13 Years of Nandalala: அன்னையைத் தேடிய இரு மகன்களின் பயணம்... 13 ஆண்டுகளை கடந்த மிஸ்கினின் ‘நந்தலாலா’
இயக்குநர் மிஸ்கின் இயக்கி நடித்த நந்தலாலா திரைப்படம் வெளியாகி இன்றுடன் 13 ஆண்டுகள் கடந்துள்ளன
நந்தலாலா
இயக்குநர் மிஸ்கின் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் நந்தலாலா இன்றுடன் 13 ஆண்டுகளை கடந்துள்ளது.
ஜப்பானிய இயக்குநர் டகேஷி கிடானோ இயக்கத்தில் வெளியான கிகுஜிரோ என்கிற படத்தை மையமாக வைத்து மிஸ்கின் இயக்கியத் திரைப்படம் தான் நந்தலாலா. ( இதை மிஸ்கின் இன்றுவரை ஏற்றுக்கொள்ளாமல் இது தன்னுடையை சொந்த ஐடியா என்று சொல்வதை நம்புபவர்களும் உண்டு). இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்தார்.
மனநலம் குன்றிய ஒருவரும் ஒரு பள்ளிச் சிறுவன் ஆகிய இருவரும் தங்களது அன்னையைத் தேடிச் செல்லும் ஒரு பயணமே நந்தலாலா திரைப்படம். ஒருவர் அன்னவயல் என்கிற ஊருக்கும் இன்னொருவர் தாய்வாசல் என்கிற ஊருக்கும் கிளம்பிச் செல்கிறார்கள். ஒருவர் தன்னுடைய தாயின் பாசத்திற்காக செல்கிறார். இன்னொருவர் தன் தாயின் மீதான கோபத்தில் அவரைப் பார்க்கச் செல்கிறார். ஆனால் உண்மையில் இந்த இருவரும் ஒரே நபரின் இரண்டு காலங்கள். இந்த இருவரின் பயணத்தில் இவர்கள் சந்திக்கும் மனிதர்களின் வழியே சமூகத்தின் மீதான விமர்சனங்களையும் மானுடத்தின் மீதான வெளிச்சத்தையும் காட்டிச் செல்கிறார் இயக்குநர் மிஸ்கின்.
தான் இயக்கிய முதல் படமான சித்திரம் பேசுதடி படத்தைத் தொடர்ந்து நந்தலாலா படத்தின் திரைக்கதையை எழுதத் தொடங்கினார் இயக்குநர் மிஸ்கின். ஆனால் அப்போது இந்தப் படத்தினை தயாரிக்க எந்த தயாரிப்பாளரும் முன்வரவில்லை. தொடர்ந்து மிஸ்கின் இயக்கிய அஞ்சாதே படம் மிகப்பெரிய வெற்றியடைந்ததைத் தொடர்ந்து நந்தலாலா படத்தை ஐங்கரன் ப்ரோடக்ஷன்ஸ் தயாரிக்க முன்வந்தது. இந்தப் படத்தில் நடிப்பதற்காக பல்வேறு முன்னணி நடிகர்களிடம் கதை சொன்னார் மிஸ்கின் நடிகர் விக்ரம் உட்பட ஆனால் இந்த படத்தில் நடித்தால் தங்களது இமேஜ் பாதிக்கப்படும் என்று அனைவரும் இதில் நடிக்க மறுத்துவிட்டனர். வேறு வழியில்லாத மிஸ்கின் இந்தப் படத்தில் தானே நடிக்க முடிவு செய்தார். கிட்டத்தட்ட 100 சிறுவர்களை ஆடிஷன் செய்தபின் அஷ்வந்த் ராம் சிறுவன் கதாபாத்திரத்தில் நடிக்க தேர்வு செய்யப்பட்டார். நந்தலாலா தன்னுடைய கனவுப்படம் என்றும் இயக்குநர் மிஸ்கின் குறிப்பிட்டுள்ளார்.
தன்னுடைய முந்தைய இரண்டு படங்களை கமர்ஷியலாக எடுத்த மிஸ்கின் எந்த் விதமான சமரசமும் இல்லாமல் நந்தலாலா படத்தை இயக்கி இருந்தார். பாடல்களோ ஆக்ஷன் காட்சிகளோ இல்லாமல் நிதானமான ஒரு கதையாக இபடத்தை உருவாக்கினார்.