`கறுப்பின மக்கள் சினிமாவின் பிதாமகன்!’ - ஹாலிவுட் இயக்குநர் மெல்வின் வான் பீபிள்ஸ் மரணம்!
`கறுப்பின மக்கள் சினிமாவின் பிதாமகன்’ என்று போற்றப்படும் மெல்வின் வான் பீபிள்ஸ் நியூயார்க் நகரத்தின் மான்ஹாட்டன் பகுதியில் காலமானார். அவருக்கு வயது 89.
நடிகர், நாடக இயக்குநர், திரைப்பட இயக்குநர், நாவல் எழுத்தாளர், இசையமைப்பாளர் என பன்முகத் திறமைகொண்ட மெல்வின் வான் பீபிள்ஸ் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தின் மான்ஹாட்டன் பகுதியில் காலமானார். `கறுப்பின மக்கள் சினிமாவின் பிதாமகன்’ என்று போற்றப்படும் மெல்வின் வான் பீபிள்ஸ் இறந்த போது, அவருக்கு வயது 89.
1971ஆம் ஆண்டு, மெல்வின் இயக்கிய 'Sweet Sweetback's Baadasssss Song' அவரைத் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியது. இன்றுவரை அதிக லாபம் ஈட்டிய சுயாதீனத் திரைப்படமாகக் கருதப்படும் இந்தத் திரைப்படம், blaxploitation என்ற புதிய சினிமா அரசியலை அறிமுகப்படுத்தியது. Blaxploitation என்பது கறுப்பின மக்களின் வாழ்வியலை வணிக நோக்கத்திற்காக, சினிமாவாகவும், பிற படைப்புகளுக்காகவும் பயன்படுத்திக் கொள்வதை விமர்சிக்கும் சொல். மெல்வின் முன்வைத்த அரசியல் இன்றுவரை அமெரிக்க சினிமாவில் பேசப்படுகிறது.
`கறுப்பின மக்களின் முகங்களும் படங்களும் மதிப்புமிக்கவை என்பது அப்பாவுக்குத் தெரியும். ஒரு புகைப்படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு ஒப்பானது என்றால், ஒரு திரைப்படம் எவ்வளவு மதிப்புகொண்டது? நாம் வெற்றிபெற வேண்டும் என்றால், நாங்கள் சுதந்திரமாக இருக்கிறோம் என்பதை உணர வேண்டும். உண்மையான சுதந்திரம் என்பது நம்மை அடிமைப்படுத்துபவனின் மனவோட்டத்தைப் பிரதிபலிப்பது அல்ல. அனைத்து மக்களின் ஆற்றல், அழகு, தொடர்பு முதலானவற்றைப் பாராட்டுவதே அதற்கான வழி’ என்று மெல்வின் மகன் மேரியோ வான் பீபிள்ஸ் தெரிவித்துள்ளார். இவரும் திரைப்பட இயக்குநராகவும், நடிகராகவும் பணியாற்றி வருகிறார்.
1957ஆம் ஆண்டு, தனது முதல் புத்தகமான `The Big Heart' என்ற நாவலின் மூலமாக கலைத்துறைக்கு அறிமுகமானார் மெல்வின் வான் பீபிள்ஸ். சில ஆண்டுகளில், எழுதுவதில் இருந்து திரைப்படங்கள் இயக்குவதற்கு நகர்ந்தார். ஐரோப்பாவிற்குச் சென்ற மெல்வின், சில ஆண்டுகள் பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்துள்ளார். அங்கு அவர் 'Les Cinq Cent Balles' என்ற குறும்படத்தை இயக்கியதோடு, பிரான்ஸ் அப்சர்வாச்சூர் என்ற பத்திரிகையில் புலனாய்வுப் பத்திரிகையாளராகப் பணியாற்றினார். அதில் இருந்து அங்குள்ள `ஹரா கிரி’ என்ற பத்திரிகையில் எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார் மெல்வி. 1965ஆம் ஆண்டில், `Mad' பத்திரிகையின் பிரென்ச் மொழிப் பதிப்பின் தலைமைச் செய்தி ஆசிரியராகவும் பணியாற்றினார்.
அதன்பிறகு அவர் இயக்கிய 'The Story of a Three-Day Pass' என்ற திரைப்படம் அமெரிக்கத் திரைப்பட விழாக்களில் பாராட்டுகளைப் பெற்றது. தொடர்ந்து அவர் 'Watermelon Man’ என்ற தலைப்பில் இயக்கிய திரைப்படம் ஹாலிவுட்டில் அவருக்கான இடத்தைப் பெற்றுக் கொடுத்தது.
மெல்வின் முன்வைத்த திரைப்பட அரசியல் தொடர்ந்து பல கறுப்பின இயக்குநர்களாலும், நடிகர்களாலும் முன்வைக்கப்பட்டது. `கறுப்பின மக்கள் சினிமாவின் பிதாமகன்’ என்று போற்றப்பட்ட அவரது மறைவிற்கு ஹாலிவுட் பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இன்றைய முக்கியச் செய்திகள் இதோ:
வேலூர் மாவட்டத்தில் வெற்றி பெறப்போவது யார்?
கோயில் நிலத்தில் கிஷ்கிந்தா தீம் பார்க்?
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது தடியடி
அழகுக்கு அப்பாலும் ஜொலித்தவர் சில்க்!
மாலையில் சஸ்பெண்ட்... இரவில் ரத்து... ஆசிரியை மகாலட்சுமிக்கு நடந்தது என்ன?
மேல்மருவத்தூர் பங்காரூஅடிகளார் மனைவிக்கு இவ்வளவு சொத்தா?