Vikram: செல்வராகவன் - விக்ரம் கூட்டணியில் உருவாக இருந்த சிந்துபாத்! ஜி.வி பிரகாஷ் கொடுத்த அதிர்ச்சித் தகவல்
செல்வராகவன் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிக்க இருந்ததாகவும் பின் இந்தப் படம் கைவிடப் பட்டதாகவும் இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் தெரிவித்துள்ளார்
செல்வராகவன்
தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குநர்களில் ஒருவர் செல்வராகவன். காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலணி, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன , புதுப்பேட்டை என அவரது படங்கள் காலம் கடந்து ரசிகர்களால் கொண்டாடப் பட்டு வருகின்றன. தனி நபர்களின் உணர்ச்சிகளை தன்னுடைய கதைகளில் முக்கியமான பேசுபொருளாக செல்வராகவனின் படங்கள் கொண்டிருப்பது அவரது படங்களுக்கு பலம் சேர்க்கின்றன. சமீப காலத்தில் செல்வராகவன் இயக்கிய என்.ஜி கே. நானே வருவேன் உள்ளிட்டப் படங்கள் பெரியளவில் வெற்றிபெற வில்லை. திரைப்படங்கள் இயக்குவதைத் தொடர்ந்து சமீப காலங்களில் தொடர்ச்சியாக நடிக்கவும் தொடங்கியிருக்கிறார். நெல்சன் திலிப் குமார் இயக்கிய பீஸ்ட், பகாசுரன், சாணி காயிதம், மார்க் ஆண்டனி உள்ளிட்டப் படங்களில் செல்வராகவன் நடித்துள்ளார். சமீபத்தில் செல்வராகவன் இயக்கத்தில் வெளியாக வேண்டிய படம் குறித்து அரிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் .
செல்வராகவன் படத்தில் விக்ரம்
செல்வராகவன் இயக்கத்தில் சிலம்பரசன் கான் என்கிற படத்தில் நடிக்க இருந்து பின் அந்த படம் கைவிடப் பட்டது. மேலும் சந்தானத்துடன் அவர் இயக்க இருந்த படமும் கைவிடப் பட்டது. தற்போது ஜி.வி பிரகாஷ் தெரிவித்துள்ள தகவலின் படி ஆயிரத்தில் ஒருவன் படத்தைத் தொடர்ந்து செல்வராகவன் மற்றும் சியான் விக்ரம் ஆகிய இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் வேலை செய்ய இருந்ததாகவும் ஒரு சில காரணங்களால் இந்தப் படமும் கைவிடப் பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த படத்திற்கு சிந்துபாத் என்று டைட்டில் வைக்கப் பட்டது. மேலும் இந்தப் படத்திற்காக தான் ஒரு பாடல் அமைத்திருந்தார் என்றும் படம் கைவிடப்பட்டபின் இந்தப் பாடலை தனுஷ் நடித்த மயக்கம் என்ன படத்தில் பயன்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார். மயக்கம் என்ன படத்தில் வரும் நான் சொன்னதும் மழ வந்துச்சா பாடல் தான் அந்த பாடல் என்று ஜி.வி தெரிவித்துள்ளார். இந்த தகவல் வெளியானதில் இருந்து இணையதளத்தில் ரசிகர்கள் விக்ரம் மற்றும் செல்வராகவன் கூட்டணியில் ஒரு படம் வெளியாகியிருந்தால் நிச்சயம் ஒரு புது அனுபவமாக இருக்கும் என்று பேசி வருகிறார்கள்.
மயக்கம் என்ன
That claps 👏🥺❤️
— Chennai Paiyan 𝕏 (@ChennaiPaiyanof) December 20, 2023
"Idhu dhaan da cinema "@dhanushkraja 🥹😍@selvaraghavan pic.twitter.com/c5zxykdlXj
செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான மயக்கம் என்ன திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்திற்கு கல்லூரி மாணவர்கள் கூட்டம் கூட்டமாக சென்று கொண்டாடி வருகிறார்கள். மேலும் இந்தப் படத்தின் காட்சிகளை வீடியோ எடுத்து இணையதளத்தில் பதிவிடும் அவர்கள் செல்வராகவன் மற்றூம் தனுஷை பாராட்டி வருகிறார்கள்.