சமீரா முதல் சமந்தா வரை...மன அழுத்தத்துடன் போராடியதாக கூறும் கோலிவுட் கதாநாயகிகள்!
Mental Health Day 2022: மன அழுத்தத்துடன் போராடியதாக கூறும் கதாநாயகிகளும் அதிலிருந்து மீண்டு வர அவர்கள் மேற்கொண்ட வழிகளும்.
நடிகர்கள்-நடிகைகள் என்றாலே நம்மில் பலருக்கும் சினிமாவும், அவர்களது அழகிய சிரித்த முகமும்தான் நினைவிற்கு வரும். ஆனால், அனைவரையும் விட இவர்கள் அதிகம் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர் என்பதை நம்மில் பலர் உணருவதே இல்லை. சமீரா ரெட்டி முதல், சமந்தா வரை பல நடிகர்-நடிகைகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது சின்ன பகிர்தலை இங்கே பார்க்கலாம்..
சமீரா ரெட்டி:
வாரணம் ஆயிரம் படத்தில் மேக்னாவாக நடித்து “என்னோடு வா வீடு வரைக்கும்..” என தமிழ் இளைஞர்களை பாட வைத்தவர் சமீரா ரெட்டி. கச்சிதமான உடலை தனது ப்ளஸ் பாய்ண்டாக என்னிய இவர், முதல் குழந்தைப் பேருக்கு பிறகு அதனை இழந்தார். இதனால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான இவர், தனது கணவர் மற்றும் குடும்பத்தினரின் உதவியுடன் அதிலிருந்து மீண்டுள்ளார். தற்போது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகள் கோவாவில் வசித்து வரும் இவர், சமீராவா இது என யார் கேட்டாலும் கவலை கொள்வதில்லை என்று கூறுகிறார். தன்னைப் போன்ற நிலையில் இருப்பவர்களுக்காகவும், பாடி பாசிட்டிவிட்டி, பேட்டிலிங் டிப்ரெஷன், தாய்மார்களுக்கு வரும் போஸ்ட் பார்டம் சிண்ட்ரம் போன்ற விஷயங்கள் குறித்து பேசி வருகிறார்.
இலியானா:
நண்பன் படத்தில் ஒல்லி பெல்லி பாடலுக்கு நடமாடி ஃபேமஸான நடிகை இலியானா. தற்போது பாலிவுட் படங்கள் பலவற்றில் கமிட் ஆகியுள்ள அவர் தான் கடந்து வந்த மன உளைச்சல் பயணம் குறித்து பேசியிருக்கிறார். இவரது உடல் தோற்றம் குறித்து பலர் இவரை சிறு வயது முதலே கேலி செய்துள்ளதாக மனம் திறக்கிறார் இலியானா. இதனால் பாடி டிஸ்மார்ஃபிக் டிஸார்டர் எனப்படும் மனதுடன் தொடர்புடைய நோயினால் தான் பாதிக்கப்பட்டதாகவும் கூறும் இலியானாவிற்குள் தற்கொலை எண்ணங்களும் இருந்துள்ளதாக கூறுகிறார். இவ்வகையான மன அழுத்தத்திலிருந்து மீண்டு வர தனக்கு தெரப்பி மற்றும் நண்பர்களின் உதவி தேவைப்பட்டதாக கூறுகிறார். இப்படி தன்னைப் போல பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர் கூறுவது “உங்களை நீங்கள் முதலில் காதலியுங்கள்” என்றுதான்.
அமலா பால்:
மைனா படம் மூலம் கோலிவுட் ரசிகர்களுக்கு தெரிந்த முகமானார் அமலா பால். தனது முதல் படத்திலேயே முத்திரை பதிக்கும் அளவுக்கு நடிப்பை வெளிப்படுத்தியிருந்த அவர், மெல்ல மெல்ல உயர்ந்து இன்று முன்னனி நடிகைகளுள் ஒருவராக மாறியுள்ளார். 2017ஆம் ஆண்டில் தனது தந்தையை இழந்த அமலா பால், மன அழுத்தத்திற்கு ஆளானதாக தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார். தனது அம்மாவுடன் உள்ள புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ள அவர், பெற்றோரில் ஒருவரை இழக்கும் துக்கத்தை வார்த்தையினால் விவரிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார். மேலும், அப்பாவின் இறப்பு தன் வாழ்வில் மிகப்பெறிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என கூறியுள்ள அவர், அந்த நிகழ்விற்கடுத்து மன அழுத்ததுடன் போராடி மீண்டு வந்த பயணம் குறித்து எழுதியுள்ளார்.
கல்யாணி:
கோலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக நுழைந்து சீரியல் நடிகையாக மாறியவர் கல்யாணி. அள்ளி தந்த வானம் படத்தில் பிரபு தேவாவுடன் சென்னை பட்டனம் பாடலுக்கு ஆடி பிரபலாமானவர் இவர். பின்னாளில் அண்ணாமலை, பிரிவோம் சந்திப்போம் என பல சீரியல்களில் நடித்தார். தனது திருமணத்திற்கு பிறகு பெரிதாக திரையில் தலைகாட்டாமல் இருந்த இவர், மன அழுத்தம் குறித்து ஒரு வீடியோவில் பேசி வைரலானர்.
2014ஆம் ஆண்டில், கல்யாணியின் தாயார் டிப்ரெஷன் எனும் மன அழுத்தத்தினால் ஆட்கொள்ளப்பட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் அந்த முடிவை எடுப்பதற்கு 20 நிமிடங்களுக்கு முன்பு வரை கல்யாணியிடம் பேசியுள்ளார். அம்மாவின் இறப்பிற்கு பிறகு மிகுந்த மன அழுத்தத்திற்கு உண்டான கல்யாணி அதிலிருந்து மீண்டுவர பல ஹெல்ப்லைன் நம்பர்கலுக்கு ஃபோன் செய்துள்ளார். ஆனால், இவரது அழைப்புகளை யாருமே எடுக்கவில்லை என வேதனையுடன் தெரிவிக்கும் அவர், தன்னை போல மன அழுத்தத்துடன் போராடி வரும் பலருக்கு உதவும் வகையில் மன அழுத்தம் குறித்து பேசி வருகிறார்.
சமந்தா:
காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் கத்தீஜாவாக வந்து ரசிகர்களின் மனதை வருடிய சமந்தாவிற்குள்ளும் சொல்ல முடியாத அளவிற்கு மனக்குமுறல்கள் இருந்துள்ளது. 2017ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை கரம் பிடித்த அவர் அடுத்த 4 ஆண்டுகளிலேயே அவரிடமிருந்து விவாகரத்து பெறும் நிலை ஏற்பட்டது.
இதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தை சமாளிக்க தொடர்ந்து படங்களில் கமிட் ஆன அவர், இறுதியில் தனது காயம் பட்ட மனதை செல்ஃப் லவ்வினால் ஆற்றினார். இது குறித்து பேசியுள்ள அவர், மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள அனைவரும் மருத்துவ உதவியை நாட வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும், தனக்கு மன அழுத்ததில் இருந்து வெளிவர கவுன்சிலிங்கும் நண்பர்களும் உதவியதாக கூறுகிறார்.
மன அழுத்தம் என்பது ஒருவரால் தீர்க்க முடியாத நோயோ அல்லது, வரக்கூடாத நோயோ அல்ல. மன அழுத்தம் குறித்து நம் நாட்டில் பலரிடம் விழிப்புணர்வு இல்லாமல் உள்ளது. இதை, நம்மில் பலர் பெரிய விஷயமாக எடுத்துக்கொள்வதில்லை. மனிதர்களின் உடல் நிலை எல்லா நாளும் சீரான நிலையில் இருக்காது. அது போலத்தான் நம் அனைவரின் மன நிலையும். தகுந்த நேரத்தில் உரிய ஆலோசனைகளை எடுத்துக்கொண்டால் மன அழுத்தத்தை எதிர் கொள்ள முடியும்.