Gopi Nainar: பெரிய ஹீரோக்கள் என்னை கண்டுகொள்வதில்லை.. இயக்குநர் கோபி நயினார் வேதனை!
பெரிய நடிகர்கள் தன்னை கண்டுகொள்வதில்லை என்றும், நடிகைகள் தான் தனக்கு வாய்ப்பு தருகிறார்கள் என்று இயக்குநர் கோபி நயினார் கூறியுள்ளார்
கோபி நயினார்
கடந்த 2017 ஆம் ஆண்டு நயன்தாரா நடித்த அறம் படத்தை இயக்கியவர் கோபி நயினார். தண்ணீர் பிரச்சினையையும், மூடப்படாத ஆழ்துளை கிணற்றை மூடாமல் விடுவதால் ஏற்படும் ஆபத்தையும் பற்றி விளக்கிய அப்படம் மிகப்பெரிய அளவில் பாராட்டைப் பெற்றது. முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான கத்தி படத்தின் கதை தன்னுடையது என்று கோபி நயினார் கூறியது தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் அவருக்கு ஆதரவுக் குரல்களும் எழுந்தன.
மனுசி
முதல் படம் மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையிலும் கோபி நயினார் அடுத்தடுத்த படங்களை இயக்காதது ஏன் என்கிற கேள்வி ரசிகர்களிடம் இருந்து வந்தது. தற்போது கிட்டதட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு தனது அடுத்தப் படத்தின் டீசரை வெளியிடுள்ளார் கோபி நயினார். ஆண்ட்ரியா நாயகியாக நடித்துள்ள இந்த படத்திற்கு மனுசி என்று டைட்டில் வைக்கப் பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டீசர் , டீசரில் இடம்பெற்ற வசனங்கள் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தின் டீசரைப் பார்த்து விடுதலை சிறுத்தைக் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் கோபி நயினாரை சமீபத்தில் பாராட்டி பேசியிருந்தார்
Curious about #Manushi movie? Hear what Thol. Thirumavalavan has to say about it! Get ready for the trailer launch at 6 PM!@thirumaofficial @andrea_jeremiah @GopiNainar @ilaiyaraaja #VetriMaaran @actornasser #Tamizh #HakkimShah #BalajiSakthivel pic.twitter.com/JlibhM2sSq
— Divo (@divomovies) April 17, 2024
மனுசி படம் தவிர்த்து ஜெய் நடிப்பில் கருப்பர் நகரம் என்கிற படத்தையும் கோபி நயினார் இயக்கியுள்ளார். வடசென்னையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகி இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
வெற்றிப்படம் ஒன்றை இயக்கியபோதும் முன்னணி நடிகர்களை ஏன் இயக்கவில்லை என்கிற கேள்விக்கும் கோபி நயினார் பேட்டி ஒன்றில் பதிலளித்துள்ளார்.
முன்னணி நடிகர்கள் கண்டுகொள்வதில்லை
இந்த பேட்டியில் அவர் “ முன்னணி நடிகர்கள் யாரும் என்னை கண்டுகொள்வதில்லை. நடிகைகள் தான் எனக்கு வாய்ப்பு தருகிறார்கள். சினிமாவில் நல்ல கதைகளை கொண்டு நல்ல படங்களை இயக்குபவர்களை ஹீரோக்கள் அழைத்து கதை கேட்பதில்லை. ஆனால் யாரை வளர்த்துவிட வேண்டும் என்கிற நோக்கத்தில் தான் சினிமா இங்கு இயங்கிக் கொண்டிருக்கிறது.
அறம் படத்தின் கதையைக் கேட்டதும் ஒரு குழந்தையை மீட்க இங்கு எந்த விதமான தொழில் நுட்பமும் இல்லை என்பதை கேட்டதும் படத்தில் நடிக்க உடனே நயன்தாரா சம்மதித்துவிட்டார். அதேபோல் மனுசி படத்தின் கதையைக் கேட்டதும் ஆண்ட்ரியாவும் உடனே ஒகே சொல்லிவிட்டார்” என்று கோபி நயினார் பேசியுள்ளார்