட்டு' படத்திற்கு பிளஸ் பாய்ண்டாக அமைந்தது அதன் பாடல்கள். எஸ்.ஏ. ராஜ்குமார் இசையில் இன்றும் பலரின் ஃபேவரட் பாடலாக 'கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா...' பாடல் இருந்து வருவது. பாடல் ஹிட்டான அளவுக்கு படம் ஹிட்டாகவில்லை என்றாலும் இன்றும் அந்த பாடல் காதலியை உருகி உருகி காதலின் காதலரின் கீதமாக இருக்கிறது. நான் சால்ட் கோட்டை நீ சைதாப்பேட்டை..., உதட்டுக்கு கண்ணதும் வண்ணம் எதுக்கு... பாடல்களுக்கும் ஹிட் பாடல்களாக அமைந்தன.
படத்தில் விவேக் காமெடியும் பெரிய அளவில் பிரபலமானது. இன்றும் சிறந்த காமெடி சீன்கள் வரிசையில் இந்த படத்தில் இடம்பெற்ற விவேக் காமெடி காட்சிகள் இடம்பிடிக்கும். பெண்ணின் மனதைத் தொட்டு படம் பற்றி சமீபத்தில் மனம் திறந்த இயக்குநர் எழில், “முதலில் விஜய் தான் இப்படத்தில் நடிப்பதாக இருந்தது. கடைசி நேரத்தில் அது மிஸ் ஆனது, விஜய் ரொம்பவும் விருப்பப்பட்டு நடிக்கிறேன் என சொன்னார். ஆனால் மிஸ் ஆகிவிட்டது” என்ற வருத்தம் தெரிவித்திருந்தார். மேலும், தான் பிரபுதேவாவின் தீவிர ரசிகன், என்ன சீன் சொன்னாலும் அதை பிரபுதேவா பாடலாக மாற்றிவிடுவார் என்றும் அவர் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருந்தார்.