”பாத்தா பன்னி மாதிரி” : 'நவரசாவும் நெட்ஃப்ளிக்ஸும் என்ன சொல்கிறது?' - கண்டிக்கும் டி.எம்.கிருஷ்ணா & லீனா மணிமேகலை!
சமீபத்தில் நெட்ஃப்ளிக்ஸில் வெளியான ‘நவரசா’ குறும்படத் தொகுப்பில் ஒன்றான ‘சம்மர் ஆஃப் 92: ஹாஸ்யா’ சாதியவாத கருத்துகளோடு இருப்பதாக டி.எம்.கிருஷ்ணா, லீனா மணிமேகலை ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியான ‘நவரசா’ குறும்படத் தொகுப்பில் ஒன்றான ‘சம்மர் ஆஃப் 92: ஹாஸ்யா’ என்ற குறும்படம் சாதியவாத கருத்துகளோடு இருப்பதாக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, திரைப்பட இயக்குநர் லீனா மணிமேகலை ஆகியோர் தங்கள் ட்விட்டர் பக்கங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 6 அன்று, நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியானது ‘நவரசா’ குறும்படத் தொகுப்பு. 9 குறும்படங்களைக் கொண்ட இந்தத் தொகுப்பு, நவரசங்களின் அடிப்படையில் உருவானது. கருணை, சிரிப்பு, அற்புதம், அருவெறுப்பு, சாந்தம், ரௌத்திரம், பயம், வீரம், காதல் ஆகிய ரசவாதங்களைப் பற்றி ஒவ்வொரு குறும்படங்கள் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. ’நவரசா’ தொகுப்பை இயக்குநர்கள் மணி ரத்னம், ஜெயேந்திர பஞ்சபகேசன் ஆகியோர் தயாரித்துள்ளனர். இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள ‘சம்மர் ஆஃப் 92’ என்ற குறும்படம் சிரிப்பு என்னும் உணர்ச்சியின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. மலையாள இயக்குநர் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் இந்தப் படத்தில் நடிகர்கள் யோகி பாபு, ரம்யா நம்பீசன், நெடுமுடி வேணு, ஒய்.ஜி.மகேந்திரா முதலானோர் நடித்துள்ளனர்.
இந்தக் குறும்படம் சாதியவாத கருத்துகளை முன்னிறுத்துவதாக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்த நிலையில், பிரபலங்களும் இதே விமர்சனத்தைக் கூறியிருக்கின்றனர். இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ‘நவரசா தொகுப்பில் வெளிவந்திருக்கும் ’ஹாஸ்யா’ அருவெறுப்பாகவும், சாதியவாதத்தோடு, பாடி ஷேமிங் கருத்துகளையும் முன்வைக்கிறது. இதில் சிரிப்பதற்கு எதுவும் இல்லை. 2021ல் இப்படியாத திரைப்படங்களை நாம் இயக்க முடியாது” என்று காட்டமாகத் தனது விமர்சனத்தைத் தெரிவித்திருந்தார்.
Hasyam in #navarasa is truly disgusting, insensitive, casteist and body shaming. Nothing to laugh about. We cannot make films like this in 2021 Just not done!
— T M Krishna (@tmkrishna) August 8, 2021
தொடர்ந்து அவர், “இந்தப் படம் நமது சமூகத்தில் நிலவும் அருவெறுப்பான நிகழ்வுகளைக் காட்டுவதற்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்” என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
திரைப்பட இயக்குநர் லீனா மணிமேகலை இந்தக் குறும்படம் குறித்து தனது கருத்துகளை ட்விட்டரில் வெளிப்படுத்தியுள்ளார். “பார்த்தா பன்னி மாதிரி இருக்கும்.. ஆனா அது நாய்தான்.. நம்ம வேலுச்சாமி” என்று இந்தப் படத்தில் ஒய்.ஜி.மகேந்திரா பேசும் வசனத்தைக் குறிப்பிட்டிருக்கும் லீனா மணிமேகலை, “நெட்ஃப்ளிக்ஸ் தனது இரட்டை வேடம் கண்டு தலைகுனிய வேண்டும். அமெரிக்காவில் நிறவெறிக்கு எதிரான திரைப்படங்களையும், இந்தியாவில் சாதியவாத கருத்துகளை ஊக்குவிக்கும் திரைப்படங்களையும் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிடுகிறது” என்று கடுமையாக சாடியிருந்தார்.
“பார்த்தா பன்னி மாதிரி இருக்கும்.. ஆனா அது நாய்தான்.. நம்ம வேலுச்சாமி”#Navarasa Episode : 2 - Haasya🤬
— Leena Manimekalai (@LeenaManimekali) August 6, 2021
Shame on you @NetflixIndia #Priyadharshan #Manirathnam
What a hypocrisy @netflix.You play BIPOC friendly, Social Justice keenly in Amerikas and play Casteist in Indias😱
இயக்குநர் லீனா மணிமேகலை கடந்த சில நாட்களுக்கு முன்பு, நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் தொடக்க காலத்தில் சுயாதீனத் திரைப்படங்களுக்கு மதிப்பளித்து செயல்பட்டதாகவும், தற்போது சாதியவாதத்தோடு, சந்தையின் அடிப்படையிலும் திரைப்படங்களைத் தயாரிப்பதாகவும் விமர்சித்திருந்தார்.
இதே குறும்படத் தொகுப்பில் வெளியாகியிருக்கும் ‘இன்மை’ என்ற குறும்படத்தின் போஸ்டரில் திருக்குர்ஆன் வசனம் இடம்பெற்றிருப்பதாகவும், அதனால் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் ரஸா அகாடமி என்ற இஸ்லாமிய அமைப்பு ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்ததோடு, அது ட்ரெண்டிங் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.