உனக்கு என்ன தகுதி இருக்கு...கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் லப்பர் பந்து இயக்குநர் பேச்சால் கடுப்பான சீமான்..
கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் லப்பர் பந்து இயக்குநர் பேசிய கருத்தை விமர்சித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார்

தமிழ் நாடு அரசின் ஏழு திட்டங்களின் சாதனைகளை விளக்கும் வகையில்,’கல்வியில் சிறந்த தமிழ்நாடு’என்ற நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழ் நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டுள்ளார். சிறப்பு விருந்தினராக தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி மற்றும் நடிகர்கள் சிவக்குமார், சிவகார்த்திகேயன், இயக்குனர்கள் மிஸ்கின், பிரேம்குமார் மற்றும் லப்பர் பந்து இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.
இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து பேச்சு
நிகழ்ச்சியில் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து பேசுகையில்,” இந்த நிகழ்ச்சியில் பல அறிவுஜீவிகள் கலந்து கொண்டுள்ளனர். இதில் என்ன பேசுவது என்று எனக்கு தெரியவில்லை. நானும் அரசு பள்ளியில் படித்தவன் தான். இலவச திட்டங்களை நிறைய நான் அனுபவித்து இருக்கிறேன். அதற்காக நன்றி சொல்லவேண்டும். இலவச பஸ் பாஸ் முதல் அரசின் நலத்திட்டங்கள் பலவற்றை நாங்கள் பெற்றிருக்கிறோம். சச்சின் படித்தாரா ? ரகுமான் படித்தாரா ? இளையராஜா படித்தாரா ? என்று சொல்வார்கள் நம்பாதீங்க. அப்படி தனித்து வெற்றிபெற்றவர்கள் வெறும் 100 பேர்தான். ஆனால் படித்து முன்னுக்கு வந்தவர்கள் அத்தனை பேர் இருக்கோம். விதிவிலக்கு எப்போதுமே உதாரணம் ஆகாது. அதனால் படிங்க.படிங்க.படிங்க" என தமிழரசன் பச்சமுத்து பேசினார். அவரது பேச்சு பலரையும் கவர்ந்தது. இப்படியான நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழரசன் பச்சமுத்துவின் கருத்தை விமர்சித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பி பேசியுள்ளார்
ஒரு படம் எடுத்துட்டா நீ பெரிய ஆளா
இன்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த சீமான் தமிழரசன் பச்சமுத்து பேச்சு குறித்து தனது கோபத்தை வெளிப்படுத்தினார் " இளையராஜா படிச்சாரா , ரகுமான் படிச்சாரானு சொல்லுவாங்க அவங்கள நம்பாதீங்கனு சொல்ற. நான் என்ன சொல்ல வரேனு உனக்கு புரியல. ஒரு படத்த எடுத்துட்டா உன்ன ஒரு கல்வி அறிஞனா நினைச்சுட்டு கருத்து சொல்ல வந்திடுற. அந்த மேடையில் நின்னு பேசுறதுக்கு நீ யாரு? நீ ஒரு படத்த இயக்கிருக்க அவ்வளவுதான். அதுக்கு நீ படிச்ச படிப்பா காரணம். தனித்திறன் ஆற்றலை வளர்த்துக்கனும் என்பது தான் நான் சொன்னதன் அர்த்தம். அதை முழுதாக புரிந்துகொள்ளாமல் எதையாவது மேடையில் பேசி கைதட்டல் வாங்க வேண்டியது. சரி முதலமைச்சரும் , துணை முதலமைச்சரும் வாங்குன கல்வி தகுதி என்ன. மோடியின் கல்வி தகுதி என்ன ? என்று சீமார் பேசினார்.





















