(Source: ECI/ABP News/ABP Majha)
Nawazuddin Siddiqui: நீங்கள் இந்தப் படத்தில் இல்லை என்று சொன்ன கமல்.. தேம்பித் தேம்பி அழுத நவாசுதீன் சித்திக்!
Nawazuddin Siddiqui: ஹே ராம் படத்தில் தான் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டபோது தேம்பித் தேம்பி அழுததாக நடிகர் நவாசுதீன் சித்திக் தெரிவித்துள்ளார்.
நவாசுதீன் சித்திக்
சினிமா பார்ப்பதைத் தவிர அதனுடன் எந்தவித நேரடி தொடர்பும் இல்லாமல் நடிக்க வந்தவர் நவாசுதீன் சித்திக். டெல்லியில் உள்ள National School Of Dramaவில் நடிப்பு பயிற்சி பெற்று தொடர்ச்சியாக நாடகத்தில் நடித்து வந்தார். இதனைத் தொடர்ந்து பதங் என்கிற படத்தில் அறிமுகமானார். அனுராக் கஷ்யப் இயக்கிய ‘கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர்’, பிளாக் ஃப்ரைடே , ராமன் ராகவ் ஆகிய படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்த நவாசுத்தின், தனது நடிப்பிற்காக சர்வதேச அங்கீகாரம் பெற்றார். தொடர்ந்து பல்வேறு மாறுபட்ட கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறார். தமிழில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பேட்ட படத்தில் வில்லனாக நடித்தார். தற்போது இவர் நடித்துள்ள ரெளத்து கா ராஸ் (Rautu Ka Raaz) திரைப்படம் வரும் ஜூன் 28ஆம் தேதி ஜீ ஃபைவ் தளத்தில் வெளியாக இருக்கிறது. இதுதொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்து வருகிறார் நவாசுதீன்.
ஹே ராம் படத்தில் நீக்கப்பட்ட நவாசுதீன் சித்திக் காட்சிகள்
சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தனக்கு நடிக்க வாய்ப்புகள் வந்து பின் கைவிட்டுப் போன படங்களைப் பற்றி நவாசுதீன் பேசினார். இதில் அவர் "கமல்ஹாசன் இயக்கிய ஹே ராம் படத்தில் நான் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். படம் வெளியாவதற்கு முந்தைய நாள் சிறப்பு திரையிடலின்போது என் நண்பர்களை அழைத்து படம் பார்க்கச் சென்றேன். சரியாக படம் தொடங்குவதற்கு முன் கமல் என்னிடம் வந்து நவாஸ் “உங்கள் நண்பர்களிடம் நீங்கள் இந்தப் படத்தில் இல்லை என்று சொல்லிவிடுங்கள். நீங்கள் நடித்த காட்சியை சென்சார் வாரியம் நீக்கிவிட்டதாக சொன்னார். நான் அதே இடத்தில் தேம்பி தேம்பி அழுதேன். பின் படம் பார்க்க பார்க்க எனக்கு என்னுடைய சோகம் மறைந்துவிட்டது. அந்த அளவிற்கு கமல் ஹே ராம் படத்தை எடுத்திருந்தார் கமல்" என்று கூறியுள்ளார்.
இந்தியாவின் சிறந்த நடிகர் கமல்
தொடர்ந்து கமலின் நடிப்பைப் பற்றி பேசிய அவர் " நான் சென்னைக்கு செல்லும்போதெல்லாம் கமல் சாரை பார்த்து கொஞ்ச நேரம் பேசிவிட்டு வருவேன். கமல் இந்தியாவின் சிறந்த நடிகர். மற்ற சிறந்த நடிகர்களில் ஒருவர் என்று நான் சொல்லவில்லை. அவர்தான் சிறந்த நடிகர் என்று சொல்கிறேன். அவருடைய எல்லா படங்களையும் நான் பார்த்திருக்கிறேன். அவர் செய்திருக்கும் சாதனையை எல்லாம் பேசி முடியாது” எனப் பேசியுள்ளார்.