Parasakthi: “திரையில் என்னை பார்த்த மாதிரி இருக்கு”.. பராசக்தி பார்த்த சீமான்.. கலகல விமர்சனம்!
படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் தம்பி சிவகார்த்திகேயன் கையை உயர்த்தி தமிழ் வாழ்க என கத்தியதைப் பார்த்தபோது நானே கத்தியது போல இருந்தது என சீமான் கூறியுள்ளார்.

சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி படத்தை ஒரு மொழி போராட்ட வரலாறாக பார்க்க வேண்டாம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சுதா கொங்கரா இயக்கிய பராசக்தி படம் ஜனவரி 10ம் தேதி வெளியானது. சிவகார்த்திகேயன் ஹீரோவாகவும், ஸ்ரீலீலா ஹீரோயினாகவும் நடித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் ரவி மோகன், அதர்வா முரளி, சேத்தன், குரு சோமசுந்தரம், பைசல் ஜோசப், ராணா டகுபதி என ஏகப்பட்ட பேர் நடித்திருந்தனர். டான் பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்திருந்தார்.
இந்த படம் ரசிகர்களிடத்தில் கலவையான விமர்சனத்தைப் பெற்றது. மேலும் பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்துள்ள நிலையில் ரூ.49 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் பராசக்தி படத்தை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பார்த்து பாராட்டியுள்ளார்.
The fun in between all the tension ❤️#Parasakthi - a winning run in theatres now, witness it on the big screens!#ParasakthiPongal@siva_kartikeyan @Sudha_Kongara @iam_ravimohan @Atharvaamurali @gvprakash @DawnPicturesOff @redgiantmovies_ @Aakashbaskaran @sreeleela14… pic.twitter.com/mFmEDMSaQn
— DawnPictures (@DawnPicturesOff) January 18, 2026
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், “எனக்கு நிறைவு என்னவென்று கேட்டால், ஒரு தமிழ் படத்தில் தமிழ் வாழ்க என ஒரு சத்தம் கேட்குது. அது வியக்கத்தக்கதாக இருந்தது. படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் தம்பி சிவகார்த்திகேயன் கையை உயர்த்தி தமிழ் வாழ்க என கத்தியதைப் பார்த்தபோது நானே கத்தியது போல இருந்தது. தமிழினம் தலைமுறையினர் இதுதான் நமது மொழிப்போராட்ட வரலாறு என நினைத்து விடக்கூடாது. அது தனியாக இருக்கிறது. அதுதொடர்பாக நான் நிறைய புத்தகங்களை வெளியிட்டுள்ளேன். அதில் சிலருடைய பெயர் விடுபட்டு விட்டது. உண்மையான போராட்ட வரலாறு தொடர்பான பதிவுகள் இருக்கிறது. அதைத்தான் நம்ம பிள்ளைகள் படிக்க வேண்டும்.
அந்த பின்புலத்தை எடுத்துக் கொண்டு அதற்கு திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். இந்த படம் எடுத்த விதம், நடித்த பிரபலங்கள், ஒளிப்பதிவு, இசையமைப்பு என அனைத்தும் மிக நேர்த்தியாக இருந்தது. சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா ஆகிய 3 பேரை வைத்து ஒரு படத்தை எடுத்து விட வேண்டும் என ஒரு பெண் இயக்குநர் நினைப்பதே பெரிது. இது ஒரு பெரிய முயற்சி. எளிதாக யாரும் தொட்டு விட முடியாது. உண்மையான மொழிப்போராட்டம் திரைக்கு வராது.
பிரச்னை ஏற்படும்.
அதனால் அதில் சில விஷயங்களை கடந்து இயக்குநர் சுதா கொங்காரா நல்ல படமாக எடுத்திருக்கிறார். எல்லாருடைய பங்களிப்பும் அருமையாக வந்துள்ளது. இயக்குநர் சுதா கொங்காராவுக்கு வாழ்த்துகள். ஒரு பிரச்னையான கதைக்களத்தை எடுத்து வெற்றி பெற்றிருக்கிறார். ஒரு படத்தை படமாக பாருங்கள். இதுதான் நம் மொழி போராட்ட வரலாறு என பார்க்காதீர்கள்.





















