Pichaikkaran 3: விரைவில் வருகிறது 'பிச்சைக்காரன் 3'.. ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்த விஜய் ஆண்டனி..!
முதல் இரண்டு பாகங்களின் கதைக்கும் அடுத்த பாகத்தின் கதைக்கும் தொடர்பிருக்காது என்றும் விஜய் ஆண்டனி தகவல் தெரிவித்துள்ளார்.
‘பிச்சைக்காரன்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கடந்த 19ஆம் தேதி திரையரங்குகளில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான திரைப்படம் ’பிச்சைக்காரன் 2’.
வசூலை குவிக்கும் பிச்சைக்காரன் 2:
விஜய் ஆண்டனி நடித்து, இயக்கி, இசையமைத்த இப்படம் ’பிச்சகாடு 2’ எனும் பெயரில் தெலுங்கிலும் வெளியானது. அண்ணன் - தங்கை செண்டிமெண்ட், மூளை மாற்று அறுவை சிகிச்சை, என ஆக்ஷன், செண்டிமெண்ட், த்ரில்லர் கலந்து வெளியான இப்படத்தில் நடிகை காவ்யா தாப்பர் ஹீரோயினாக நடித்துள்ளார்.
நடிகர்கள் யோகி பாபு, ஜான் விஜய், ஹரீஷ் பரேடி, ஒய்.ஜி.மகேந்திரா உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில், இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், இவற்றையெல்லாம் கடந்து நல்ல வசூலைக் குவித்து வருகிறது.
வருகிறது பிச்சைக்காரன் 3:
மேலும், கோலிவுட்டை விட தெலுங்கில் இப்படத்துக்கு பிரம்மாண்ட ஓப்பனிங் அமைந்துள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், முதல் நாளே இப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் ஆறு கோடிகள் வரை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியானது.
இந்நிலையில், பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் வெற்றி மகிழ்ச்சியில் உள்ள விஜய் ஆண்டனி, இப்படத்தின் அடுத்த பாகம் உறுவாக உள்ளதை உறுதி செய்துள்ளார். பிச்சைக்காரன் படத்தின் முதல் பாகத்தை இயக்குநர் சசி இயக்கிய நிலையில், முதல் இரண்டு பாகங்களின் கதைக்கும் அடுத்த பாகத்தின் கதைக்கும் தொடர்பிருக்காது என்றும் விஜய் ஆண்டனி தகவல் தெரிவித்துள்ளார்.
பிசியான விஜய் ஆண்டனி:
விஜய் ஆண்டனி அடுத்தடுத்து அக்னி சிறகுகள், கொலை, ரத்தம், மழை பிடிக்காத மனிதன் என வரிசைக்கட்டி நடித்து வரும் நிலையில், பிச்சைக்காரன் 3 படப்பணிகள் இப்படங்களை அடுத்து தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக பிச்சைக்காரன் 2 திரைப்படம் தனது கதை எனக் கூறி ராஜகணபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும், விஜய் ஆண்டனி 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து தனக்கு பெரும் இழப்பும், மன உளைச்சலும் ஏற்பட்டதாக விஜய் ஆண்டனி வருத்தம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் பலகட்ட பிரச்னைகள் தாண்டி பிச்சைக்காரன் 2 திரைப்படம் சென்ற வாரம் வெளியானது.
இதேபோல், மலேசியாவின் லங்காவி தீவில் பிச்சைக்காரன் 2 ஷூட்டிங் நடைபெற்றபோது விஜய் ஆண்டனி பெரும் விபத்தில் சிக்கிய நிலையில், அவரது மூக்கு, தாடை எலும்பு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்நிலையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதுடன், சுமார் ஒரு மாத கால சிகிச்சைக்குப் பிறகு விஜய் ஆண்டனி மீண்டும் படப்பிடிப்புக்குத் திரும்பி பணிகளை மேற்கொண்டார்.
மேலும் படிக்க: Fahadh Faasil : ஃபஹத் ஃபாசில் நடிப்பில் பாராட்டுக்களை அள்ளிய படம்... ‘பாச்சுவும் அத்புத விளக்கும்’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!