மைசூரு ஃபில்ம் சிட்டி வேலைகள் இந்த ஆண்டு தொடங்கும்: முதல்வர் பசவாராஜ் பொம்மை
மைசூரு ஃபில்ம் சிட்டி வேலைகள் இந்த ஆண்டு தொடங்கும்: முதல்வர் பசவாராஜ் பொம்மை
மைசூரு ஃபில்ம் சிட்டி வேலைகள் இந்த ஆண்டு தொடங்கும் என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். மைசூரு ஃபில்ம் சிட்டி அமைக்கும் பணியானது 1972 முதலே பேசப்பட்டு வருகிறது. இறுதியாக 2015 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் எடியூரப்பா மைசூரு ஃபில்ம் சிட்டி ஹிம்மாவா எனுமிடத்தில் அமைக்கப்படும் என அறிவித்து ரூ.500 கோடி நிதியும் ஒதுக்கினார்.
இந்நிலையில் மைசூரு ஃபில்ம் சிட்டி வேலைகள் இந்த ஆண்டு தொடங்கும் என தற்போதைய முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் எம்ஜிஆர் ஃபில்ம் சிட்டி, ஹைதராபாத்தில் ராமோஜி ஃபில்ம் சிட்டி போல் கர்நாடகாவிலும் அமைய வேண்டும் என்பது கர்நாடக திரைத்துறையினரின் நீண்ட கால ஆசை.
இந்நிலையில், 2017 ஆம் ஆண்டுக்கான மாநில திரைப்பட விருதுகள் வழங்கும் விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை பெங்களூருவில் நடந்தது. இந்த விழாவில் மூத்த நடிகை லக்ஷ்மிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் பசவராஜ் பொம்மை, கர்நாடக அரசு எப்போதுமே கன்னட திரைப்படங்கள் புதிய உச்சத்தை எட்ட வேண்டும் என்பதற்கான ஊக்கத்தை அளித்து வருகிறது. அதனாலேயே இந்த பட்ஜெட்டில் அரசு மானியம் 125 என்பதற்காக இருந்த அளவை 200 என்று உயர்த்தியுள்ளது.
மறைந்த நடிகர் புனீத் ராஜ்குமாருக்கு கர்நாடகா ரத்னா விருது வழங்குவதற்கான பணிகள் விரைவில் முன்னெடுக்கப்படும் என்றார். 46 வயதான கன்னட பவர் ஸ்டார் நடிகர் புனீத் ராஜ்குமார், கடந்த அக்டோபர் 29, பெங்களூரில் மாரடைப்பால் இறந்தார். தமிழில் வெளியான நாடோடிகள், போராளி உள்ளிட்ட படங்களின் கன்னட ரீமேக்கில் அவர் நடித்திருந்தார். அதுமட்டுமின்றி தமிழ் திரையுலகோடு தொடர்ந்து நெருங்கிய தொடர்பில் இருந்துவந்தவர். 6 மாத குழந்தையாக இருந்தபோதே குழந்தை நட்சத்திரமாக திரையுலகுக்கு அறிமுகமானவர். சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதை 1985ஆம் ஆண்டு அவர் பெற்றார். நடிகராக மட்டுமின்றி பாடகராகவும், தயாரிப்பாளராகவும், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் அவர் பணியாற்றியவர். இவர் பிரபல நடிகர் டாக்டர் ராஜ்குமாரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து அவர் மூத்த நடிகை லக்ஷ்மிக்கு டாக்டர் ராஜ்குமார் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கினார். புட்டண்ணா கனகல் விருது மூத்த இயக்குநர் எஸ்.நாராயணனுக்கும் விஷ்ணுவர்த்தன் விருது மறைந்த தயாரிப்பாளர் ஜி.என்.லக்ஷ்மிபதிக்கும் வழங்கப்பட்டது. அவர் சார்பில் அவரது மகன் ராம் பிரசாத் விருதினைப் பெற்றுக் கொண்டார்.
விருது வழங்கலுக்குப் பின்னர் பேசிய முதல்வர் பசவராஜ் பொம்மை, முன்னாள் நடிகர் டாக்டர் ராஜ்குமாருடனான தனது இனிமையான நினைவுகளைப் பற்றி பகிர்ந்து கொண்டார். டாக்டர் ராஜ்குமார் இந்திய சினிமாவின் மிகப்பெரிய ஆளுமை என்று புகழ்ந்தார். புராணக் கதைகளாக இருக்கட்டும் சமூக அக்கறை கொண்ட படமாக இருக்கட்டும் அனைத்து கதாபாத்திரங்களில் கச்சிதமாகப் பொருந்தி மக்களை ஈர்த்தவர் ராஜ்குமார் என்று புகழ்ந்தார். டாக்டர் ராஜ்குமார் மண்ணை விட்டு மறைந்தார். ஆனால் நம் மனங்களைவிட்டு மறையவில்லை. விவேகனந்தர் சொன்னது போல் சாதனையாளர்களுக்கு மரணம் முடிவல்ல. மரணத்துக்குப் பின்னரும் அவர்கள் வாழ்ந்து கொண்டே இருப்பார்கள் என்று கூறினார்.