சனாதன தர்மத்தின் சக்தியை காட்டும் அகண்டா 2..சென்னைக்கு வந்து சவால்விட்ட பாலையா
அகண்டா 2 திரைப்படத்தின் தமிழ் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் பாலையா சனாதன தர்மத்தைப் பற்றி பேசிய கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தெலுங்கில் பாலையா நடித்துள்ள அகண்டா 2 தாண்டவம் திரைப்படம் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகிறது. தமிழ் , இந்தி , தெலுங்கு என பான் இந்திய அளவில் வெளியாகும் அகண்டா 2 படத்தின் தமிழ் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பாலையா அகண்டா படத்தை சனாதன தர்மத்தோடு தொடர்புபடுத்தி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
என் சொந்த வீடு தமிழ்நாடு
என் சொந்த வீட்டுக்கு வந்தது போல உள்ளது. நான் இங்கு தான் பிறந்தேன். அகண்டா 2 விழாவிற்கு வருகை தந்துள்ள அனைவருக்கும் என் நன்றிகள். என் உயிருக்கு இணையான தமிழ் நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் என் நன்றிகள். சென்னை என் ஜென்ம பூமி, ஆந்திரா ஆத்ம பூமி. என் அப்பா என் டி ஆரின் வாழ்க்கையெல்லாம் இங்கு தான் நடந்தது. மக்கள் திலகம் எம் ஜி ஆர், நடிகர் திலகம் சிவாஜியுடன் என் அப்பாவின் நட்பை, அன்பை மறக்க முடியாது. என் அப்பா என் டி ஆர் தமிழ் நாட்டின் மீது மிகுந்த அன்போடு இருந்தார்.
அகண்டா 2
அகண்டா முதல் பாகம் வெளிவந்த போது இப்படம் பார்க்க ஆள் வருமா? என நினைத்தோம். ஆனால் இம்மாதிரி படம் ரசிகர்களுக்கு கண்டிப்பாக தர வேண்டும் என உருவாக்கினோம். அது சூப்பர் ஹிட்டானது. இம்மாதிரி படங்களை ரசிகர்கள் பார்க்கிறார்கள் என தைரியம் வந்தது, போயபாடி ஶ்ரீனுவுடன் எனக்கு நாலாவது படம். எல்லாமே சூப்பர் ஹிட். அவருடன் கதை கூட அவ்வளவாக விவாதிக்க மாட்டேன். இந்தப்படம் 130 நாட்களில் முடிந்த விட்டது.
சனாதன தர்மத்தைப் பற்றி
இது சீக்குவல் இல்லை, இது இந்து தர்மத்தை, கலாச்சாரத்தை போற்றும் ஒரு படைப்பு. நம் இனத்திற்கும் கலாச்சாரத்திற்குமான வெற்றி. நம் பண்பாடுகளை, சனாதான தர்மத்தை இந்த தலைமுறை தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு இந்தப்படம். சனாதான தர்மத்தை சக்தியை இந்தப்படத்தில் காட்டியுள்ளோம். தர்மத்திற்காக நாம் போராட வேண்டும். என் அப்பா தான் என் தெய்வம் அவர் எல்லா வகையிலும் படம் செய்துவிட்டார், நான் ரொம்ப அதிர்ஷடசாலி. நான் திரைக்கு வந்து 50 வருடமாகிவிட்டது. அவர்கள் ஆசியில் இன்னும் ஹீரோவாக நடிக்கிறேன். 4 படம் தொடர் வெற்றி. ரசிகர்கள் இம்மாதிரி படங்களுக்கு காத்திருக்கிறார்கள். இப்படத்தில் உழைத்த அனைவருக்கும் என் நன்றிகள். டிசம்பர் 5 ஆம் தேதி வருகிறது அனைவரும் படம் பாருங்கள். கொண்டாடுங்கள் நன்றி." என்று பேசினார்.





















