Custody Trailer: "உண்மை பக்கம் நில்லு.. லைஃப்பே மாறும்.." ரசிகர்கள் எதிர்பார்ப்பை எகிற வைத்ததாக கஸ்டடி ட்ரெயிலர்..?
வெங்கட் பிரபு இயக்கத்தில் நாகசைதன்யா நடிப்பில் உருவாகியுள்ள கஸ்டடி திரைப்படத்தின் ட்ரெயிலர் இன்று ரிலீசாகியுள்ளது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நாகசைதன்யா. இவர் இதுவரை நேரடி தமிழ் படங்களில் நடித்ததில்லை. இந்த நிலையில், தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் வெங்கட்பிரபு. இவரது இயக்கத்தில் நாகசைதன்யா முதன்முறையாக ஜோடி சேர்ந்துள்ள முதல் திரைப்படம் கஸ்டடி.
கஸ்டடி ட்ரெயிலர்:
மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் ட்ரெயிலர் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தில் போலீஸ் கான்ஸ்டபிளாக நாகசைதன்யா நடித்துள்ளார். இன்று வெளியாகியுள்ள ட்ரெயிலர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆக்ஷன், அதிரடி, திரில்லர் படமாக இந்த படம் உருவாகியிருப்பதை ட்ரெயிலர் உறுதி செய்துள்ளது.
கடந்த காலங்களில் தமிழ் சினிமாக்களை கலக்கிய கதாநாயகர்கள் இந்த படத்தில் வில்லன்களாக மிரட்டியுள்ளனர். சமீபகாலமாக வில்லன் கதாபாத்திரத்திலும், குணச்சித்திர கதாபாத்திரத்திலும் மிரட்டி வரும் நடிகர் சரத்குமார் இந்த படத்திலும் மிரட்டியுள்ளார். ரவுடியாக அர்விந்த் சாமி நடித்துள்ளார்.
நேர்மையான போலீசாக நாகசைதன்யா:
இவர்களுடன் கயல் ஆனந்தி, கிரித்திஷெட்டியும் இணைந்து நடித்துள்ளனர். கிரித்தி ஷெட்டி நாகசைதன்யாவிற்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர்களுடன் இந்த படத்தில் பிரயாமணி முதலமைச்சராக நடித்துள்ளார். இந்த படத்திற்கு யுவன்சங்கர்ராஜா – இளையராஜா இணைந்து இசையமைத்துள்ளனர். ஏற்கனவே கஸ்டடி படத்தில் இருந்து 2 பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது கஸ்டடி படத்தின் ட்ரெயிலரும் ரிலீசாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
குறிப்பாக, ட்ரெயிலரின் இறுதியில் வரும் ஒரு முறை உண்மைக்காக நின்று பாரு.. உன் லைஃப்பே மாறும்… உண்மை ஜெயிக்க லேட் ஆகும்.. ஆனால், கண்டிப்பா ஜெயிக்கும் போன்ற வசனங்கள் படத்தில் ஒரு நேர்மையான போலீசாக நாகசைதன்யா நடித்திருப்பதை காட்டுகிறது. மாநாடு படத்தின் வெற்றிக்கு பிறகு வெங்கட்பிரபு இயக்கிய மன்மதலீலை படம் பெரியளவில் வெற்றி பெறவில்லை.
மிகுந்த எதிர்பார்ப்பு:
இந்த நிலையில், நாகசைதன்யா நடிப்பில் முதன்முறையாக நேரடியாக தமிழில் வெளியாகும் கஸ்டடி படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கிலும் வெளியாகும் இந்த படம் வெங்கட்பிரபு இயக்கத்தில் நேரடியாக தெலுங்கில் வெளியாகும் முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: The untold story re-release : தோனி ரசிகர்களுக்கு ட்ரீட்... ரீ ரிலீஸ் செய்யப்படும் எம்.எஸ் தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி
மேலும் படிக்க: Top Entertainment Headlines Today: கலகலப்பா..? கலவரமா..? சுடச்சுட சினிமா தலைப்புச்செய்திகள்..!