போதை மருந்து உட்கொண்ட நடிகர்களை கையாள்வது மோசமான கனவு போன்றது... கேரள பெண் தயாரிப்பாளர் வேதனை!
”இந்த மருந்துகளை உட்கொள்பவர்கள் இரவில் தூங்க மாட்டார்கள், அதனால் அவர்கள் படப்பிடிப்புக்கு எப்போதும் தாமதமாகவே வருகிறார்கள். இவர்களை கையாள்வது ஒரு மோசமான கனவு போன்றது”
கேரள திரையுலகில் போதைப் பொருள்கள் பழக்கம் பரவலாக இருப்பதாக பிரபல பெண் தயாரிப்பாளர் ஒப்புக்கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கும்பளாங்கி நைட்ஸ், இஷ்க் உள்ளிட்ட மலையாளப் படங்களில் நடித்து பிரபலமானவர் வளர்ந்து வரும் நடிகரான ஷேன் நிகம். அதேபோல் வைரஸ் கப்பேல்லா, பீஷ்ம பரவம், கும்பளங்லி நைட்ஸ் போன்ற பட திரைப்படங்களில் கடந்த 10 ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க நடிகராக வளர்ந்துள்ளவர் ஸ்ரீநாத் பாஸி.
இவர்கள் இருவரும் போதைக்கு அடிமையானதாகவும் இவர்களால் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இவர்கள் இருவருக்கும் இனி ஒத்துழைக்க முடியாது எனவும் சென்ற மாத இறுதியில் மலையாளத் திரைப்பட உலகம் அறிவித்தது கேரள சினிமா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
மேலும், ஸ்ரீநாத் பாசி வேண்டுமென்றே பல படங்களுக்கு ஒரே தேதிகளைக் கொடுத்ததாகவும், இதனால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இதுகுறித்து கடந்த சில வாரங்களாக கேரள திரையுலகில் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், கேரள திரையுலகில் போதைப்பொருள் பழக்கம் பரவலாக இருந்து வருவதாக பிரபல மலையாள தயாரிப்பாளர் சாண்ட்ரா தாமஸ் தெரிவித்துள்ளார். ஃபஹத் ஃபாசில் நடித்த ஃப்ரைடே, ஆமென், மோகன் லால் நடித்த பெருச்சாளி ஆகிய படங்களைத் தயாரித்தவர் சாண்ட்ரா தாமஸ்.
முன்னதாக தனியார் ஊடகத்துக்கு பேட்டி அளித்த சாண்ட்ரா தாமஸ் பேசியதாவது: "மலையாளத் திரையுலகில் போதைப்பொருள் பயன்பாடு அதிகமாக உள்ளது என்பது உண்மைதான். அதைக் கட்டுப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஏனெனில் அது தொடர்பான பிரச்சனைகள் ஏராளம்.
இந்த மருந்துகளை உட்கொள்பவர்கள் இரவில் தூங்க மாட்டார்கள். அதனால் அவர்கள் படப்பிடிப்புக்கு எப்போதும் தாமதமாகவே வருகிறார்கள்.அவர்கள் எப்போது நிதானமாக இருப்பார்கள் என்பதும் தெரியாது.அவர்கள் நம் அறிவுரைகளுக்கு தலையசைப்பார்கள், ஆனால் எதையும் கேட்க மாட்டார்கள். நேரத்தையும் தேதியையும் மறந்துவிடுவார்கள். ஒரு நாளின் முடிவில், இதனால் பாதிக்கப்படுவது தயாரிப்பாளர்தான்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “ஒத்துழைக்காத நடிகர்களைக் கையாள்வது ஒரு மோசமான கனவு போன்றது. நடிகர்களை பணியமர்த்தும்போது, முதலில் அவர்களுக்கு ஸ்கிரிப்டை அனுப்புவோம். ஸ்கிரிப்டைப் படித்த பிறகு அவர்கள் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்க ஒப்புக்கொள்கிறார்கள், இல்லையா? எனவே படப்பிடிப்பின் போது எந்த மாற்றங்களையும் ஆர்டர் செய்வது பற்றி எந்தக் கேள்வியும் இல்லை. ஆனால் ஷேன் நிகாமின் விஷயத்தில், எடிட் செய்யப்பட்ட காட்சிகளை சரிபார்க்க அவர் கோரியதில் என்ன தவறு என்று எனக்குத் தெரியவில்லை.
அவர் இதனை முயற்சித்தபோதுதான் பிரச்சனை ஏற்பட்டது. எனக்குத் தெரிந்தவரை, ஷேன் நிகம் அல்லது ஸ்ரீநாத் பாசி ஆகியோரின் படங்கள் திரையரங்குகளில் வெளியிடப்படுவதில்லை என்பதை உறுதிசெய்து ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ளது. சினிமா என்பது இறுதியில் ஒரு வியாபாரம். மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக என்னால் என்னை சிக்கலில் ஆழ்த்த முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.