Nadigar Sangam Election: “வாக்கு எண்ணிக்கையில் திருப்தி இல்லை” - கே. பாக்யராஜ் பகிரங்க குற்றச்சாட்டு
நாசர், விஷால், கார்த்தி, கருணாஸ், பூச்சி முருகன் உள்ளிட்டோர் அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கின்றனர்.
நடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் எங்களுக்கு திருப்தி இல்லை என்று வாக்கு எண்ணிக்கை நிறுத்தம் குறித்து பாக்யராஜ் கூறினார்.
கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலின்போது பதிவான வாக்குகளை எண்ணும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பதிவானதை விட 5 வாக்குகள் கூடுதலாக இருந்ததாக கூறி ஐசரி கணேஷ் எதிர்ப்பு தெரிவித்ததால் துணைத் தலைவர் பதவிக்கு விஷால் அணியின் பூச்சி முருகன் முன்னிலை பெற்ற நிலையில், வாக்குகள் எண்ணும் பணி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை குறித்து சங்கரதாஸ் சுவாமிகள் அணி சார்பில் கே.பாக்யராஜ், ஐசரி கணேஷ் ஆகியோர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். நடிகர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகளைவிட கூடுதல் வாக்குச் சீட்டுகள் இருந்ததாக சங்கரதாஸ் சுவாமிகள் அணி புகார் கூறி உள்ளது. கூடுதல் வாக்கு தொடர்பாக பேச்சு நடந்து கொண்டிருந்தபோதே வாக்கு எண்ணிக்கையை மீண்டும் தொடங்கியதாக பாக்யராஜ் கூறினார். நடிகர் சங்க தேர்தலில் பெற்றி, தோல்வி பற்றி கவலை இல்லை என்றும், பதிவான வாக்குகளை விட அதிக வாக்குகள் இருக்கின்றன எனவும், கூடுதல் வாக்குகள் பதிவாகியிருக்கும் நிலையிலும், வாக்கு எண்ணிக்கையை நடத்துகிறார்கள் எனவும் கூறினார். மேலும், வாக்கு எண்ணிக்கை குளறுபடி இருந்தாலும், முழு ஒத்துழைப்பு வழங்குவோம் என்றும் பாக்யராஜ் அறிவித்துள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தம்..!
யார் பொறுப்பு ஏற்றாலும் மீண்டும் 3 மாதத்திற்கு பிறகு தேர்தல் நடத்த வேண்டும் என்றும், முடிவு எதுவானாலும் நடிகர் சங்க கட்டடம் கட்ட நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம் எனவும் ஐசரி கணேஷ் கூறினார்.
இந்த நிலையில், துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்ட நிலையில் பேச்சுவார்த்தை பின் வாக்கு எண்ணிக்கை மீண்டும் தொடங்கியது. நாசர், விஷால், கார்த்தி, கருணாஸ், பூச்சி முருகன் உள்ளிட்டோர் அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கின்றனர். தலைவர், 2 துணைத்தலைவர்கள், பொதுச்செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு கடந்த 2019இல் தேர்தல் நடைபெற்றது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்