(Source: ECI/ABP News/ABP Majha)
Best Actor Tamil: எம்.ஜி. ஆர் முதல் சூர்யா வரை... சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்ற தமிழ் நடிகர்கள் லிஸ்ட்!
தெலுங்கு சினிமா குழந்தை ஸ்டெப்ஸ் எடுத்து வைக்கும் சூழலில் தமிழ் சினிமா பல ஆண்டு காலமாக சிறந்த நடிகர்களை உருவாக்கியிருக்கிறது. தமிழ் சினிமாவில் இதுவரை தேசிய விருது வென்ற நடிகர்களைப் பார்க்கலாம்.
புஷ்பா படத்தில் நடித்த அல்லு அர்ஜுன் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றுள்ளது தெலுங்கு சினிமா உலகிற்கு மிகப்பெரிய பெருமையை சேர்த்துள்ளது. சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வெல்லும் முதல் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் தான். தெலுங்கு சினிமா இப்படி குழந்தை ஸ்டெப்ஸ் எடுத்து வைக்கும் சூழலில் தமிழ் சினிமா பல ஆண்டு காலமாக சிறந்த நடிகர்களை உருவாக்கியிருக்கிறது. . தமிழ் சினிமாவில் இதுவரை தேசிய விருது வென்ற நடிகர்களைப் பார்க்கலாம்.
எம்.ஜி.ஆர் – ரிக்ஷாக்காரன்
1971 ஆம் ஆண்டு எம். கிருஷ்ணன் நாயர் இயக்கத்தில் உருவான திரைப்படம் ரிக்ஷாக்காரன். எம்.ஜி ஆர், மஞ்சுளா, பத்மினி, சோ ராமசாமி உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் எளிய மக்களில் ஒருவராக ரிக்ஷாகாரராக எம்.ஜி.ஆர் நடித்திருந்தார். மேலும் சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் வென்றால் எம்.ஜி.ஆர். அதுவரை பெங்காலி மற்றும் இந்தி நடிகர்கள் மட்டுமே தேசிய விருதுகளை வென்றிருந்த நிலையில் முதல் முறையாக தேசிய விருதை வென்ற தமிழ் நடிகராக எம்.ஜி.ஆர் உருவெடுத்தார்.
கமல்ஹாசன் – மூன்றாம் பிறை, நாயகன் , இந்தியன்
எம்.ஜி. ராமச்சந்திரனைத் தொடர்ந்து தேசிய விருதை வென்ற இரண்டாவது நடிகர் உலகநாயகன் கமல்ஹாசன். பாலு மகேந்திரா இயக்கிய மூன்றாம் பிறக்காக தனது முதல் தேசிய விருதை வென்ற கமல்ஹாசன் அடுத்தடுத்து மூன்று முறை தேசிய விருதுகளை தட்டிச் சென்றார். இரண்டாவது முறையாக மணிரத்னம் இயக்கிய நாயகன் படத்திற்காகவும், மூன்றாவது முறையாக ஷங்கர் இயக்கிய இந்தியன் திரைப்படத்திற்காகவும் தேசிய விருது வென்றார்.
விக்ரம் - பிதாமகன்
2003ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளியான பிதாமகன் திரைப்படத்தில் நடித்த விக்ரம் தேசிய விருது வென்று, இவ்விருதை வென்ற மூன்றாவது தமிழ் நடிகராக உருவெடுத்தார். இந்தப் படத்தில்- விக்ரமின் முற்றிலும் மாறுபட்ட நடிப்பு அவருக்கு இந்த விருதை பெற்றுத் தந்தது. அனேகமாக அடுத்த விருது தங்கலான் படத்திற்காக விக்ரம் விருது பெறலாம்.
பிரகாஷ்ராஜ் - காஞ்சிவரம்
பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான காஞ்சிவரம் திரைப்படத்திற்காக நடிகர் பிரகாஷ் ராஜ் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றார். பெரும்பாலும் வில்லனாக மட்டுமே பார்க்கப்பட்ட பிரகாஷ் ராஜின் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்த படம் காஞ்சிவரம். இப்படத்துக்காக பிரகாஷ் ராஜ் பாராட்டுகளுடன் தேசிய விருதையும் சேர்த்து அள்ளினார்.
தனுஷ் – ஆடுகளம், அசுரன்
வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் திரைப்படம் மொத்தம் ஆறு விருதுகளை 2010 ஆம் ஆண்டு எடுத்துச் சென்றது. அதில் சிறந்த நடிகருக்காக தனுஷ் பெற்ற விருதும் அடக்கம். தனது நடிப்பிற்காக தொடர்ச்சியாக பாராட்டுக்களைப் பெற்று வரும் தனுஷின் நடிப்பாற்றலை பறைசாற்றும் வகையில் அமைந்தது ஆடுகளம் படம். அதே போல் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான அசுரன் திரைப்படத்திற்காக இரண்டாவது முறையாக தேசிய விருதை வென்றார் நடிகர் தனுஷ்.
சூர்யா – சூரரைப் போற்று
சுதா கொங்காரா இயக்கத்தில் வெளியான சூரரைப் போற்று படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை வென்றார் சூர்யா. எத்தனையோ படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் ஒவ்வொரு முறையும் அவரது பெயர் விடுபட்டு வந்தது. இறுதியாக மறுக்கமுடியாத தனது திறமையில் மூலம் விருதை தட்டிச்சென்றார் சூர்யா!