Actor Soori: நன்றி மறந்த சூரி.. உதவி பண்ண ஒருத்தருக்கு கூட ஹெல்ப் பண்ணல.. இயக்குநர் வேதனை!
சினிமாவில் வெற்றி பெற்ற ஒருவர் மற்றொருவரை கைகொடுத்து தூக்கி விட்டிருக்க வேண்டும். இந்த நிமிடம் வரை சூரி முயற்சி பண்ணவில்லை என இயக்குநர் வெற்றிவீரன் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு பட ப்ரோமோஷனின்போதும் பெருமைக்காக நண்பர்களைப் பற்றி போலி கட்டுக்கதைகளை பேசுவதை நிறுத்த வேண்டும் என நடிகர் சூரியை இயக்குநர் வெற்றி வீரன் கடுமையாக சாடியுள்ளார்.
இயக்குநர் வெற்றிவீரன் இயக்கத்தில் பூ காய் கனி என்ற படம் தமிழில் உருவாகியுள்ளது. இப்படத்தை வெற்றிவீரன் சொந்தமாக தயாரிக்கிறார். இந்த படத்தில் மிதுன் சக்கரவர்த்தி சந்தோஷ் நம்பிராஜன், மற்றும் மானசி ஆகியோர் நடித்துள்ளனர். விரைவில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் இயக்குநர் வெற்றிவீரன் நடிகர் சூரி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
இந்நிகழ்வில் பேசிய அவர், “சூரிகிட்ட இந்த சம்பவத்தில் நான் ஒரு தகவலை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அவர் பல பேட்டிகளில் பாரதிராஜாவின் உதவி இயக்குநர் வெற்றி வீரன் தான் ஆரம்பக்காலத்தில் எனக்கு எல்லாமுமாக இருந்தார் என என்னைப் பற்றி பேசியுள்ளார். அந்தந்த படத்தின் ப்ரோமோஷனின்போது என்னைப் பற்றி உணர்ச்சிகரமாக பேசிக் கொள்கிறார். ஆனால் எனக்கான ஒரு வாய்ப்பை அமைத்து தரவில்லை. வெற்றி பெற்ற ஒருவர், எனக்கான ஒரு வாய்ப்பை அமைத்து கொடுத்திருக்கலாம். அதற்கான ஒரு சூழல் அமைக்கவில்லையா? என தெரியவில்லை. அப்படியே ஏற்படுத்திய வாய்ப்பில் தன்னை முன்னிலைப்படுத்தியதால் அந்த திட்டம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. ஒரு பெரிய நிறுவனத்தில் கிடைத்த வாய்ப்பு பறிபோனது. அடுத்தக்கட்டமாக என்னை தயாரித்து நிரூபிக்க வேண்டியிருக்கிறது. அதில் நான் வெற்றி பெறுவேன்.
இருந்தாலும் சினிமாவில் வெற்றி பெற்ற ஒருவர் மற்றொருவரை கைகொடுத்து தூக்கி விட்டிருக்க வேண்டும். இந்த நிமிடம் வரை சூரி முயற்சி பண்ணவில்லை. அதனால் பெருமைக்காக போலி கட்டுக்கதைகளை பேசுவதை நிறுத்த வேண்டும். சூரியின் வெற்றிக்கு பின் 16 நண்பர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவரைக் கூட கைதூக்கி விடவில்லை. இதற்கு சூரி பதில் தெரிவித்தால் அதற்கும் நான் பதிலளிக்க காத்திருக்கிறேன். இத்தகைய நண்பர்களில் யாராவது ஒருவரை கைதூக்கி விட்டிருக்கலாம். பூ காய் கனி படம் மூலம் நிச்சயமாக நான் வெற்றி பெற்று இப்படி ஒரு உதவியே இனி தேவையில்லை என நான் சொல்வேன்.
ஆனால் நண்பர்களைப் பற்றி சூரி பேசும் நிலையில் அவர் யாரை உயர்த்தி இருக்கிறார் என்பதை கேட்க வேண்டும். சினிமாவில் போராடி கொண்டிருக்கும் நண்பர்களுக்கு கைகொடுக்க வேண்டுமா இல்லையா? .. அவரால் தான் எனக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பும் இல்லாமல் போய் விட்டது. விடுதலை படத்துக்கு முன் என் கதை தான் அவருக்கு பெரிதாக தெரிந்தது.
இதுதொடர்பாக அவர் நேர்காணலில் தெரிவித்துள்ளார். அதனைப் பார்த்த இன்னொரு தயாரிப்பாளர் படம் தயாரிக்க முன்வந்தார். கென் கருணாஸ் மற்றும் சூர்யா விஜய் சேதுபதி இருவரையும் வைத்து எடுக்கலாம். சூரியிடம் தடையில்லா சான்றிதழ் வாங்குங்கள் என கூறினார். ஆனால் இதுவரை சூரி தரவில்லை. அதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இவ்வளவு உயரத்தில் இருக்கும் சூரியே யோசிக்கிறார் என்றால் எங்களிடம் குறைகள் இருக்கிறது என்று தானே யோசிப்பார்கள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















