Chinmayi: மயக்க வைக்கும் ’முத்த மழை’ பாடல்; 7 நீள் ஆண்டுகள்- சின்மயி தடைக்கு விடிவுகாலம் எப்போது?
சின்மயி, பிரபல பாடலாசிரியர் வைரமுத்து, நடிகர் ராதாரவி ஆகியோர் மீது #MeToo குற்றச்சாட்டுகளை முன்வைத்து இருந்தார். இதையடுத்து தமிழ் சினிமாவில் பாடல் பாட அவருக்குத் தடை விதிக்கப்பட்டது.

விரைவில் வெளியாக இருக்கும் தக் லைஃப் படத்தில் உள்ள ’’முத்த மழை’’ என்னும் பாடலின் சின்மயி வெர்ஷன், இசை ரசிகர்களை சிதறடித்துக் கொண்டிருக்கும் நிலையில், சின்மயி மீது விதிக்கப்பட்டிருக்கும் தடை விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என்று ஃபெஃப்சி அமைப்புக்குக் கோரிக்கைக் குரல்கள் வலுத்துள்ளன.
தெய்வம் தந்த பூ சின்மயி
2002ஆம் ஆண்டில், ஒரு தெய்வம் தந்த பூவே பாடல், தமிழ் திரையுலகுக்கு சின்மயி என்னும் இசைப் பூவைத் தந்தது. அன்றில் இருந்து தன் இன்னிசைக் குரலில், நித்தமும் புத்தம்புதிதாய் மலர்ந்துகொண்டே இருந்தார் சின்மயி. சரசர சாரக் காத்து, மைய்யா மைய்யா என்று இசை கானம் எழுப்பியவர், 96 படத்தில் காதலே காதலே என்று கசிந்துருகி, ரசிகர்களை மயங்கிக் கரைய வைத்தார்.
சின்மயி, பிரபல பாடலாசிரியர் வைரமுத்து, நடிகர் ராதாரவி ஆகியோர் மீது #MeToo குற்றச்சாட்டுகளை முன்வைத்து இருந்தார். இதையடுத்து தமிழ் சினிமாவில் பாடல் பாட அவருக்குத் தடை விதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தடைக்கு என்ன காரணம்?
டப்பிங் கலைஞர்கள் (SICTADU) சங்கத்தின் 2 ஆண்டு சந்தாவை சின்மயி செலுத்தாததே, தடை செய்யப்பட்டதற்குக் காரணம் என்று கூறப்பட்டது, எனினும் முன்கூட்டியே எந்த அறிவிப்பும் இல்லாமல் சின்மயி திடீரென சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டார். இதற்கு #MeToo மூலம் பாலியல் குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக எழுப்பியதே காரணம் என்று கூறப்படுகிறது.
இதுதொடர்பான வழக்கு, விசாரணையில் உள்ள நிலையில், பிற மொழிப் படங்களுக்கு பாடல்கள், குரல், தமிழ் டப்பிங் என்று பிஸியாகவே இருக்கிறார் சின்மயி. பெண்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தனது எக்ஸ் பக்கத்தில் குரல் கொடுத்தும் வருகிறார்.

பாராட்டு மழையில் முத்த மழை
இதற்கிடையே தக் லஃப் படத்தின் இசை வெளியீட்டின்போது, முத்த மழை பாடத்தைப் பாடி இருந்தார். இந்தப் பாட்டு இசைப் பிரிவில் யூடியூபில் நம்பர் 1 ட்ரெண்டிங்கில் உள்ளது. சமூக வலைதளங்களில் பலரின் விருப்பத் தேர்வாக மாறி உள்ளது.
தக் லைஃப் படத்தில் பாடகி ’தீ’ முத்த மழை பாடலைப் பாடியுள்ள நிலையில், சின்மயி வெர்ஷனே அதிக உயிர்ப்புடன் உள்ளதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
விளாசும் நெட்டிசன்கள்
பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பல நடிகர்கள், எந்தத் தடையும் இல்லாமல் நடித்து வரும் நிலையில், குற்றம் சாட்டியதற்காக பாடகி ஒருவருக்கு, இத்தனை ஆண்டுகளாகத் தடை விதித்திருப்பது நியாயமா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் சின்மயி நீண்ட பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், ’’ஒரு சங்கத்தின் தடை என்ன செய்யும் என்று பலர் புரிந்துகொள்ளாததால், இதைச் சொல்ல விரும்புகிறேன். தமிழ் திரைப்படத் துறையில் FEFSI (தென்னிந்திய திரைப்பட ஊழியர் கூட்டமைப்பு) அமைப்பின் கீழ் உள்ள அனைத்து சங்கங்களுக்கும் இது பொருந்தும்.
காலடியில் விழ வேண்டும் என்று விரும்புகின்றனர்
என்னுடைய வழக்கு நீதி விசாரணையில் இருப்பதால், என்னால் இப்போது எந்த விவரங்களையும் பகிர்ந்துகொள்ள முடியாது. ஆனால் எனக்கு முன்பாகவே, ராதா ரவியைச் சார்ந்தவர்கள் நிறையப் பேருக்குத் தடை விதித்துள்ளனர். அவர்கள், சம்பந்தப்பட்டவர்களின் தொழில் வாய்ப்புகளை முற்றிலுமாகப் பறித்து, அவர்களின் காலடியில் விழ வேண்டும் என்று விரும்புகின்றனர்.
ஒரு சங்கத்தில் உள்ள நிர்வாகிகள், எப்படியோ மற்ற சில சங்கங்களிலும் நிர்வாகிகளாகவே இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஏதோ ஒரு வடிவத்தில் ஒன்றிணைந்து உள்ளனர். நான் ஏன் 7 ஆண்டுகளாக அதிகம் பணியாற்றவில்லை என்பது இப்போது எல்லாருக்கும் புரிந்திருக்கும் என நம்புகிறேன்.
ஆடியோ விழாவில் திரைப்படத்தில் அசலாகப் பாடிய பாடகர் இல்லாதபோது, இன்னொரு பாடகர் அதைப் படுவது வழக்கம்தான். அந்த வகையில் தெலுங்கு மற்றிம் இந்தியில் நான் பாடிய, முத்த மழை பாடலை, தமிழில் பாடி இருந்தேன். இன்னும் இசையிலும் கலையிலும் அதிக கவனம் செலுத்த விரும்புகிறேன். எனக்கு ஆதரவு மற்றும் அன்பை அளிக்கும் அனைவருக்கும் நன்றி. என் மீதான தடை சட்டப்பூர்வமாக ரத்து செய்யப்படும் வரை நீதிமன்றத்தில் தொடர்ந்து போராடுவேன்’’ என்று சின்மயி தெரிவித்துள்ளார்.
ரசிகர்கள் குமுறல்
’’ரிப்பீட் மோடில் முத்த மழை பாட்டைக் கேட்டுக் கொண்டே இருக்கிறேன்’’, ’’எனக்காடா வாய்ப்பு தர மாட்டேங்கறீங்க அப்படின்னு எல்லாரும் முகத்திலும் அறையற மாதிரி இருக்கு, சின்மயி performance’’, ’’7 ஆண்டுகளாக சின்மயி, தமிழ் திரைத் துறையை இழக்கவில்லை. திரைத் துறையும் ரசிகர்களுமே சின்மயியை இழந்திருக்கிறோம்’’, ’’ஒருவரின் பெயருக்கு வேண்டுமானால் தடை விதிக்கலாம். ஆனால் லட்சக்கணக்கானவர்களை குணப்படுத்திய குரலுக்குத் தடை விதிக்க முடியாது’’ என்றெல்லாம் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.
முத்த மழை பாடலுக்கு ரசிகர்கள், பாராட்டு மழை பொழிந்து வரும் சூழலில், பாடலை ’’இன்னும் வரும் எந்தன் கதை!‘’ என்று பாடி முடித்திருப்பார் சின்மயி. அவரிடம், ’’என்று வரும் உந்தன் குரல்?’’ என்று கேள்வி எழுப்பிக் காத்துக் கிடக்கின்றனர் ரசிகர்கள்.





















