Tirupur Subramaniam: ஓடிடி ரிலீஸில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் ஏமாற்றம்.. ஆலோசனைக் கூட்டத்தில் அதிரடி முடிவு
4 வாரங்களில் படங்களில் ஓ.டி.டி.யில் வெளியாவதால் திரையரங்கில் கூட்டம் வருவதில்லை என்று திருப்பூர் சுப்ரமணியம் கூறியுள்ளார்
இனிமேல் திரையரங்கத்தில் வெளியான 8 வாரங்களுக்குப் பின்பு ஓடிடியில் படங்களை வெளியிட முடிவெடுத்துள்ளதாக திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க ஆலோசனைக் கூட்டம்
தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் மல்டிப்ளக்ஸ் சங்கத்தினரின் பொதுக்கூட்டம் இன்று காலை 11 மணியளவில் நடைபெற்றது. கடந்த 4 மாதங்களாக திரையரங்கத்திற்கு வரும் மக்களின் கூட்டம் குறைந்துள்ளதைத் தொடர்ந்து இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் முடிந்து பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் மல்டிப்ளக்ஸ் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம்.
2 மாதங்களுக்கு பிறகே ஓடிடி ரிலீஸ்:
அவர் பேசியதாவது ‘இந்தியாவில் வெளியாகும் இந்திப் படங்கள் திரையரங்கத்தில் வெளியாகி 8 வாரங்கள் கழித்து ஓ.டி.டி. தளத்தில் வெளியாகின்றன. தமிழ் படங்களைப் பொறுத்தவரை தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் 4 வாரங்களில் படங்களை ஓடிடியில் வெளியிடும் உடன்படுக்கைக்கு வந்தன. இந்த கால இடைவெளி குறைவாக இருப்பதால் ரசிகர்கள் சிறிய படங்களை ஓடிடியில் பார்த்துக் கொள்ளலாம் என்கிற மனநிலைக்கு வந்துவிட்டார்கள். இதனால் தயார்ப்பாளர் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் இருதரப்பினருக்கும் பாதிப்பும் இருக்கிறது.
இதனால் தயாரிப்பாளர்களுடன் கலந்து பேசி திரைப்படங்களை 8 வாரங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியிட முடிவு செய்திருக்கிறோம். இது தொடர்பாக விரைவில் முடிவெடுத்து அறிவிப்பு வெளியிடப்படும். மேலும் திரையரங்கங்களுக்கு 8 சதவீதம் உள்ளாட்சி வரி விதிக்கப் படுகிறது. இந்த வரி விதிப்பை நீக்கக் கோரி தமிழக முதல்வரை விரைவில் சந்தித்து பேச இருக்கிறோம்.’ என்று திருப்பூர் சுப்ரமணியம் கூறினார்
தொடர்ந்து பேசிய அவர் “அதே நேரத்தில் தமிழகத்தில் விநியோகஸ்தர்கள் 80 சதவீதம் பங்குத் தொகையாக கேட்கிறார்கள். கேரளா போன்ற மாநிலங்களில் விநியோகஸ்தர்களின் பங்கு 60 சதவீதத்தை தாண்டியது இல்லை. தமிழகத்திலும் 60 சதவீதம் மட்டும் தான் பங்குத் தொகையை கொடுக்க முடியும். இது தொடர்பாக விநியோகஸ்தர்களுடன் பேசி வரும் 1 ஆம் தேதிக்குள் முடிவெடுக்கப்படும். “ என்று அவர் கூறினார்
திரையரங்கத்தில் கிரிக்கெட்
” மற்ற மாநிலங்களில் ஃபுட்பால் மற்றும் கிரிக்கெட் விளையாட்டை திரையரங்கத்தில் ஒளிபரப்புகிறார்கள். அதேபோல் விளையாட்டுப் போட்டிகளை திரையரங்கத்தில் ஒளிபரப்ப அரசிடம் கோரிக்கை வைக்க இருக்கிறோம். சிறிய பட்ஜெட் படங்களுக்கு பார்வையாளர்கள் குறைவாக தான் வருகிறார்கள் திரையரங்குகளுக்கு பார்வையாளர்கள் வருவதை ஊக்கப்படுத்த சிறிய பட்ஜெட் படங்களுக்கு குறைவான கட்டணத்தை வைக்க தயாரிப்பாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த இருக்கிறோம். தமிழகத்தில் மொத்தம் 1168 திரையரங்குகள் இருக்கின்றன. இதில் ஒரு சில திரையரங்குகளில் மட்டும் தான் அதிக கட்டணம் வசூல் செய்வதாக புகார்கள் இருக்கின்றன. மற்ற திரையரங்குகள் நிர்ணயித்த கட்டனத்தை தான் வசூலிக்கிறார்கள். தமிழில் வருடத்திற்கு 250 முதல் 300 படங்கள் வெளியாகின்றன. இதில் ஒரு சில படங்கள் பல நூறு கோடி வசூல் ஈட்டியதாக கூறுகிறார்கள். இப்படி சொல்வதை அவர்கள் விளம்பரமாக கருதுகிறார்கள்.’ என்று திருப்பூர் சுப்ரமணியம் கூறியுள்ளார்
” .