‛வாங்கும் எதையும் எடுத்துச் செல்லப் போவதில்லை...’ தேசிய விருது பற்றி நஞ்சியம்மாள் ‛நச்’ பேட்டி!
Nanjiyamma Interview: எனக்கு இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த மகிழ்ச்சி மக்களால் கிடைத்தது. அவர்கள் தான், என்னை முன்னும், பின்னும் அழைத்துச் சென்றவர்கள்.
சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தேசிய விருது பட்டியலில், மலையாளப்படமான ஐயப்பனும் கோஷியும் படத்தில் பாடிய ‛கலக்காதா’ பாடல் மூலம், பட்டி தொட்டியெல்லாம் பெயர் பெற்ற நஞ்சியம்மாவுக்கு, சிறந்த பாடகிக்கான விருது கிடைத்தது.
மறைந்த இயக்குனர் சஜி இயக்கி, பிரதீவிராஜ்-பிஜூ மேனன் இயக்கிய ஐயப்பனும் கோஷியும், 2020 ல் வெளியாகி , மலையாளம் மட்டுமின்றி, பிற மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் பட்டியல் இன வகுப்பைச் சேர்ந்த நஞ்சியம்மாவுக்கு கிடைத்துள்ள இந்த தேசிய புகழ், அவரை மிகவும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
தனக்கு கிடைத்த முதல் வாய்ப்பை, தேசிய விருதுக்கு கொண்டு சென்ற அந்த பாரம்பரிய பாடகரின் மனநிலை குறித்து, கேரளாவின் முன்னணி ஊடகம் ஒன்று பேட்டி எடுத்துள்ளது. அப்போது அவர் அளித்த பேட்டி, மிகவும் நெருக்கமாகவும், உருக்கமாகவும் இருந்தது. இதோ அந்த பேட்டி...
சஜி சாரின் மனதில் நான் தோன்றி, யாராலும் அறியப்படாத என்னை, அறிமுகப்படுத்தியவர் சஜி சார் தான். ஆடு மேய்த்து, மாடு மேய்த்து, இன்னும் எல்லா தொழிலும் செய்து கொண்டிருந்த என்னை திரையில் காட்டி, எனக்கு பெருமை சேர்த்தவர்கள் பழனிச்சாமியும், சஜி சாரும் தான்.
சஜி சாரும், இந்த மக்களும் சேர்ந்து தான் எனக்கு அங்கீகாரம் தந்தனர். என்னை ஆட வைத்து, பாட வைத்து, திரை மூலம் உலகம் எல்லாம் நான் தெரிந்தேன். எனக்கு உலகத்தை காட்டி விட்டு சஜி சார் மறைந்துவிட்டார். நானும் என்றாவது ஒருநாள் இறக்கும் நபர் தான். ஆனால், அவர் மறைந்த பிறகும், என்னை அடையாளம் காட்டியிருக்கிறார். அவரால் தான் நான் அடையாளம் பெற்றேன். அவரைப் போன்ற புகழை தான் நான் பெற வேண்டும்.
எனக்கு இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த மகிழ்ச்சி மக்களால் கிடைத்தது. அவர்கள் தான், என்னை முன்னும், பின்னும் அழைத்துச் சென்றவர்கள். மக்களை மகிழ்விப்பதில் இருந்து நான் பின்வாங்க மாட்டேன். இந்த விருதால் நான் மகிழ்ச்சியடைந்ததைப் போலவே, மக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளார்கள். நம் நாட்டுக்கு ஒரு பெருமை கிடைத்தால், அதை விட எனக்கு பெரிய மகிழ்ச்சி இல்லை.
நாம் வாங்கும் எதையும் போகும் போது கொண்டு செல்வதில்லை. வைத்துவிட்டுக்ஷ தான் செல்லப் போகிறோம். இருந்தாலும் அது பேர் சொல்ல வேண்டும், மறைந்தாலும் பெயர் சொல்ல வேண்டும். இன்னும் பலர் இது போல முன்னோக்கி வர வேண்டும். வருவார்கள். நான் மட்டும் முன்னோக்கி செல்லக்கூடாது; என்னைப் போல் பிறரும் முன்னோக்கி வர வேண்டும். அதற்கான அங்கீகாரம் பெற வே்ண்டும்.
எல்லா மக்களுக்கும் ஒரு கனவு உண்டு. என்னைப் போல அவர்களுக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்து, அவர்கள் அதை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். வெளியே தெரிந்தாலும், தெரியாமல் போனாலும் அவர்களால் முடிந்ததை அவரவர் செய்ய வேண்டும், என்னைப் போல.