(Source: ECI/ABP News/ABP Majha)
Lal Salaam: கடவுள் முன் மன்றாடுவது போல இருந்தது.. லால் சலாம் ‘அன்பாளனே’ பாடல் பற்றி தேனிசைத் தென்றல் தேவா!
இஸ்லாமியப் பாடல்களைப் பாடும் பிரபல பாடகர் நாகூர் ஹனிஃபாவின் குரலுக்கு நிகராக ஆத்மார்த்தமான குரலில் இந்தப் பாடலை தேவா பாடியுள்ளதாக ரசிகர்கள் சிலாகித்து வருகிறார்கள்.
அன்பாளனே பாடம் கடவுளின் முன் நின்று மன்றாவது போல் அனுபவத்தை தனக்கு ஏற்படுத்தியதாக தேவா கூறியிருக்கிறார்.
லால் சலாம்
லைகா ப்ரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கியிருக்கும் படம் லால் சலாம். விஷ்ணு விஷால், விக்ராந்த், தம்பி ராமையா, செந்தில், விவேக் பிரசன்னா, தான்யா பாலகிருஷ்ணா, அனந்திகா சனில்குமார் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இவர்களுடன் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். லால் சலாம் நாளை பிப்ரவரி 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
ரஹ்மான் செய்திருக்கும் அற்புதம்
லால் சலாம் படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் இந்தப் படத்தில் தொழில் நுட்பரீதியாக சில புதிய முயற்சிகளை எடுத்துள்ளார். செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மறைந்த பாடகர்களான பம்பா பாக்யா மற்றும் ஷாகுல் ஹமீத் ஆகிய இருவரின் குரலை மீட்டெடுத்து ’திமிரி எழுடா’ பாடலை உருவாக்கி இருக்கிறார்.
வரவேற்பைப் பெறும் அன்பாளனே பாடல்
லால் சலாம் படத்தில் இடம்பெற்றுள்ள ’அன்பாளனே’ பாடலின் லிரிக்கல் வீடியோ நெற்று பிப்ரவரி 7 ஆம் தேதி வெளியானது. யுகபாரதி எழுதியுள்ள இந்தப் பாடலை தேனிசைத் தென்றல் தேவா பாடியுள்ளார். இஸ்லாமியப் பாடல்களைப் பாடும் பிரபல பாடகர் நாகூர் ஹனிஃபாவின் குரலுக்கு நிகராக ஆத்மார்த்தமான குரலில் இந்தப் பாடலை தேவா பாடியுள்ளது அனைவரையும் கவர்ந்துள்ளது. இந்நிலையில், இந்தப் பாடலைப் பாடிய அனுபவத்தைப் பற்றி நேர்க்காணல் ஒன்றில் தேவா பகிர்ந்துகொண்டுள்ளார்.
கடவுளிடம் மன்றாடுவதைப் போல் இருந்தது
அன்பாளனே பாடல் பற்றி பேசிய தேவா “நான் கிட்டத்தட்ட 400 படங்களுக்கு இசையமைத்து பாடியிருக்கிறேன். இதில் பெரும்பாலான பாடல்கள் கானா அல்லது குத்துப் பாடல்கள் தான். நான் இசையமைத்த மெலடி பாடல்களை பிற பாடகர்கள் பாடியிருக்கிறார்கள். ஆனால் அன்பாளனே மாதிரியான ஒரு பாடலை நான் பாட வேண்டும் என்று ஏ.ஆர் ரஹ்மானுக்கு எப்படித் தோன்றியது என்று எனக்கு தெரியவில்லை.
நான் கிளம்பி அவரது ஸ்டுடியோவுக்குச் சென்றபோது என்னிடம் பாடல் வரிகளை கொடுத்து ட்யூன் சொன்னார். யுகபாரதியின் வரிகளை ரஹ்மான் இசையில் நான் இந்தப் பாடலைப் பாடும்போது அப்படியே கடவுள் முன் மண்டியிட்டு மன்றாடுவது போல் ஒரு உணர்வு எனக்கு ஏற்பட்டது. பாடி முடித்து வீட்டுக்கு திரும்புபோதும் மனதிற்குள் இந்தப் பாடல் ஓடிக் கொண்டே இருந்தது.
கடவுள் என்பவர் இருக்கிறார்
லால் சலாம் படத்தின் ஆடியோ லாஞ்சில் நான் இந்தப் பாடலை பாட வேண்டும் என்று என்னிடம் சொல்லி விட்டார்கள். அப்போது நான் கடுமையான இருமலால் சிரமப்பட்டுக் கொண்டிருந்தேன். மேடையில் அத்தனை சிறப்பு விருந்தினர்கள் முன் இருமல் வந்துவிட்டால் ஒரு ஐந்து நிமிடத்திற்கு நிறுத்த முடியாது. எல்லா பாரத்தையும் கடவுளிடம் தந்து இருமல் வந்துவிடக் கூடாது என்று மேடைக்குச் சென்றேன்.
பாடலை பாடத் தொடங்கினேன். என் முன் யார் இருக்கிறார், இருமல் என எதைப் பற்றியும் நான் கவலைப் படவில்லை. ஒருமுறை கூட இருமல் வரவில்லை. கடவுள் என்பவர் இருக்கிறார் என்பதை அப்போது எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். சரியாக பாடி முடித்து மேடையைவிட்டு கீழே இறங்கியது எனக்கு இருமல் வந்தது” என்று தேவா கூறியுள்ளார். கடந்த ஆண்டு மாமன்னன் படத்தில் ரஹ்மான் இசையில் ’நெஞ்சமே நெஞ்சமே’ பாடலை தேவா பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.