7 Years Of Aandavan Kattalai : வாழ்க்கை ஒரு ஒட்டகம்... 7 ஆண்டுகளை நிறைவுசெய்யும் ஆண்டவன் கட்டளை
சென்னையில் கல்யாணம் ஆகாத ஆண்கள் வீடு தேடும்போது எதிர்கொள்ளும் அவமானங்களை அவர்களின் கோபத்தை பிரதிபலிக்கும் மிகச் சிறந்த காட்சிகளில் ஒன்றை இந்தப் படத்தில் மணிகண்டன் எழுதியிருக்கிறார்
இயக்குநர் எம் மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி , ரித்திகா சிங், யோகி பாபு உள்ளிட்டவர்கள் நடித்த ஆண்டவன் கட்டளை திரைப்படம் வெளியாகி இன்றுடன் 7 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
ஆண்டவன் கட்டளை
போலியான பாஸ்போர்ட்டில் வெளிநாடு சென்று அங்கு வேலை செய்து தனது கடன்களை எல்லாம் தீர்த்துவிட வேண்டும் என்கிற நோக்கத்தில் சென்னை வந்து சேர்கிறார்கள் காந்தி ( விஜய் சேதுபதி ) மற்றும் முத்துப்பாண்டி (யோகிபாபு ). திருமணம் ஆனவர்களுக்கு பாஸ்போர்ட் எளிதில் கிடைக்கும் என்பதால் கார்மேகக் குழலி என்கிற கற்பனை பெயரை தனது மனைவியான பெயர் என்று குறிப்பிட்டு பாஸ்போர்ட் பெறுகிறார் காந்தி. இறுதியில் அவரது விசா மறுக்கப்பட வேறு வழியில்லாமல் சென்னையில் இருக்கும் ஒரு நாடகக்குழுவில் சேர்ந்து வேலை செய்கிறார்.
தனது வேலையில் பாராட்டுக்களைப் பெறும் காந்தி தனது நாடகக் குழுவுடன் வெளிநாட்டிற்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் இதற்கு பிரச்னையாக இருப்பது, கற்பனையாக உருவாக்கிய மனைவியின் பெயரை தனது பாஸ்போர்ட்டில் இருந்து நீக்கவேண்டும் என்பதுதான். அதற்கு இருக்கும் ஒரே வழி இல்லாத தனது மனைவியிடம் இருந்து காந்தி விவாகரத்து பெற வேண்டும். கார்மேகக்குழலி என்கிற பெயர் வைத்த ஒரு பெண்ணை (ரித்திகா சிங்) கண்டுபிடிக்கிறார். அவருக்கு தன் நிலைமை எடுத்துச்சொல்லி தனக்கு உதவி செய்யச் சொல்லிக் கேட்கிறார். இந்த பிரச்னைகளில் இருந்து காந்தி எப்படி வெளியேவருகிறார் என்பதே ஆண்டவன் கட்டளைப் படத்தின் கதை.
சின்ன ஊர்களில் இருந்து சென்னை மாதிரியான நகரங்களுக்கு பல காரணங்களுக்காக மக்கள் தொடர்ச்சியாக வந்துகொண்டுதான் இருக்கிறார்கள். இதில் சில மக்களுக்கு தங்களது சொந்த ஊர்களில் சொல்லிக் கொள்ளும் படி எந்த உடைமையும் இருப்பதில்லை. தங்களது கிராமங்களில் இருக்கும் சமூக கட்டுப்பாடுகள், சாதிய பழக்கவழக்கங்கள் என எல்லாவிதமான ஒடுக்கு முறைகளில் இருந்து ஒரு சின்ன விடுதலை என சுவாசிக்கும் இடமாக நகரங்கள் இருக்கின்றன. அதே நேரத்தில் தங்களுடைய சொந்த ஊர்களில் எல்லா வளங்கள் இருந்தும், போதுமான படிப்பு இருந்தும் நகரத்தின் மீது பெரிய மோகம் எதுவும் இல்லாத மக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த தரப்பிற்கு அதிகபட்சம் தேவைப்படுவது தங்கள் சொந்த ஊர்களில் பிழைப்பை நடத்திக் கொள்வதற்கான ஒரு சிறு கட்டமைப்பே.
அப்படியான சின்ன வசதிகள் கூட செய்துதரப்படாமல் வேறு வழியில்லாமல் தங்களது ஊரை , சொந்தங்களை, நிலத்தை விட்டு தெரியாத இந்த ஊர்களில் பல்வேறு தரப்பினரால் தங்களது சுயலாபத்திற்காக சுரண்டப்பட்டு இந்த பொது ஓட்டத்தில் தானும் ஓடவேண்டிய காட்டாயத்தில் சிக்கித் தவித்து தங்களுக்கு என இருக்கும் சின்ன சின்ன நியாயங்களை கொன்று எந்த நகரத்தை வெறுத்து திட்டுகிறோமோ, அதே நகரவாசியாய் புதிதாக வரக்கூடிய ஒருவனை வரவேற்கிறோம்.
சென்னையில் கல்யாணம் ஆகாத ஆண்கள் வீடு தேடும் போது எதிர்கொள்ளும் அவமானங்களை அவர்களின் கோபத்தை பிரதிபலிக்கும் மிகச் சிறந்த காட்சிகளில் ஒன்றை இந்தப் படத்தில் மணிகண்டன் எழுதியிருக்கிறார்.