Ponniyin Selvan poster: இது எம்ஜிஆரின் பொன்னியின் செல்வன்.... ட்ரெண்ட் ஆகும் பழைய போஸ்டர்!
Ponniyin sevan poster: எம்ஜிஆர் பிக்சர்ஸ் வழங்கும் 'பொன்னியின் செல்வன்’ எனவும், ’திரையிலே தீந்தமிழ் காவியம்’ எனவும் இந்தப் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1958ஆம் ஆண்டு எம்ஜிஆர் நடிப்பில் வெளியாகவிருந்த பொன்னியின் செல்வன் பட போஸ்டர் தற்போது இணையத்தில் ஹிட் அடித்துள்ளது.
பொன்னியின் செல்வன் டீசர்
மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள ’பொன்னியின் செல்வன்’ (Ponniyin sevan) திரைப்படம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வெளிவருகிறது.
சென்ற வாரம் முழுவதும் பொன்னியின் செல்வன் பட அப்டேட்கள் சமூக வலைதளங்களில் ஹிட் அடித்து தமிழ் சினிமா ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தின. குறிப்பாக இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று தொடர்ந்து லைக்குகளை வாரிக் குவித்து வருகிறது.
1955ஆம் ஆண்டு கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
எம்ஜிஆரின் கனவுப் படம்
இந்த வரலாற்றுப் புனைவு நாவல் வெளியானது முதலே தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டு அனைத்து தரப்பினரையும் குறிப்பாக சினிமாவைச் சேர்ந்தவர்களை ஈர்த்து வருகிறது.
இந்நாவலை படமாக முதன்முதலாக முனைப்பு காட்டியவர் முன்னாள் முதலமைச்சரும் பிரபல நடிகருமான எம்ஜிஆர் தான் என்பது இன்றளவும் கோலிவுட்டில் நினைவுகூரப்பட்டு வருகிறது.
1958ஆம் ஆண்டு இக்கதையை படமாக்குவதற்கான உரிமத்தை 10 ஆயிரம் ரூபாய்க்கு எம்ஜிஆர் பெற்றிருந்த நிலையில், தற்போது அன்றைய காலக்கட்டத்தில் வெளியான இப்படத்தின் போஸ்டர் ட்ரெண்ட் ஆகி உள்ளது.
எம்ஜிஆரின் பொன்னியின் செல்வன் போஸ்டர்
இப்படத்தை தானே தயாரித்து இயக்கவும் எம்ஜிஆர் திட்டமிட்டிருந்த நிலையில், இந்தப் போஸ்டரில் ஒளிப்பதிவு ஜி.கே.ராமு எனவும், பிரபல தமிழ் பாடலான ’சிங்காரவேலனே தேவா’ உள்ளிட்ட பாடல்களுக்கு இசையமைத்த எஸ்.எம்.சுப்பையா என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்ஜிஆர் பிக்சர்ஸ் வழங்கும் பொன்னியின் செல்வன் எனவும், திரையிலே தீந்தமிழ் காவியம் எனவும் இந்தப் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எம்ஜிஆர், இந்நாவலின் முக்கியக் கதாபாத்திரங்களான வந்தியத்தேவன், அருள்மொழி வர்மன் ஆகிய இரண்டு பாத்திரங்களிலும் தானே நடிக்க திட்டமிட்டிருந்தார்.
திரைக்கதை எழுதவிருந்த மகேந்திரன்
மேலும் மகேந்திரன் உள்பட பலரிடம் அந்தக் கதையைக் கொடுத்து திரைக்கதையாக மாற்றுமாறு எம்.ஜி.ஆர் கோரியுள்ளார். ஜெமினி கணேசன், பத்மினி, சாவித்ரி, சரோஜா தேவி, வைஜெயந்தி மாலா, நம்பியார், டி.எஸ்.பாலையா உள்ளிட்ட பலரும் நடிக்கவிருந்த இப்படம் இறுதியில் தொடங்காமலேயே பெட்டிக்குள் அடங்கியது.
மேலும் படிக்க | இரவின் நிழல் FDFS பார்த்தால் 3.5 பவுன் தங்க நகை பரிசு... மேடையில் அறிவித்த பேஸ்புக் பிரபலம்!
ஒரு நாடகத்தில் நடிப்பதற்காக எம்.ஜி.ஆர் சீர்காழி சென்றுகொண்டிருந்தபோது விபத்தில் சிக்கிய நிலையில் அடுத்த ஆறு மாதங்கள் அவருக்கு ஓய்வு தேவைப்பட்டது. ஓய்வு முடிந்து குணமடைந்ததும், அவர் நடிப்பில் பாதியில் நின்றபோயிருந்த படங்களை நடித்துக் கொடுத்தார். இதற்கு பிறகு பொன்னியின் செல்வனை அவர் எடுக்க முடியாமலேயே போனது.
அதன் பிறகு எம்ஜிஆருக்கு ஏற்பட்ட விபத்து காரணமாகவும், அதிலிருந்து மீளத் தேவைப்பட்ட காலம் காரணமாகவும் எம்.ஜி.ஆரின் இந்த முயற்சி நிறைவேறாத கனவாக தேங்கிப்போனது.
எம்.ஜி.ஆரைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசனும் இப்படத்தை வெள்ளித்திரையில் கொண்டு வர முயற்சித்த நிலையில், அவரது ஆசையும் சில காரணங்களால் சாத்தியப்படாமல் போனது.
இந்நிலையில், பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்கள் தொடர்பான பல காட்சிகளை இணைக்கும் பின்னணி குரலை நடிகர் கமல்ஹாசன் கொடுக்கவிருப்பதாகத் தகவல் வெளிவந்துள்ளது.
மேலும் படிக்க: Iravin Nizhal Review: படமா இது? அதுக்கும் மேல... உலக பார்வையில் விழும் இரவின் நிழல்!