Mission Impossible: ‘மிஷன் இம்பாசிபிள் 7’ பார்க்கப்போறீங்களா? முந்தைய 6 பாகங்களின் குட்டி ரீவைண்ட்...
‘மிஷன் இம்பாசிபிள் பாகம் 7’ திரைப்படம் இன்று உலகம் முழுவதுமுள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், அதன் முந்தைய ஆறு பாகங்கள் குறித்து ஒரு குட்டி ரீவைண்டைப் பார்க்கலாம்!
Mission Impossible 7
மிஷன் இம்பாசிபிள் முதல் பாகம்
மிஷன் இம்பாசிபிள் முதல் பாகம் 1996ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்தப் படத்துக்கு டேவிட் கோப், ராபர்ட் டவுன் ஆகியோர் திரைக்கதை அமைக்க பிரையன் டி பால்மா படத்தை இயக்கினார். டாம் குரூஸ், ஜான் ஒயிட், இம்மானுவேல் பியார்ட், ஹென்றி செர்னி,விங் ராம்ஸ் போன்ற பிரபலங்கள் நடிக்க பவுலா வாக்னர் மற்றும் டாம் குரூஸ் படத்தை தயாரித்தனர்.
இந்தப் படம் வெளியாகி மக்களிடம் விமர்சன ரீதியாகவும் வசூல்ரீதியாகவும் மாபெரும் வெற்றியடைந்தது. இதனால் இதன் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகின. மிஷன்:இம்பாசிபிள், மிஷன்:இம்பாசிபிள் 2 (2000), மிஷன்:இம்பாசிபிள் 3 (2006), மிஷன்: இம்பாசிபிள் - கோஸ்ட் புரோட்டோகால் (2011), மிஷன்: இம்பாசிபில் – ரோக் நேஷன் (2015), மிஷன்: இம்பாசிபிள் – ஃபால் அவுட் (2018) என்று ஆறு பாகங்கள் வெளியாகியுள்ளன.
இந்தப் படத்தில் மக்கள் அனைவராலும் விரும்பப்பட்ட மற்றும் பாராட்டப்பட்ட விஷயம் என்னவென்றால், அது டாம் குரூஸின் அதிரடி சண்டைக்காட்சிகள் தான். அது மட்டுமின்றி இந்தப் படத்தில் பின்னணி இசை உலக மக்கள் அனைவராலும் விரும்பப்பட்டது. தற்போது இதன் ஏழாம் பாகம் ‘மிஷன்: இம்பாசிபிள் - டெட் ரெக்கனிங் பார்ட் ஒன்’ என்ற பெயரில் இன்று (ஜூலை.13) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இச்சூழலில் முந்தைய பாங்கள் பற்றிய ஒரு குட்டி ரீவைண்டைப் பார்க்கலாம்!
மிஷன்: இம்பாசிபிள் பாகம் 1
முதல் பாகத்தின் தொடக்கத்தில் ஜிம் என்பவரின் தலைமையில் ரகசியக்குழு ஒன்று நிறுவப்படுகிறது. ஜிம் தலைமையின் கீழ் பணிபுரிபவர்கள்தான் டாம் குரூஸ் மற்றும் அவரது குழுவினர். இவர்களுக்கு மிஷன் ஒன்று கொடுக்கப்படுகிறது. அது என்னவென்றால் சி.ஐ.ஏ-வில் உள்ள என்.ஓ.சி என்கின்ற பட்டியலை (List) ஒருவர் திருடப்போவதாகவும் அதைத் திருடுபவரையும், திருடச் சொன்னவரையும் உயிருடன் பிடிக்க வேண்டும் என்பதுமே அந்த மிஷன். இவர்கள் நினைத்தபடியே அங்கு வந்த திருடனை வீடியோவில் பதிவு செய்து கொண்டிருக்கும் போது சில எதிர்பாராத விஷயங்கள் நடக்கின்றன.
இதனால் டாம் குரூஸ் குழுவில் உள்ள அனைவரும் அடுத்தடுத்து கொலை செய்யப்படுகிறார்கள். இதனால் சி.ஐ.ஏ-வுக்கு இந்தத் தகவலை அனுப்புகிறார் டாம் குரூஸ். சி.ஐ.ஏ டாம் குரூஸை ஒரு இடத்திற்கு அழைக்கிறது. அங்கு சி.ஐ.ஏ விலேயே உள்ள யாரோ ஒருவர் தான் இந்தச் செயலை செய்கிறார் எனும் அதிர்ச்சித் தகவல் வெளியாகிறது. சி.ஐ.ஏ. சில காரணங்களால் டாம் குரூஸ் தான் இந்தச் செயலை செய்திருக்கிறார் என்று யோசிக்கத் தொடங்குகிறது.
இதனைத் தொடர்ந்து இதற்கான பின்னணியை தானே கண்டுபிடிக்கத் தொடங்குகிறார். இதனைத் தொடர்ந்து நடப்பது என்ன, தன்னை இந்தப் பிரச்னையில் தள்ளியவர் யார் என்பதை பரபரப்பான ரயில் சண்டையின் நடுவே டாம் குரூஸ் கண்டறிவது தான் முதல் பாகத்தினுடைய கதை.
மிஷன்:இம்பாசிபிள் 2 (2000)
டாம் குரூஸ் "மிஷன்: இம்பாசிபிள்" படத்தின் இரண்டாம் பாகத்தில் ஈத்தன் ஹன்ட் கதாபாத்திரத்தில் மீண்டும் வருகிறார். இந்த முறை ஜெர்மனில் பயங்கரவாதிகள் கொடிய வைரஸை பரப்பத் திட்டமிட்டுள்ள நிலையில், ஈதன் ஹன்ட் தனது சர்வதேசக் குழுவை வைத்து அந்தக் கொடிய வைரஸை தடுத்து நிறுத்தப் போராடுகிறார் . அந்த வைரஸால் ஒருவர் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளார் என்று அவர் எண்ணுகையில் நிலைமை மேலும் விபரீதம் அடைந்ததும் இதற்குக் காரணம் யார் என்பதும் புரிகிறது. இந்த வைரஸை அழிக்கும் தடுப்பு மருந்தை வாங்க டாம் குரூஸ் என்ன செய்கிறார் என்பதை விறுவிறுப்பாக சொல்வதே கதை!
மிஷன்:இம்பாசிபிள் 3 (2006)
சர்வதேசக் குழுவில் இருந்து ஓய்வு பெற்று மிஷன்:இம்பாசிபிள் குழுவில் ஆட்கள் சேர்க்கும் பணியில் இருந்து வரும் ஈதன் ஹன்ட் (டாம் குரூஸ்) அந்த நேரத்தில் ஒரு மோசமான எதிரியை எதிர்கொள்கிறார். ஆயுதங்கள் மற்றும் தகவல்களின் சர்வதேச தரகர் ஓவன் டேவியன் (பிலிப் சீமோர் ஹாஃப்மேன்), டாம் குரூஸ் போலவே தந்திரமானவர். டேவியன் ஹன்ட்டையும் அவர் நேசிக்கும் அனைத்தையும் அச்சுறுத்துகிறார். இவர்களுக்கிடையே நடக்கும் விறுவிறுப்பான மோதலே கதை.
மிஷன்: இம்பாசிபிள் - கோஸ்ட் புரோட்டோகால் (2011)
நான்காம் பாகத்தின் தொடக்கத்தில் பயங்கரவாத தாக்குதலுக்காக குற்றம் சாட்டப்பட்ட ஈதன் ஹன்ட் (டாம் குரூஸ்) மற்றும் அவரது முழு சர்வதேசக் குழுவும் அமெரிக்க அரசாங்கத்தால் நிராகரிக்கப்படுகிறார்கள். அதே நேரத்தில் ஜனாதிபதி கோஸ்ட் ப்ரோட்டோக்கால் ஒன்றை தொடங்குகிறார். ஹன்ட் எப்படியாவது ஏஜென்சியின் மீது ஏற்பட்ட அவப்பெயரை நீக்கி, மற்றொரு தாக்குதலையும் தடுக்க போராடுகிறார். இதனை மையப்படுத்தி இந்த பாகத்தின் கதை அமைக்கப்பட்டிருந்தது.
மிஷன்: இம்பாசிபிள் – ரோக் நேஷன் (2015)
இந்த பாகத்தில் ஈத்தன் ஹண்ட் பணியாற்றும் IMF சர்வதேசக்குழு கலைக்கப்படும் நிலையில், சிண்டிகேட் என்று அழைக்கப்படும் ஒரு புதிய பயங்கரவாத குழு உருவாகிறது. இதனை எதிர்க்க ஈதன் தனது குழுவைத் திரட்டி செய்யும் சாகசங்களே இப்படத்தில் கதை!
மிஷன்: இம்பாசிபிள் – ஃபால் அவுட் (2018)
வாடிகன், ஜெருசலேம் மற்றும் மெக்கா ஆகிய நகரங்களில் ஒரே நேரத்தில் அணுகுண்டு தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிடும் நிலையில், இந்த பயங்கரவாதிகளின் குழுவில் உளவாளியாக ஈதன் ஹன்ட் மற்றும் சர்வதேசக்குழு சேர்ந்து இதனை எப்படி முறியடிக்கிறது என்பதே படத்தின் கதை.
தற்போது இந்தப் படத்தின் ஏழாம் பாகம் வெளியாகியுள்ளது. இந்தப் படத்திலும் வழக்கமாக டாம் குரூஸ் ஸ்டண்ட் காட்சிகளில் அசத்தியிருப்பார். ஒரு காட்சியில் டூப் போடாமல் தானே மலையில் இருந்து குதித்து சாகசம் நிகழ்த்தியிருப்பார் டாம் குரூஸ். இதற்கு முன்னர் மிஷன்: இம்ப்பாசிபில் – ரோக் நேஷன் என்ற 5ஆம் பாகத்தில் பறக்கும் விமானத்தில் எந்த வித பாதுகாப்புமின்றி டாம் குரூஸ் ஸ்டண்ட் செய்திருப்பார்.
இந்நிலையில் முந்தைய பாகங்களை மிஞ்சுமளவுக்கு மிஷன் இம்பாசிபிள் ஏழாம் பாகத்தில் ஆக்ஷன் காட்சிகளில் டாம் குரூஸ் மாஸ் காட்டியிருப்பதாக படம் பார்த்த ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.