Por Thozhil: போர் தொழில் படம் என்னை தூங்க விடல...50ஆவது நாளில் இயக்குநர் விக்னேஷ் ராஜா நெகிழ்ச்சி!
தடயம் இல்லாமல் பெண்களை மட்டும் குறி வைத்து தொடர்ந்து நடக்கும் கொலைகளை செய்யும் குற்றவாளியையும், அதன் பின்னணியையும் கூறும் திரைப்படம் போர் தொழில்.
வசூல் ரீதியில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் போர் தொழில் படத்தால், தான் தூக்கத்தை இழந்ததாக அதன் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
அறிமுக இயக்குநரான விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள போர் தொழில் திரைப்படத்தில் சரத்குமார் அசோக்செல்வன், நிகிலா விமல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சைக்கோ த்ரில்லர் கதையாக உருவாகி இருக்கும் போர் தொழில் ஜூன் மாதம் 9ம் தேதி வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்தடுத்து இரண்டு பெண்கள் கொலை செய்யப்படுவதை கொண்டு தொடங்கும் கதைக்களம், விறுவிறுப்பாக நகர்ந்து பார்வையாளர்களுக்கு எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
மிகப்பெரிய பொருட்செலவில் ஆக்ஷன் இல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட போர் தொழில் ரூ.50 கோடி வரை வசூல் செய்தது. போர் தொழில் படம் திரையில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் ஓடிடியில் வெளியாகி உள்ளது. சோனி லைவ் தளத்தில் வெளியான போர் தொழில் படத்துக்கு ஓடிடியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
அதிக செலவில் விளம்பரங்கள் மற்றும் புரோமோஷன் இல்லாமல் சரத்குமார் - அசோக் செல்வன் காம்போவை வைத்து அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா எடுத்த போர் தொழிலுக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் படையெடுத்து வந்தன.
இந்த நிலையில், போர் தொழில் படத்தால் தான் தூங்கவில்லை என அப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் ராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், “போர் தொழில் படம் ரிலீஸ் ஆகப்போவதை நினைத்து நான் தூங்காமல் இருந்தேன். நான் சிறந்த படத்தை எடுத்து இருக்கிறேன் என்று தெரியும்.
ஆனாலும் படம் வெற்றிப்பெற வேண்டும் என நினைத்தேன். அது எனக்காக இல்லை. என்னை நம்பி பணம் போட்டு ரிஸ்க் எடுக்க துணிந்த தயாரிப்பாளர்களுக்காக. போர்தொழில் குறிப்பிட்ட தொகையை வசூலிக்க வேண்டும் அதை அவர்களுக்கு காட்ட வேண்டும் என நினைத்தேன். இன்று படம் ரிலீசாக 50வது நாளை எட்டி இருக்கிறது. பாக்ஸ் ஆபிசில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது” என நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.
Thank you 🙏 #PorThozhil pic.twitter.com/RrVSolUZwj
— Vignesh Raja (@vigneshraja89) July 29, 2023
சைக்கோ கில்லர் கதையான ராட்சசன் படத்துக்குப் பிறகு அதிகமாக ரசிகர்களைக் கவர்ந்த படமாக போர் தொழில் பார்க்கப்படுகிறது. தடயம் இல்லாமல் பெண்களை மட்டும் குறி வைத்து தொடர்ந்து நடக்கும் கொலைகளை செய்யும் குற்றவாளியையும், அதன் பின்னணியையும், சீனியர் போலீஸ் அதிகாரியாக வரும் சரத்குமாரும், அனுபவம் இல்லாத ஜூனியர் போலீஸாக இருக்கும் அசோக் செல்வனும் இணைந்து கண்டுபிடிக்கும் கதை படத்துக்கு பலமாக உள்ளது. இதனால் போர் தொழில் இரண்டாவது பாகம் வருமா என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.