RIP Bavatharini : மயில் போல பொண்ணு.. பவதாரிணி இன்று இல்லை.. அதிர்ச்சியில் கலையுலகம்
RIP Bhavatharani : தனித்துவமான குரலில் குழந்தைத்தனமாக பாடி லட்சக்கணக்கான ரசிகர்களின் இதயங்களை வென்ற பாடகி பவதாரிணி உயிர் இழந்தார்.
தமிழ் சினிமாவின் பிரபலமான இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பின்னணி பாடகியுமான பவதாரிணி ராஜா, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார். அவரின் மறைவு ஒட்டுமொத்த திரையுலகத்தினர் மற்றும் ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
'மயில் போல பொண்ணு ஒன்னு...' என தன்னுடைய மயக்கும் குரலால் குயில் போல பாடிய பவதாரிணி, ஒரு பின்னணி பாடகியாக 'ராசய்யா' படத்தில் இடம்பெற்ற 'மஸ்தானா மஸ்தானா...' பாடல் மூலம் அறிமுகமானார். ஒரு கீச்சொலியாக தனித்துவமான குரலில் குழந்தைத்தனமாக அவர் முதல் பாடலே நல்ல ஒரு வரவேற்பையும் அங்கீகாரத்தையும் பெற்று கொடுத்தது. 'பாரதி' படத்தில் இடம்பெற்ற 'மயில் போல பொண்ணு ஒன்னு...' பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதை பெற்றார்.
ஒரு சிறந்த பாடகியாக இருந்த போதிலும் தன்னுடைய இசை ஆர்வத்தை பல்துறையினும் வெளிப்படுத்த எண்ணினார். நடிகை ரேவதி இயக்குநராக அறிமுகமான 'மித்ர், மை ஃப்ரெண்ட்' படம் மூலம் இசையமைப்பாளராக திறமையை நிரூபித்தார். 2013ம் ஆண்டு கிராமிய கதையை அடிப்படையாக கொண்டு வெளியான 'வெள்ளச்சி' படத்திற்கு இசையமைத்து இருந்தார்.
தெலுங்கு, கன்னடம், இந்தி என பிற திரையுலகிலும் அவரின் இசை திறன் வெளிப்பட்டு 20க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
பவதாரிணியின் தனித்துமான குரலால் என் வீட்டுச் சன்னல்..., தாலியே தேவையில்லை நீ தான்..., மயில் போல..., மெர்க்குரி பூவே..., காற்றில் வரும் கீதமே..., தென்றல் வரும்... என்னை தாலாட்ட வருவாளா...ஒரு நாள் ஒரு கனவு..., என பல திரைப்படங்களில் உணர்ச்சி ததும்ப பாடி கேட்போரின் இதயங்களில் அழியாத ஒரு அடையாளத்தை பதித்தார்.
இளையராஜா மற்றும் அவரின் சகோதரர்களான கார்த்திக் ராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இசையில் ஏராளமான பாடல்களை பாடி இருந்தாலும் தேனிசை தென்றல் தேவா மற்றும் சிற்பி இசையிலும் பல வெற்றி பாடல்களை பாடியுள்ளார்.
இப்படிபட்ட ஒரு தனிச்சிறப்பு மிக்க இசை வித்தகியை இந்த திரையுலகம் இழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் அவரின் சிறந்த பங்களிப்புக்காக என்றுமே பவதாரிணி ரசிகர்களின் இதயங்களில் நிறைந்து இருப்பார்.