Mansoor Ali Khan: சிக்கலில் மன்சூர் அலிகான்.. த்ரிஷா பிரச்சினையில் ஆக்ஷன் எடுத்த தேசிய மகளிர் ஆணையம்..
நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சை பேச்சு பேசிய விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சை பேச்சு பேசிய விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
த்ரிஷா பற்றிய பேச்சு
கடந்த அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி நடிகர் விஜய் நடிப்பில் “லியோ” படம் வெளியானது. இந்த படத்தில் ஹீரோயினாக த்ரிஷா நடித்த நிலையில், முக்கிய வேடத்தில் நடிகர் மன்சூர் அலிகான் நடித்திருந்தார். இதனிடையே சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர் சந்திப்பில் மன்சூர் அலிகான் நடிகை த்ரிஷா தொடர்பாக சில கருத்துகளை தெரிவித்திருந்தார். ”த்ரிஷாவுடன் நடிக்கப்போகிறோம் என்பதால் பெட்ரூம் சீன் எல்லாம் இருக்கும் என நினைத்ததாகவும், த்ரிஷாவை கண்ணிலேயே காட்டவில்லை என மோசமான கருத்துகளை வெளிப்படையாக தெரிவித்தார். இது கடும் கண்டனங்களை பெற்றது.
கண்டனம் - விளக்கம்
நடிகை த்ரிஷாவும் எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மன்சூர் அலிகான் பேச்சை கண்டித்து காட்டமான பதிவு ஒன்றை வெளியிட்டார். ”அவரின் பேச்சு அவமரியாதையான, பெண் வெறுப்புமிக்க, பாலியல் அத்துமீறல் குற்றமாகும்.இதுவரை இவ்வளவு மோசமான ஒருவருடன் திரையைப் பகிர்ந்து கொள்ளாததற்கு நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். இனியும் நடிக்க மாட்டேன்” என தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்பராஜ், நடிகை மாளவிகா மோகனன், நடிகை குஷ்பு உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்க வேண்டும் என நடிகர் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The National Commission for Women is deeply concerned about the derogatory remarks made by actor Mansoor Ali Khan towards actress Trisha Krishna. We're taking suo motu in this matter directing the DGP to invoke IPC Section 509 B and other relevant laws.Such remarks normalize…
— NCW (@NCWIndia) November 20, 2023
ஆனால் நடிகர் மன்சூர் அலிகான் தன்னிலை விளக்கம் ஒன்றை அளித்திருந்தார். அதில், “திரிஷாட்ட தப்பா வீடியோவ காட்டிருக்காங்க. நான் எப்பவும் சக நடிகைகளுக்கு ரொம்ப மரியாத குடுக்கறவன் எல்லாருக்கும் தெரியும். உலகத்துல எத்தனயோ பிரச்சின இருக்கு... பொழப்ப பாருங்கப்பா.... நன்றி!” என தெரிவித்திருந்தார். ஆனால் மன்சூர் அலிகான் விளக்கத்திற்கும் எதிர்ப்புகள் எழுந்தது.
தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கை
இந்நிலையில் நடிகை த்ரிஷா பற்றி அவதூறாக பேசிய நடிகர் மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்துறைக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், “நடிகை த்ரிஷாவை பற்றி நடிகர் மன்சூர் அலிகான் அவதூறாக பேசியது குறித்து தேசிய மகளிர் ஆணையம் கவலை தெரிவிக்கிறது. இந்த விஷயத்தில் ஆணையம் தானாக முன்வந்து, ஐபிசி பிரிவு 509 பி மற்றும் பிற தொடர்புடைய சட்டங்களைப் பயன்படுத்தி மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்ய டிஜிபிக்கு உத்தரவிடுகிறோம். இதுபோன்ற கருத்துக்கள் பெண்களுக்கு எதிரான வன்முறையை சாதாரணமாக்குகின்றன. இது கண்டிக்கப்பட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.