PS 2 Audio Launch: இதுவும் கமல்ஹாசனா? பொன்னியின் செல்வன் டிரெய்லர் வெளியீட்டு விழா.. லைகா கொடுத்த வாவ் அறிவிப்பு..
பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திற்கான இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவிற்கு, தலைமை தாங்க உள்ள நடிகர் யார் என்பதை தயாரிப்பு நிறுவனமான லைகா வெளியிட்டுள்ளது.

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திற்கான இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவிற்கு, தலைமை தாங்க உள்ள நடிகர் யார் என்பதை தயாரிப்பு நிறுவனமான லைகா வெளியிட்டுள்ளது.
தலைமை தாங்குகிறார் உலகநாயகன் கமலஹாசன்:
கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்ட முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி பிரமாண்ட வெற்றி பெற்ற நிலையில், இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ம் தேதி வெளியாக உள்ளது. இதை முன்னிட்டு அப்படத்திற்கான இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, வரும் 29ம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த விழாவிற்கு உலகநாயகன் கமல்ஹாசன் தலைமை தாங்குவார் என, பொன்னியின் செல்வன் படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முதல் பாகத்திற்கான இசை வெளியீட்டு விழாவிலேயே, நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் பங்கேற்று பேசியது அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை பன்மடங்கு அதிகரித்தது. இந்நிலையில், இரண்டாம் பாகத்திற்கான இசை வெளியீட்டு விழாவிலும், கமல் தலைமை விருந்தினராக பங்கேற்க உள்ளார். இதனிடையே இயக்குனர் பாரதிராஜா மற்றும் நடிகர் விஜய் உள்ளிட்டோருக்கும் படக்குழு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மெகா வெற்றி பெற்ற முதல் பாகம்:
கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் 30ஆம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானது. விக்ரம், கார்த்திக், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பார்த்திபன், ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் பிரபு என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து இருந்த இந்த படம், அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து பெரும் வெற்றி பெற்றது. இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம், 500 கோடிகளுக்கும் மேல் வசூலை வாரிக்குவித்தது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பொன்னி நதி பார்க்கணுமே, ராட்சச மாமனே, சோழா சோழா, தேவராளன் ஆட்டம், அலைக்கடல், சொல் என அனைத்து பாடல்களும் ஹிட் அடித்து சென்ற ஆண்டின் ஹிட் ஆல்பமாக பொன்னியின் செல்வன் உருவெடுத்தது. இந்நிலையில் இரண்டாம் பாகத்தில் இடம்பெற்றுள்ள 'அக நக’ என்ற முதல் சிங்கிள் பாடல் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் தான், படத்தில் உள்ள மற்ற பாடல்கள் மற்றும் டிரெய்லர் ஆனது வரும் 29ம் தேதியன்று நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ள, விழாவில் வெளியிடப்பட உள்ளது.
ப்ரமோஷனுக்கு திட்டம்:
இசை வெளியீட்டு விழாவை தொடர்ந்து, இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களுக்கு சென்று, பொன்னியின் செல்வன் படக்குழு தீவிர ப்ரமோஷன் பணியில் ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

