Pathu Thala Box Office Collection: மாநாடு, வெந்து தணிந்தது காடு வரிசையில் சிம்புவுக்கு வெற்றியா... பத்து தல வசூல் நிலவரம்!
முதல் வாரத்திலேயே நல்ல வசூலைக் குவித்துள்ள நிலையில், கமர்ஷியல் படமான பத்து தல இரண்டாவது வாரத்திலும் வசூல் வேட்டை நடத்தும் என திரையரங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கடந்த மார்ச் 30ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘பத்து தல’
கன்னட திரைப்படமான முஃப்டி படத்தின் ரீமேக்கான இந்தப் படத்தில் கௌதம் கார்த்திக், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா பவானி சங்கர், சந்தோஷ் பிரதாப், அனு சித்தாரா, கலையரசன், டீஜே உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஸ்டுடியோ க்ரீன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ள நிலையில், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். கன்னியாகுமரி பகுதிகளில் நிகழும் மணல் மாஃபியாவை அடிப்படையாகக் கொண்டு பத்து தல படத்தின் கதை அமைந்துள்ளது. படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
ஏஜிஆர் எனும் மாஃபியா கும்பல் தலைவனாக, முதமைச்சரையே நிர்ணயிக்கக்கூடிய ஆற்றல் கொண்ட டான் கதாபாத்திரத்தில் சிம்பு இந்தப் படத்தில் ரசிகர்களைக் கவர்ந்திருந்தாலும், கன்னட ஒரிஜினல் படம் அளவுக்கு பத்து தல படம் இல்லை என ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர்.
ஆனால் இந்த விமர்சனங்களைத் தாண்டி பாக்ஸ் ஆஃப்ஸில் பத்து தல படம் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. அதன்படி பத்து தல படம் வெளியான ஆறு நாள்களில் உலகம் முழுவதும் 50 கோடிகளுக்கும் மேல் வசூலித்துள்ளதகாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் இந்தியாவில் முதல் நாள் 5.25 கோடிகளும், இரண்டாம் நாள் 1.85 கோடி வசூலையும், மூன்றாம் நாள் 2.6 கோடி வசூலையும் நான்காம் நாள்2.9 கோடி வசூலையும், ஐந்தாம் நாள் 1.05 கோடிகளையும் , ஆறாம் நாளான நேற்று 1.10 கோடிகளையும் படம் வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
40 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பத்து தல படம், முதல் வாரத்திலேயே நல்ல வசூலைக் குவித்துள்ள நிலையில், கமர்ஷியல் படமான பத்து தல இரண்டாவது வாரத்திலும் வசூல் வேட்டை நடத்தும் என திரையரங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் முன்னதாக வெளியான சிம்புவின் மாநாடு, வெந்து தணிந்தது காடு படங்களின் வெற்றி வரிசையில் பத்து தல படமும் இடம்பிடிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.
பத்து தல படம் தமிழ்நாட்டில் மட்டும் 500 ஸ்க்ரீன்களில் வெளியான நிலையில், மார்ச் 31ஆம் தேதி வெளியான விடுதலை பாகம் 1 400 ஸ்க்ரீன்களில் வெளியானது.
இரண்டு படங்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில், விடுதலை படம் விமர்சனரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றும், மறுபுறம் பத்து தல படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், நல்ல வசூலைப் பெற்றும் வருகிறது.
மேலும் படிக்க: Mrunal Thakur: இது எங்க சீதாமகாலஷ்மி இல்லை.. பிகினி ஃபோட்டோ பகிர்ந்த மிருணாள் தாக்கூர்... கமெண்ட்ஸில் களமாடும் டோலிவுட் ரசிகர்கள்!