Pichaikaran 2 : தீவிர ஆலோசனையில் பிச்சைக்காரன் 2 படக்குழு... ஒத்திவைக்கப்படும் ரிலீஸ் தேதி... என்ன காரணம் ?
பிச்சைக்காரன் 2 படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இன்னும் முழுவதுமாக முடிவடையாமல் இருக்கும் காரணத்தால் படத்தின் ரிலீஸ் தேதி மேலும் ஒத்திவைப்பதற்கான ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது படக்குழு.
2016-ஆம் ஆண்டு சசி இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடித்த 'பிச்சைக்காரன்' திரைப்படம் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. அதன் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகம் தற்போது உருவாகியுள்ளது. இப்படத்தை நடிகர் விஜய் ஆண்டனியே இயக்கி நடித்துள்ளார். இப்படம் மூலம் இயக்குநர் அவதாரம் எடுக்கிறார். விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற முதல் பாகத்தால் இரண்டாவது பாகத்துக்கான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. இந்த வேளையில் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது படக்குழு.
விபத்தில் சிக்கிய விஜய் ஆண்டனி :
பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பு சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்றது. அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்தார் நடிகர் விஜய் ஆண்டனி. ஓய்வில் இருந்து வந்த விஜய் ஆண்டனி, பிச்சைக்காரன் 2 திரைப்படம் ஏப்ரல் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்ற அறிவிப்பினை தனது ட்விட்டர் பக்கம் மூலம் வெளியிட்டு இருந்தார். ஆனால் சமீபத்தில் வெளியாகியுள்ள தகவல் படி பிச்சைக்காரன் 2 திரைப்படம் ஏப்ரல் 14 வெளியாகாது என்றும் அதன் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட கூடும் என கூறுகிறன்றன நெருங்கிய சினிமா வட்டாரங்கள். இதனால் திரை ரசிகர்கள் சற்று ஏமாற்றம் அடைந்துள்ளார்கள்.
ஒத்திவைக்கப்படும் ரிலீஸ் தேதி :
காவ்யா தாப்பர், ஹரீஷ் பெராடி, யோகி பாபு மற்றும் மன்சூர் அலி கான் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது. இந்த வேளையில் பிச்சைக்காரன் 2 படம் அறிவிக்கப்பட்ட ரிலீஸ் தேதிக்கு இன்னும் இரண்டு வார காலம் மட்டுமே இருக்கும் நிலையில் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இன்னும் முழுவதுமாக முடிவடையாமல் உள்ளது. அதனால் படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்தி வைக்கலாம் என ஆலோசித்து வருகிறார்கள் படக்குழு. அடுத்தடுத்த வாரங்களில் பெரிய படங்கள் வெளியிட தயாராக தேதிகளை லாக் செய்து உள்ளன. ஆனால் பிச்சைக்காரன் 2 படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்படுவதால் அந்த சமயத்தில் வெளிய திட்டமிடப்பட்டு இருக்கும் 'ருத்ரன்' மற்றும் 'சொப்பன சுந்தரி' ஆகிய படங்களுக்கு வரவேற்பு கிடைக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விரைவில் அப்டேட் :
ஒரு வாரத்திற்கு முன்னர் வெளியான பிச்சைக்காரன் 2 படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் 'ஆன்டி பிகிலி' தீம் டிராக் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் ஒத்திவைக்கப்படும் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.