Oscars 2023: பெண்களால் எதுவும் சாத்தியம்; பெருமிதத்துடன் ஆஸ்கர் விருது பெற்ற கார்த்திகி, குனீத் மோங்கா- யார் இவர்கள்?
பெண்களால் எதுவும் சாத்தியம் என்பதை மீண்டும் நிரூபித்து இருக்கின்றனர் 2022ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதை பெருமிதத்துடன் பெற்ற கார்த்திகி கோன்சால்வ்ஸ், குனீத் மோங்கா. யார் இந்தப் பெண்கள்?
பெண்களால் எதுவும் சாத்தியம் என்பதை மீண்டும் நிரூபித்து இருக்கின்றனர் 2022ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதை பெருமிதத்துடன் பெற்ற கார்த்திகி கோன்சால்வ்ஸ், குனீத் மோங்கா. யார் இந்தப் பெண்கள்?
விலங்குகள், பறவைகள், மனிதர்கள் என எல்லாவற்றுக்கும் அன்பு ஒன்றே ஆதாரப் புள்ளியாக இருக்கிறது. அந்த வகையில் யானைக்கும் அதைப் பராமரிக்கும் யானை காப்பாளர்களுக்கும் இடையிலான அன்பை, ஆவணப் படமாக எடுத்த பெண்கள்தான் கார்த்திகி கோன்சால்வ்ஸ், குனீத் மோங்கா.
யார் இந்த கார்த்திகி கோன்சால்வ்ஸ்?
நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கார்த்திகி. மும்பையைச் சார்ந்து பணியாற்றி வருகிறார். ஐ.டி. துறையில் வல்லுநரான இவரின் தந்தை, பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களை நிர்வகித்து வருகிறார். யானைகள் உள்ளிட்ட விலங்குகள் மேல் உள்ள காதலால், சிறு வயது முதலே தெப்பக்காடு யானைகள் சரணாலயத்துக்கு அடிக்கடி சென்று வருவதைக் கார்த்திகி வழக்கமாகக் கொண்டிருந்தார். அதுவே இந்த ஆவணப் படத்துக்கும் அடித்தளமாக அமைந்தது.
வன விலங்குகள், சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை சார்ந்து ஆர்வம் கொண்டவர் கார்த்திகி. புகைப்படப் பத்திரிகையாளரான கார்த்திகி, அடிப்படையில் காட்டுயிர் ஆர்வலர்.பயணிப்பதில் அலாதியான ஆர்வம் கொண்ட கார்த்திகி, இந்தியாவின் பழங்குடி சமூகங்களுக்கும் இயற்கைக்கும் உள்ள தொடர்பு குறித்துத் தொடர்ந்து ஆவணப்படுத்தி வருகிறார். அதேபோல இந்திய கலாச்சாரத்துக்கும் சமூகங்களுக்கும் இடையிலான உறவு குறித்தும் கார்த்திகிக்கு ஆர்வம் உண்டு.
இந்தியாவுக்கு அர்ப்பணிக்கிறேன்
விருதைப் பெற்ற பிறகு ஆஸ்கர் மேடையில் கார்த்திகி கோன்சால்வ்ஸ் பேசும்போது, "நமக்கும் இயற்கைக்கும் இடையேயான புனித பந்தம் குறித்துப் பேச இன்று இந்த மேடையில் நிற்கிறேன். பழங்குடி சமுதாயத்தின் மரியாதை, மற்ற உயிரினங்கள் மேல் அவர்கள் காட்டும் பரிவு, அனைத்து உயிர்களையும் ஒன்றிணைத்த இணக்கமான வாழ்வு போன்றவற்றுக்கு இந்த விருது. எங்கள் படத்தை அங்கீகரித்ததற்கும் பழங்குடி மக்களை முன்னிலைப்படுத்தியதற்கும் ஆஸ்கர் அகாடமிக்கு என் நன்றி. நெட்ஃப்ளிக்ஸ்-க்கும் என் நன்றியை உரித்தாக்குகிறேன். இந்த விருதை என் தாய்நாடான இந்தியாவுக்கு அர்ப்பணிக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
கார்த்திகி குறித்து மேலும் அறிய: http://www.kartikigonsalves.com/about
ஆவணப் படம் சொல்வது என்ன?
The Elephant Whisperers ஓர் ஆவணக் குறும்படம். இது நீலகிரியின்முதுமலை தெப்பக்காடு யானைகள் சரணாலயத்தில், தமிழில் எடுக்கப்பட்ட படம். பெற்றோரை இழந்த ரகு என்ற குட்டி யானைக்கும் அதைப் பராமரிக்கும் பழங்குடி தம்பதிக்குமான பிணைப்பைச் சொல்கிறது இந்தப் படம்.
யார் இந்த குனீத் மோங்கா?
இந்தப் படத்தின் தயாரிப்பாளர் குனீத் மோங்கா. இந்தியத் தயாரிப்பாளரான அவர் சீக்கிய என்டர்டெயின்மெண்ட் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார். தி லஞ்ச் பாக்ஸ், மஸான் உள்ளிட்ட படங்களைத் தயாரித்தவர் குனீத். ஏற்கெனவே Period. End of Sentence என்ற ஆவணப் படத்துக்காக 2019-ல் ஆஸ்கர் விருதைப் பெற்றுள்ளார்.
தற்போதைய ஆஸ்கர் விருது குறித்துத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "முதல் முறையாக இந்தியத் தயாரிப்பு ஒன்றுக்கு முதல் ஆஸ்கரை வென்றிருக்கிறோம். இரண்டு பெண்கள் இதைச் செய்திருக்கிறோம். நான் இன்னும் நடுங்கிக் கொண்டுதான் இருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
ஒரு திரைப்படத்தின் பின்னணியில் இருக்கும் ஆதார நபர்கள் இயக்குநர்- தயாரிப்பாளர்தான். அந்த வகையில் பெண்களே ஓர் ஆவணக் குறும்படத்தைத் தமிழில் எடுத்த நிலையில், அதற்கு ஆஸ்கர் விருது கிடைத்திருப்பது அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது. பெண்களாலும் எதுவும் சாத்தியமே என்று மீண்டும் எடுத்துக் காட்டியுள்ளது.