The untold story re-release : தோனி ரசிகர்களுக்கு ட்ரீட்... ரீ ரிலீஸ் செய்யப்படும் எம்.எஸ் தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி
'எம்எஸ் தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி’ திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்படவுள்ளது. இந்த தகவல் உலகெங்கிலும் உள்ள தோனி ரசிகர்களை சந்தோஷத்தில் துள்ள வைத்துள்ளது.
ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நீரஜ் பாண்டே இயக்கத்தில், சுஷாந்த் சிங் ராஜ்புத் நடிப்பில் கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30ம் தேதி வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் 'எம்எஸ் தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி’. கிரிக்கெட் வீரரான மகேந்திர சிங் தோனியின் பையோபிக் படத்தில் திஷா பதானி, கியாரா அத்வானி, அனுபம் கெர், அலோக் பாண்டே , கிராந்தி பிரகாஷ், பூமிகா சாவ்லா மற்றும் பலர் நடித்திருந்தனர். கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம் இரட்டிப்பு வசூலாக 200 கோடி வரை வசூலித்து அமோகமான வரவேற்பை பெற்றது.
மாபெரும் வெற்றிப்படமாக அமைந்த 'எம்எஸ் தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி’ திரைப்படத்தை ரீ ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இப்படம் வரும் மே 12ம் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது என்ற அதிகாரபூர்வமான தகவலை வெளியிட்டுள்ளது படக்குழு. இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
நட்சத்திர கிரிக்கெட் வீரரான தோனியின் பயணத்தை பற்றிய இப்படம் உலகெங்கிலும் உள்ள இந்தியர்களுக்கு ஒரு சிறப்பு வாய்ந்த திரைப்படமாக அமைந்தது. ஒரு வெற்றிகரமான கேப்டனின் பயணத்தை ரீ ரிலீஸ் செய்வது நாடு முழுவதிலும் மற்றும் உலக அளவில் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு மேஜிக் தருணத்தை வழங்கப்போகிறது.
நடிகர் சுஷாந்த் சிங் திரை பயணத்தில் இப்படம் ஒரு திருப்புமுனையாக அமைந்த ஒரு படம். அந்த ஆண்டிற்கான சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார். 2020ம் ஆண்டு அவரின் மறைவு செய்தியை கேள்விப்பட்ட கிரிக்கெட் வீரர் தோனி மிகவும் மனம் உடைந்து போனதாக தெரிவித்து இருந்தார். இப்படம் ரீ ரிலீஸ் செய்யப்படுவது தோனி மற்றும் சுஷாந்த் சிங் இருவரின் ரசிகர்களும் பேரானந்தத்தில் உள்ளனர்.