Nassar Brother In Leo: விஜய்யுடன் கூட்டணி... காஷ்மீரில் நடந்த ஷூட்டிங் பற்றி மனம் திறந்த நடிகர் நாசரின் தம்பி!
நாசரின் மூன்று தம்பிகளில் ஒருவரான ஜவஹர் தோற்றத்தில் தன் அண்ணனை அப்படியே உரித்து வைத்துள்ளார்.
தமிழ் சினிமாவின் வில்லன் நடிகராகத் தொடங்கி குணச்சித்திரக் கதாபாத்திரம், ஹீரோ என 35 ஆண்டுகளுக்கும் மேலாக கவனம் ஈர்த்து ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருப்பவர் நடிகர் நாசர். இவரது தம்பி நடிகர் விஜய்யுடன் லியோ படத்தில் நடித்துள்ளது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் உதவி ஒளிப்பதிவாளராக தன் பயணத்தைத் தொடங்கியவர் நடிகர் நாசரின் தம்பி ஜவஹர். நாசரின் மூன்று தம்பிகளில் ஒருவரான ஜவஹர் தோற்றத்தில் தன் அண்ணனை அப்படியே உரித்து வைத்துள்ளார்.
முன்னதாக வெளிநாட்டுப் பணி, வணிகம் என முடித்து திரும்பிய ஜவஹர், பனிவிழும் மலர்வனம், ஜி.வி. 2 ஆகிய படங்களில் நடித்து கவனமீர்த்துள்ளார்.
இந்நிலையில், நடிகர் விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் நட்சத்திரப் பட்டாளத்துடன் உருவாகி வரும் லியோ படத்தில் முன்னதாக ஜவஹர் நடித்து முடித்துள்ளார். இதுகுறித்துப் பேசிய ஜவஹர், “நான் என்ன கதாபாத்திரம் ஏற்றுள்ளேன் என்பது பற்றிக் கூற முடியாது. லியோ படத்துக்காக காஷ்மீரில் நான் 40 நாள்கள் தங்கி இருந்தேன். என் பகுதி 15 நாள்கள் வரை படமாக்கப்பட்டது" எனத் தெரிவித்துள்ளார்.
லியோ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று முடிந்த நிலையில், சென்னை, பிரசாத் ஸ்டுடியோவில் தற்போது இரண்டாம்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
சஞ்சய் தத், த்ரிஷா, அர்ஜூன், மன்சூர் அலிகான், மிஷ்கின், கவுதம் மேனன், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர் என மிகப்பெரும் நட்சத்திரப் பட்டாளமே இந்தப் படத்தில் இணைந்துள்ளது.
செவன் ஸ்க்ரீன் பேனரின் கீழ் லலித்குமார் இந்தப் படத்தை தயாரிக்கும் நிலையில், அனிருத் இப்படத்துக்கு இசையமைக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். அன்பறிவு சண்டைக் காட்சிகளை வடிவமைக்கும் நிலையில், தினேஷ் மாஸ்டர் நடன இயக்குநராக இப்படத்தில் பணியாற்றுகிறார்.
முன்னதாக லியோ படத்துக்காக பாடல் இன்றுக்கு இரண்டாயிரம் டான்சர்கள் பயன்படுத்தப்பட உள்ளதாகவும், ஈசிஆரில் உள்ள ஆதித்யராம் ஸ்டுடியோவில் இந்தப் பாடல் காட்சி பயன்படுத்தப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
இப்படத்துக்காக 120 கோடிகள் வரை நடிகர் விஜய்க்கு சம்பளம் பேசப்பட்டதாக முன்னதாகத் தகவல்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகின. மேலும் இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் வணிகம் 400 கோடி வரை நடைபெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக இதேபோல் கேரள நடிகர் ஜோஜூ ஜார்ஜ், நடிகை சாந்தி மாயாதேவி ஆகியோர் லியோ படத்தில் இணைந்திருக்கும் தகவல் வெளியாகி வைரலானது. இந்த ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி லியோ திரைப்படம் வெளியாகும் என ஏற்கெனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.