Ponniyin Selvan 2: ஆயுத எழுத்து ஷூட்டிங்கில் கார்த்தி பைக் ஓட்ட சொல்லிக் கொடுத்தாரு... ஜெயம் ரவி அண்ணா.. த்ரிஷா உற்சாகப் பேச்சு!
”கார்த்தியை நான் ஆயுத எழுத்து படத்தில் தான் முதன்முதலில் சந்தித்தேன். நான் அப்போது புது நடிகை. கார்த்தி எனக்கு அப்போது பைக் ஓட்ட சொல்லிக் கொடுத்தார். ரவி அண்ணா நீங்கள் எனக்கு மிகவும் ஸ்பெஷல்” - த்ரிஷா
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பொன்னியின் செல்வன் பாகம் 2 திரைப்படம் நாளை திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் இன்று சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் த்ரிஷா, விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா லக்ஷ்மி, பார்த்திபன், ஷோபிதா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நடிகை த்ரிஷா பேசியதாவது:
’நான் மணி சாரின் குந்தவை’
தொடர்ந்து பேசிய நடிகை த்ரிஷா, ”சென்னையில் தொடங்கி இந்த ப்ரொமோஷனை சென்னையிலேயே முடித்துள்ளோம். இந்தப் படத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று சொல்லுங்கள். இப்போதைக்கு பதட்டம் எல்லாம் இல்லை. பயங்கரமான உற்சாகம் தான் இருக்கிறது. இன்று யாரும் அழவில்லை. நன்றிக்கடனுக்கு அர்த்தம் எனக்கு இப்போது 100 சதவீதம் புரிகிறது. லைகா சுபாஸ்கரன் எதற்கும் இல்லை என்று சொன்னதில்லை. மணி சார் ஐ லவ் யூ. நான் என்றுமே மணி சாரின் குந்தவை.
அறிமுக நடிகையாக இருந்தாலும் சரி, முழுமையான நடிகராக இருந்தாலும் சரி, அவர்கள் மணி சாரின் படத்தில் நடிக்கவே விரும்புவார்கள். நன்றி. ஜெயம் ரவி எங்கள் சார்பில் அனைத்தையும் பேசிவிட்டார். ரஹ்மான் சார், ஐஸ்வர்யா ராய் மற்றும் அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுடனும் மும்பையில் நேரம் செலவழித்ததற்கு மகிழ்ச்சி.
ஷோபிதா ஒரு கவிஞர்
மணி சாரின் குழு இல்லாமல் இது எதுவும் சாத்தியமாகாது. நான் ஐஸ்வர்யா, ஷோபிதா இருவரையும் முதன்முறையாக இந்தப் படத்தில் தான் சந்தித்தேன். ஷோபிதா ஒரு கவிஞர், மிகவும் புத்திசாலி. நீங்கள் பெரும் உயரத்துக்கு செல்வீர்கள்.
ஐஸ்வர்யாவை நான் மிஸ் பண்ணப்போவதில்லை. நாங்கள் தொடர்பில் தான் இருப்போம், ப்ரொமோஷன்களின் போது நாங்கள் பேசிக்கொண்டும் நடந்து கொண்டும் ஃபோட்டோ எடுத்துக்கொண்டும் நாங்கள் விக்ரமை டார்ச்சர் செய்து கொண்டிருந்தோம். ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி ஆகிய மூன்று ஸ்டார்களும் எங்கள் பாதுகாப்பை உறுதி செய்தார்கள். ரவி அண்ணா நீங்கள் எனக்கு மிகவும் ஸ்பெஷல், நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பது எனக்கு சந்தோஷம்.
பைக் ஓட்ட சொல்லிக் கொடுத்த கார்த்தி
கார்த்தியை நான் ஆயுத எழுத்து படத்தில் தான் முதன்முதலில் சந்தித்தேன். நான் அப்போது புது நடிகை. கார்த்தி எனக்கு அப்போது பைக் ஓட்ட சொல்லிக் கொடுத்தார். இந்தப் படத்தில் கொரோனா நேரத்தில் ராமோஜி ஃபில்ம் சிட்டியில் 130 நாள்கள் எங்களுக்கு காட்சிகள் இருந்தாலும் இல்லை என்றாலும் ஒன்றாக இருந்தோம். நீங்கள் மிகவும் உண்மையானவர். அதனால் தான் நீங்கள் இந்த இடத்தில் இருக்கிறீர்கள்.
விக்ரம் தான் இந்தத்துறையில் என் முதல் நண்பர். எங்கள் நட்பு 20 ஆண்டுகள் பழமையானது; இன்னும் 20 ஆண்டுகள் தொடரும். பார்த்திபனுக்கு நன்றி. ஐஸ்வர்யா ராய் திரையரங்குகளுக்கு சென்று படம் பார்க்க நாளை வருகிறார். அனைவரும் பலமுறைசென்று படம் பாருங்கள்” எனப் பேசியுள்ளார்.