Bhagavanth Kesari: விஜய்யுடன் மோதும் பாலையா.. 19-ந் தேதி ரிலீசாகும் பகவந்த் கேசரி
பாலய்யா என்று ரசிகர்களாக செல்லமாக அழைக்கப்படும் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகி இருக்கும் பகவந்த் கேசரி படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது.
பாலையா
ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் என்.டி.ராமா ராவின் மகன் நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா. தெலுங்குத் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை அங்கீகரிக்கும் வகையில் ஆந்திரப் பிரதேச அரசு வழங்கும் நந்தி விருதை மூன்று முறை பெற்றுள்ளார் நடிகர் பாலகிருஷ்ணா.
நரசிம்ம நாயுடு படத்திற்காக 2001ல், சிம்ஹா படத்திற்காக 2010ல் மற்றும் லெஜண்ட் படத்திற்காக 2014ம் ஆண்டும் சிறந்த நடிகருக்கான நந்தி விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது . 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள பாலகிருஷ்ணா நடிப்பில் சமீபத்தில் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் 'வீர சிம்ஹா ரெட்டி' திரைப்படம் வெளியானது.
சமூக சேவை
நடிகராக மட்டுமில்லாமல் பல்வேறு சமூக செயல்பாடுகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார் பாலையா என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் பாலகிருஷ்ணா. பசவதாரகம் இந்தோ அமெரிக்கன் கேன்சர் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஐதராபாத்தில் இயங்கி வருகிறது. அந்த மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி கூடத்தில் உள்ள பல நோயாளிகளுக்கு இலவச சிகிச்சைகளை மேற்கொள்ள நடிகர் பாலகிருஷ்ணா உதவி செய்து வருகிறார்.
பகவந்த் கேசரி
தற்போது பாலையா நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் பகவந்த் கேசரி படத்தில் ட்ரெய்லர் வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த ட்ரெய்லரில் தன்னை இணையதளத்தில் ட்ரோல் செய்வது குறித்து பதில் அளித்துள்ளார் நடிகர் பாலகிருஷ்ணா.
ட்ரெய்லர் எப்படி
காஜல் அகர்வால் , ஸ்ரீலீலா, அர்ஜுன் ராம்பால் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள இந்தப் படத்தை அனில் அவிபுடி இயக்கி இருக்கிறார். தமன் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ஒரு பாலையா ரசிகர் எதிர்பார்க்கக் கூடிய செண்டிமெண்ட் ஆக்ஷன் என அத்தனை அம்சங்களும் இந்த ட்ரெய்லரில் இருக்கின்றன. ட்ரெய்லரின் தொடக்கத்தில் தனது தங்கையை எப்படியாவது போலீஸ் ஆபீசராக்க வேண்டும் என்கிற கனவில் அவருக்கு கடுமையான பயிற்சி அளிக்கிறார் பாலையா.
தனது தங்கையை பெண் சிங்கத்தைப் போல் உறுதியானவளாக மாற்ற வேண்டும் என்பதே அவரது லட்சியம் என்று கூறுகிறார். இந்த லட்சியத்தை தடுக்கும் நோக்கத்தில் வில்லனாக வருகிறார் அர்ஜூன் ராம்பால். தனது குடும்பத்திற்காக வில்லன்களை தன் ஸ்டைலில் அடித்து துவம்சம் செய்கிறார் பாலையா. பொதுவாகவே பாலையா படங்கள் வெளியாகும் போது இணைய வாசிகளால் ட்ரோல் செய்யப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த ட்ரோல்களுக்கு பதில் சொல்லும் வகையில் இந்த ட்ரெய்லரின் கடையில் ஐ டோண்ட் கேர் என்கிற வசனம் பேசுகிறார். இதனால் பாலையா ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளார்கள்.
விஜய்யுடன் மோதும் பாலையா
பகவந்த் கேசரி திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதே நாளில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் லியோ திரைப்படமும் வெளியாக இருக்கிறது. தமிழ், தெலுங்கு,கன்னடம் , இந்தி , மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் லியோ திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் பகவந்த் கேசரித் திரைப்படத்திற்கு வசூல் ரீதியாக பெரிய சவால் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்