மேலும் அறிய
Advertisement
Actor Vijay: உக்ரைன் அதிபரை போல தான் விஜய்யின் அரசியல் ஆசை! - இசையமைப்பாளர் வெளியிட்ட பதிவு
Actor Vijay: "தமிழக அரசியலில் இன்னொரு புதுமுகம். சில ஆண்டுகளுக்கு முன் யாரும் நினைத்துப் பார்த்ததுகூட இல்லை, நடிகர் விஜய் தீவிர அரசியலுக்குள் இறங்குவார்" - ஜேம்ஸ் வசந்தன்
Actor Vijay: நடிகர் விஜய் அரசியலுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகும் நிலையில் அவரை உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியுடன் ஒப்பிட்டு இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்த் வெளியிட்ட பதிவு கவனத்தை ஈர்த்து வருகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் நடிப்பில் அண்மையில் திரைக்கு வந்த லியோ படம் வசூலிலும், விமர்சனத்திலும் வரவேற்பை பெற்றது. தற்போது கோட் என்ற தளபதி 68 படத்தில் விஜய் நடித்து வருகிறார்.
திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் அரசியல் பக்கம் கவனம் செலுத்தி வரும் விஜய் மறைமுகமாக அதற்கான பணிகளிலும் ஈடுபட்டு வந்தார். அதில், ஒன்றாக கடந்த முறை நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் போட்டியிட்டு சில வார்டுகளில் வெற்றி பெற்றனர். தொடர்ந்து விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மாணவர்களுக்கு நன்கொடை வழங்கும் நிகழ்ச்சி, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது, மருத்துவ முகாம்கள் நடத்துவது, மாலைநேர கல்வி நிலையங்களை செயல்படுத்துவது உள்ளிட்ட வேலைகளில் விஜய் ஈடுபட்டு வருகிறார்.
அடிக்கடி விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்தும் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த நிலையில் விஜய் விரைவில் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாகவும், அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும், கட்சி பெயரை உறுதி செய்வதற்காக விஜய் டெல்லிக்கு சென்றதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து அரசியல்வாதிகளும், திரை கலைஞர்களும், ரசிகர்களும் பல்வேறு கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பேஸ்புக்கில் விஜய்யின் அரசியல் ஆர்வம் குறித்து பேசியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், “ தமிழக அரசியலில் இன்னொரு புதுமுகம். சில ஆண்டுகளுக்கு முன் யாரும் நினைத்துப் பார்த்ததுகூட இல்லை, நடிகர் விஜய் தீவிர அரசியலுக்குள் இறங்குவார் என்று. வழக்கமான "நடிகனுக்கு என்ன தெரியும் அரசியலைப் பற்றி?" விமர்சனங்கள் வலம்வரத் தொடங்கி விட்டன. மக்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்கிற தூண்டல் பல்வேறு துறைகளில் இருக்கிற பலருக்கும் ஒரு கட்டத்தில் வருவதுண்டு. அது வந்துவிட்டது இவருக்கு. அவ்வளவுதான்! அந்தத் துளைப்பு வந்துவிட்ட விஜய்யை இனி யாரும் தடுக்க முடியாது.
நூற்றுக்கணக்கான கோடிகளில் வருமானம் பார்க்கிற, உச்சத்திலுள்ள ஒரு நடிகர் தன் தொழிலுக்கே ஊறுவிளைவிக்கக்கூடிய ஒரு செயலில் அவ்வளவு எளிதாக இறங்கிவிடுவாரா? எவ்வளவு எண்ணங்கள் ஓடியிருக்கும்? அதற்குப் பின்பும் அவர் இதில் இறங்குகிறார் என்றால், தன் தொழிலைத் தாண்டி இந்தப் பயணம் இவருக்கு முக்கியமானதாகத் தெரிகிறதென்றால் அந்த உந்துதல் உண்மைதானே? இது என் புரிதல்.
வல்லரசு நாடான ரஷ்யாவை துணிவுடன் எதிர்த்து நின்று ஓராண்டுக்கும் மேலாகக் கடுமையாகப் போரிட்டு வரும் குட்டி நாடான உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி ஒரு காமெடி நடிகர்தானே! நடிகர், தயாரிப்பாளர் என்று இருந்தவர் திடீரென ஒரு நாள் தேர்தலில் நிற்கப்போகிறேன் என்று அறிவித்தவரைத்தானே அந்த நாட்டு மக்கள் தேர்ந்தெடுத்தார்கள்? அவர்கள் தீர்ப்பு மிகச்சரி என்று தொடர்ந்து தன் செயல்பாடுகளின் மூலம் நிரூபித்து வருகிறாரே! புட்டினுக்கே சிம்மசொப்பனமாக விளங்குகிறாரே! நோக்கம் சரியாக இருந்தால் மற்றவை சரியாக இருக்க வாய்ப்புகள் அதிகமுண்டு. பார்க்கலாம்!” என குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
திரை விமர்சனம்
அரசியல்
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion