Adipurush: 'ஒரு தவறும் இல்லை... ராமராக சரியாகவே நடித்துள்ளேன்’ ..ஆதிபுருஷ் படம் குறித்து நடிகர் பிரபாஸ் கருத்து..!
இயக்குநர் ஓம் ராவத் இயக்கி வெளியாகியுள்ள ‘ஆதிபுருஷ்’ படத்தில் நடித்தது குறித்து நடிகர் பிரபாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
இயக்குநர் ஓம் ராவத் இயக்கி வெளியாகியுள்ள ‘ஆதிபுருஷ்’ படத்தில் நடித்தது குறித்து நடிகர் பிரபாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
கடும் விமர்சனங்களை சந்தித்த ஆதிபுருஷ்
ராமனாக பிரபாஸ், சீதையாக கீர்த்தி சனோன், ராவணனாக சைப் அலி கான், லட்சுமணனாக சன்னி சிங் ஆகியோர் வால்மீகி எழுதிய ராமாயணத்தை தழுவி எடுக்கப்பட்ட ‘ஆதிபுருஷ்’ படத்தில் நடித்துள்ளனர். ஓம் ராவத் இயக்கியுள்ள இந்த படம் கடந்த ஜூன் 16 ஆம் தேதி தியேட்டரில் வெளியானது. இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஒரே நேரத்தில் 5 மொழிகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே கடும் விமர்சனங்களைப் பெற்றது.
இது ஒருபுறமிருக்க மறுபுறம் ஆதிபுருஷ் படத்தின் வசூல் 3 நாட்களில் உலகளவில் ரூ.300 கோடியை கடந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது. பாகுபலிக்குப் பிறகு பிரபாஸூக்கு எந்த படமும் பெரிய அளவில் ஹிட் கொடுக்காத நிலையில், ஆதிபுருஷ் நல்ல திருப்புமுனையாக அமைந்துள்ளது. அதேசமயம் சமூக வலைத்தளங்களில் இப்படம் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டது. முன்னதாக இயக்குநர் ஓம் ராவத் கேட்டுக் கொண்டதற்கிணங்க தியேட்டர்களில் ஹனுமனுக்கு தனியாக இருக்கை ஒதுக்கப்பட்டது.
நடிகர் பிரபாஸ் கருத்து
இந்நிலையில் ‘ஆதிபுருஷ்’ படத்தில் நடித்தது குறித்து நடிகர் பிரபாஸ் கருத்து தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், “ராமர் கேரக்டரில் நடிக்க எனக்கு பயம் இருந்தது. காரணம் ராமர் மீது மக்கள் வைத்திருக்கும் உணர்வுகள் மற்றும் ஆன்மீகப்பற்று ஆகியவற்றை கருத்தில் கொண்டு, அத்தகைய மரியாதைக்குரிய நபரை திரையில் சித்தரிப்பது ஒரு பெரிய பொறுப்பாக இருந்தது. நான் பாகுபலியில் தவறு செய்திருந்தால் அது நன்றாக இருந்திருக்கும். ஆனால் ஆதிபுருஷின் அத்தகைய தவறை செய்ய முடியாது.
இந்த படம் இந்திய கலாச்சாரம் மற்றும் மதத்தில் ஆழமாக வேரூன்றிய இதிகாசக் கதையான ராமாயணத்தை பற்றியது. இதனை நாம் அனைவரும் கேட்டு வளர்ந்தவர்கள் என்பதால், படத்தில் குறிப்பிடப்பட்ட பகுதியை மிகவும் நம்பகத்தன்மையுடனும் மரியாதையுடனும் சித்தரிப்பதே எங்களின் எண்ணமாக இருந்தது. அதுமட்டுமல்லாமல் படத்தில் ஏராளமான உணர்வுப்பூர்வமான மற்றும் ஆன்மீக ரீதியிலான காட்சிகள் இணைக்கப்பட்டன. இயக்குநர் ஓம் ராவத்தின் அசைக்க முடியாத ஆதரவு மற்றும் வழிகாட்டுதல் எனது பணியில் நம்பிக்கையை ஏற்படுத்தியது" எனவும் பிரபாஸ் கூறியுள்ளார்.