PS-2 Sneak Peek: ஆழ்வார்க்கடியானா, காட்டேரி பேயா...பயந்து நடுங்கும் வந்தியத்தேவன்... வெளியான பொன்னியின் செல்வன் ஸ்னீக் பீக் காட்சி!
Ponniyin Selvan 2 Sneak Peek: கார்த்தியின் வந்தியத்தேவன் கதாபாத்திரம், நடிகர் ஜெயராமின் ஆழ்வார்க்கடியான் கதாபாத்திரம் ஆகியவை இடம்பெற்றிருக்கும் ஸ்னீக் பீக் ஒன்று வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்துள்ளது.
‘பொன்னியின் செல்வன்’ படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியாகி கவனமீர்த்துள்ளது.
நாளை மறுநாள் முதல் PS 2
கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை மையப்படுத்தி மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் நாளை மறுநாள் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 30 ஆம் இப்படத்தின் முதல் பாகம் வெளியான நிலையில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்து சுமார் 500 கோடிகள் வரை வசூலித்து மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது .
இந்நிலையில் நாளை மறுநாள் பொன்னியின் செல்வன் 2 வெளியாகும் நிலையில் இரண்டாம் பாகத்தை ஆவலுடன் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துள்ளனர். இந்நிலையில் சென்ற மாதம் தொடங்கி உச்சக்கட்ட ப்ரமோஷன் பணிகளை படக்குழு மேற்கொண்டு வருகிறது.
ஸ்னீக் பீக் காட்சி
அந்த வகையில், தற்போது நடிகர் கார்த்தியின் வந்தியத்தேவன் கதாபாத்திரம், நடிகர் ஜெயராமின் ஆழ்வார்க்கடியான் கதாபாத்திரம் ஆகியவை இடம்பெற்றிருக்கும் ஸ்னீக் பீக் ஒன்று வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்துள்ளது.
கட்டப்பட்ட நிலையில் வந்தியத்தேவன் இந்தக் காட்சியில் காட்டேரி பேயை நினைத்து பயப்படும் நிலையில், ஆழ்வார்க்கடியான் வந்து அவரை பயமுறுத்துவது போல் இந்தக் காட்சி அமைந்துள்ளது.
முந்தைய பாகத்தில் வந்தியத்தேவனாக நடித்த கார்த்தியும், பொன்னியின் செல்வனாக நடித்த ஜெயம் ரவியும் கடலில் மூழ்கும்படியும், தஞ்சைக்கு இருவரும் கடலில் மூழ்கி உயிரிழந்ததாக தகவல் செல்லும் வகையிலும் நிறைவடைந்திருந்தது. மேலும் ஊமை ராணி பொன்னியின் செல்வனை மீட்க வரும் வகையிலும் காட்சிகள் அமைந்திருந்தன.
கரை ஒதுங்கிய வந்தியத்தேவன்
பாண்டிய ஆபத்துதவிகள் வந்தியத்தேவனைக் கட்டி கப்பலுக்கு முந்தைய பாகத்தில் கொண்டு சென்ற நிலையில் தற்போது அந்தக் கட்டுடனேயே கார்த்தி கரை ஒதுங்கி பின் ஆழ்வார்க்கடியானாக நடித்துள்ள நடிகர் ஜெயராமை சந்திப்பது போல இந்தக் காட்சி அமைந்துள்ளது.
மேலும் வந்தியத்தேவன் பேயை நினைத்து இருண்ட காட்டுக்குள் பயந்து நடுங்கும் வகையிலும், காலாமுகன் எனக் கூறி ஆழ்வார்க்கடியான் அவரை பயமுறுத்துவது போலவும் நகைச்சுவையாக அமைந்துள்ள இந்த ஸ்னீக் பீக் இணையத்தில் வரவேற்பைப் பெற்று வருகிறது.
மேலும், பொன்னியின் செல்வன் நாவலில் இருப்பது போல இந்தக் காட்சி அப்படியே அமைந்திருப்பதாகவும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
முன்னதாக இந்தப் படத்தின் ‘அகநக’ , ‘சின்னஞ்சிறு நிலவே’ பாடல்களின் காட்சிகள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன.
விக்ரம், த்ரிஷா, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, ஜெயம் ரவி, ஷோபிதா உள்ளிட்ட படக்குழுவினர் சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூரு என கடந்த ஒரு வாரமாக தீவிர ப்ரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.