EXCLUSIVE: நயன்தாராவின் ‘கனெக்ட்’ படத்திற்கு தமிழகத்தில் தடையா? - திருப்பூர் சுப்பிரமணியம் பதில்!
படக்குழு சார்பில் இருந்து இதுவரை எங்களுக்கு எந்த கோரிக்கையும் வைக்கப்படவில்லை என்று திருப்பூர் சுப்பரமணியம் கூறியுள்ளார்.
நயன்தாரா நடித்துள்ள கனெக்ட் படம், எந்தவொரு தடையும் இல்லாமல் தமிழகத்தில் வெளியாகும் என தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவரான திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரகளுடன் நடித்து வந்த நயன்தாராவிற்கு 2013 ஆம் ஆண்டு வெளியான “ராஜா ராணி” படம் கம்-பேக் படமாக அமைந்தது. அப்போது வரை கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த நயன்தாரா பாதையை மாற்றி மாயா, டோரா, அறம், இமைக்கா நொடிகள், அய்ரா, மூக்குத்தி அம்மன் ஆகிய படங்களில் முதன்மை கதாபாத்திரமாக நடித்து அசத்தினார். இதனால், அவரின் ரசிகர்கள் “லேடி சூப்பர்ஸ்டார் நயன்” என்ற புதிய டைட்டிலை அவருக்கு கொடுத்தனர்.
கடந்த ஜூன் மாதத்தில் விக்னேஷ் சிவனை மணந்து கொண்ட நயன், இனிமேல் படம் நடிப்பாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், அந்த கேள்விக்கு பதில் கொடுக்கும் விதமாக தமிழ், மலையாளம், தெலுங்கு , ஹிந்தி என அனைத்து மொழி படங்களிலும் ரவுண்டு கட்டி படங்களில் நடித்து வருகிறார் நயன்.
அந்த வகையில் தற்போது மாயா இயக்குநர் அஸ்வின் சரவணனுடன் மீண்டும் சேர்ந்து கனெக்ட் என்ற 99 நிமிடம் ஓடக்கூடிய பேய் படத்தில் நடித்துள்ளார் நயன் தாரா. இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் வருகிற டிசம்பர் 22 ஆம் தேதியும், ஹிந்தியில் டிசம்பர் 30 ஆம் தேதியும் வெளியாகவுள்ளது.
99 நிமிடம் ஓடக்கூடிய இப்படமானது இடைவேளை இல்லாமல் திரையிடப்படும் என படக்குழு சார்பில் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் படத்தை இடைவேளை இன்றி திரையிடப்படும் பட்சத்தில், கேன்டீன் வியாபாரம் கெட்டு போகும் என்றும் ஆகையால் இப்படத்தை திரையிட திரையரங்க உரிமையாளர்கள் மறுக்கின்றனர் என்றும் சமூகவலைதளங்களில் தகவல் பரவியது.
View this post on Instagram
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவரான திருப்பூர் சுப்பிரமணியத்திடம் பேசினோம். இது குறித்து அவர் பேசும் போது, “ அது தவறான தகவல். எங்கள் தரப்பில் இருந்து எந்த எதிர்ப்பும் இல்லை. படக்குழு சார்பில் இருந்து இதுவரை எங்களுக்கு எந்த கோரிக்கையும் வைக்கப்படவில்லை. ஆதலால் கனெக்ட் திரைப்படம் திட்டமிட்டப்படி தமிழகம் முழுவதும் எந்த வித தடையுமின்றி வெளியாகும்.
ஆனால், படக்குழு படத்தை இடைவேளை இல்லாமல் திரையிட சொன்னால், அதை அனுமதிக்க முடியாது. நிச்சயமாக 45 நிமிடத்தில் ஒரு இடைவேளை விடப்படும். அந்த இடைவேளை பார்வையாளர்களுக்கு அத்தியாவசியமானது. பார்த்திபன் இரவின் நிழல் படத்திற்கு இதே போன்ற நடைமுறைதான் பின்பற்றப்பட்டது.” என்றார்.